துக்கச் சுழலையைச் சூழ்ந்து கிடந்த வலையை அறப்பறித்து, புக்கினில் புக்குன்னைக் கண்டு கொண்டேன் இனிப் போக விடுவதுண்டே, மக்கள் அறுவரைக் கல்லிடை மோத இழந்தவள் தன் வயிற்றில், சிக்கென வந்து பிறந்து நின்றாய் திருமாலிருஞ்சோலை யெந்தாய்.
முன்பு சொன்ன பதிகங்களில், நம்மாழ்வார் திருவாய்மொழியில், ‘திருமாலரின்சோலை மலை என்றே என்ன‘ (திருவாய்மொழி 10.8.1) என்ற பாடலிலும், ‘சூழ் விசும்பு அணி முகில்‘ (திருவாய்மொழி 10.9.1) என்ற பாடலிலும் சொன்ன அர்த்தங்களை சொன்னார். ‘முனியே நான்முகனே‘ என்ற பதிகத்தில், ‘முதல் தனி வித்தேயோ. முழு மூவுலகாதிக்கு எல்லாம்‘ (திருவாய்மொழி 10.10.9) சொன்ன அர்த்தத்தை இந்த பதிகத்தில் சொல்கிறார். “சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவில் பெரும் பாழேயோ” (திருவாய்மொழி 10.10.10) என்ற பத்தாம் பாட்டின் அர்த்தத்தை அடுத்த பதிகத்தில் சொல்கிறார். அரவத்து அமளியோடும் (பெரியாழ்வார் திருமொழி 5.2.10) என்று தன்னுடைய உடம்பினில் வந்து புகுந்த பின்னர், இனி போகவிடமாட்டேன் (இனி நான் போகலொட்டேன் திருவாய்மொழி 10.10.1) என்கிறார். கீழ் பதிகத்தில் நெய் குடத்தை பற்றி, என்றும் நோய்க்காள் என்றும் அநிஷ்ட நிவருத்தியை சொன்ன ஆழ்வார் இந்த பதிகத்தில் இஷ்ட பிரார்த்தியை செய்து தர வேண்டும் என்று திருவாணை இட்டு எம்பெருமான் தன் உள்ளத்தைவிட்டு செல்லாமல் தடுக்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 5.3.1
இதற்கு முன் பிறந்த ஆறு பிள்ளைகளையும் கல்லிலே மோதி முடிக்க இழந்த தேவகி பிராட்டி வயிற்றுலே சடக்கென வந்து அவதரித்து நின்றவனாய் , திருமாலிருஞ்சோலை மலையில் எழுந்து அருளி இருக்கிற என் ஸ்வாமியானவனே , சூழல் ஆறு போல வளைய வளைய வருகின்ற துன்பத்தை சுற்றிக் கொண்டு இருக்கிற சரீரத்தை முழுவதும் போக்கி , புகும் இடங்களில் எல்லாம் புகுந்து உன்னை கண்ணாரக் கண்டேன் ; இனிமேல் போக விடுவேனா என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
சுழலை என்று சொன்னது, சுழன்று சுழன்று வருகிற ஆறு. துக்கங்கள் இந்த சரீரத்தைச் சூழ வளைந்து கொண்டு இருப்பதனால், அவற்றைச் சுழலாக உருவகப்படுத்தினார். வலை என்கிறது, தப்ப முடியாததை சொல்கிறது. ‘துக்கச் சுழலை’ என்று கொண்டு, துக்கங்கள் சுழல்வதற்கு இடமான ஆத்மாவை சொல்வதாயிற்று. வியாதிகளுக்கு எல்லாம் கொள் கலம் ஆனது சரீரம். ‘நோயெலாம் பெய்ததோர் ஆக்கையை‘(பெரிய திருமொழி 9.7.7) என்று நோய் எல்லாம் சேர்ந்து உருவாகின தேகம் என்று திருமங்கையாழ்வாரும் அருளினார் அன்றோ. திருமாலை (4)ல் ‘மொய்த்த வல்வினையுள் நின்று‘, அதாவது, சுற்றி உள்ள துக்கங்கள் அனைத்தையும் என்று அருளியதும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது . துக்கமாவது, தாயே நோய், தந்தையே நோய், தாரமே நோய், கிளையை நோய், மக்களே நோய் என்று சொல்பவர்கள் இவர்கள்.
பரத்துவம், அந்தர்யாமித்துவம், வியூஹம், விபவம், அர்ச்சாவதாரம் என்ற ஐந்து நிலைகளில் சொல்லப்படுவனாகவும், உன்னுடைய பிரவேசம் உள்ளனவாக உள்ள இடங்களில் எல்லாம் உன்னை ஸேவித்து, பல வகை துன்பங்களுக்கு இடமான இந்த சரீரத்தில் விருப்பை ஒழித்துக் கொண்ட அடியேன், இனி ஒரு நொடிப் பொழுதும் உன்னை விட்டு அகலகில்லேன் என்கிறார்.
வலையாவது மணியும் கயிரும் கொண்டது. அதுபோல நரம்பும் எழும்பும் ஆக இருப்பது இந்த சரீரம். அதே போல ஆத்மாவை சுற்றி கொண்டு இருக்கின்ற அவித்யா, கர்மவாசனா போன்ற ருசிகள் ஆகும். வலை என்று சொன்னதால், ஒன்றுக்கொன்று காரண காரியங்களாக இருப்பதால் ஆகும்.
அறப்பறித்து என்று சொன்னது அநிஷ்ட நிவர்த்தி, (தேவையற்றவற்றை களைவது), கண்டு கொண்டேன் என்று சொன்னது இஷ்ட பிரார்த்தி (தேவையானவைகளை வேண்டுவது). உன்னாலே (உன்னை) பெற்ற நான், என்னாலே இழப்பேனோ என்கிறார். தேவகி இழந்த இழப்பு தீர, எட்டாவது குழந்தையாக அவளுக்கே வந்து பிறந்தான். தேவகி வயிற்றில் அவதரித்தது போல, ஆழ்வாருக்கு திருமாலரிஞ்சோலையில் எம்பெருமான் எழுந்தருளி இருப்பது என்கிறார்.
உனக்கு முன்பிருந்த ஆறு பிள்ளைகளையும், கம்ஸனானவன் கல்லில் மோதி முடிக்க, அதனால் அந்த மக்கள் அறுவரையும் இழந்தவளான தேவகியினுடைய திருவயற்றில் சட்டு என்று திருவவதரித்து அருளினவனே, எல்லார்க்கும் எளியவனும்படி திருமாலிருஞ்சோலையில் எழுந்து அருளியிருக்கிற எம்பெருமானே, நீ புகுந்த இடங்களில் எல்லாம் நானும் புகுந்து உன்னை சேவித்து, துக்கங்களாகிற சுழலாற்றைச் சுற்று மதிளாகக் கொண்டிருக்கிற வலை போன்ற சரீரத்தில் ஆசையை அறவே போக்கிக் கொண்ட அடியேன், உன்னை கஷ்டப்பட்டு பெற்ற பின்பு, உன்னை வேறு இடத்திற்கு போகும் படி விடுவது உண்டோ என்று கேட்டு முடிக்கிறார்.
தேவகியின் திருவயிற்றில் அவதரித்து அடியவர்கள் சொல்லுக்கு கட்டுப்பட்டு இருக்கும் ஆச்ரய பாரதந்திரம் காட்டியது ; இங்கே திருமாலிரிஞ்சோலையில் ஸ்வாமித்தவம் காட்டுவதை சொல்கிறார். தேவகியின் திருவயிற்றில் இருந்தது போல் இருப்பே ‘பீடுறை கோயிலில் ‘ (திருவாய்மொழி 2.10.4) அழகர் எழுந்தருளி இருந்த இருப்பும் இவர்க்கு என்கிறார்.
Leave a comment