திவ்ய பிரபந்தம்

Home

5.2.9 உறகல் உறகல் உறகல்

பெரியாழ்வார் திருமொழி 5.2.9

அழகியதாய் ஜோதிஸை உடைய திருவாழிஆழ்வானே, ஸ்ரீ பாஞ்சஜந்யாழ்வானே, சத்ருக்கள் உடல் அறும்படி எறிகிற ஸ்ரீ நந்தகம் என்கிற திருக்குற்று உடைவாளே, அழகிய சார்ங்கமே , ஸ்ரீ கதையே, ஈஸ்வரன் வைக்க இருக்குமவர்களாய் அஷ்ட திக் பாலகர்களே, தப்பாமல் உறங்காதே , உறங்காதே , உறங்காதே இருங்கள் ; பக்ஷிராஜனே , உறங்காதே இரும் ; நீங்கள் எல்லோரும் அவனுடைய திருப்பள்ளி முறையான என்சரீரத்தை குறிக்கொண்டு நோக்குங்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த ஆழ்வார் மற்றை ஆழ்வார்களைப் போலன்றி, ‘எம்பெருமானுக்கு என்ன வருகிறதோ’ என்றும், இது வரை தம்மை எம்பெருமானால் காக்கப்பட்டவராக சொல்லி வந்தவர், அவனுக்கும் இந்த பாட்டில் காவல் தேடுகிறார். எம்பெருமானுடைய திவ்ய ஆயுதங்களையும், அஷ்ட திக் பாலகர்களையும், வாகனங்களையும் அழைத்து, நீங்கள் எல்லாருமாகச் சேர்ந்து, உறங்காமல் கண் விழித்துக் கொண்டிருந்து, எம்பெருமானுடைய படுக்கை அறையை நோக்கிக் கொண்டிருங்கள் என்கிறார்.

உறகல் என்பது உறங்க வேண்டாம் என்ற பொருளில் வருகிறது. ‘உறகல் உறகல் உறகல்’ என்ற அடுக்குத் தொடர், அச்சம் காரணம் சொல்லப் பட்டது. மற்றும் அவரால் புத்தியில் இறுத்தி நோக்குவதற்காக மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். ஆழ்வார் உறங்காமல் காத்து இருங்கள் என்று சொன்னது, கண் இமைகள் மூடாமல் எம்பெருமானை காத்து இருக்கும் நித்யசூரிகளை பார்த்து சொல்கிறார். ‘இறவுபடாமல் உறகல்’ என்று சொல்லும்போது, ‘இறவுபடாமல் இருந்த’ என்ற அடைமொழி கூறி, என்றும் இறவாமல் வாழ்கின்ற என்ற பொருளும் கொள்ளலாம்.

இந்த பஞ்ச ஆயுதங்களும் இருந்த இடத்தில் இருந்து நகராமல் எம்பெருமானை காத்திடுங்கள் என்றும், லோக பாலகர்கள் எட்டு திக்கும் காத்திடுங்கள் என்றும், ஓரிடத்தில் நில்லாமல் எங்கும் பறந்து வியாபித்து இருக்கும் கருட ஆழ்வானையும் எம்பெருமானை காக்கும்படி கேட்டுக்கொள்கிறார். ‘நீண்ட அசுரர் உயிரெல்லாம், தகர்த்து உண்டு உழலும் புள்‘ (திருவாய்மொழி 8.10.6)ல் அருளியபடி, பருத்த அசுரர்களின் உயிரை மாய்த்து அதனையே தொழிலாக வாழும் பறவை என்று சொன்னதை இங்கே நினைவில் கொள்ளலாம்.

அழகிய தேஜஸ்ஸையுடைய திருவாழியாழ்வானே, நந்தகம் என்கிற வாளினை உடையவனே. அழகு பொருந்திய சாரங்கம் என்ற வில்லினை உடையவனே, கௌமோதகி என்கிற கதாயுதமே, ஸ்ரீபாஞ்சசன்ய ஆழ்வானே என்றும், அஷ்ட திக்குப் பாலகர்களே என்றும், பறவைகளுக்குத் தலைவனான பெரிய திருவடியே என்றும் அழைத்து நீங்கள் எல்லாரும் விழித்துக் கொண்டிருந்து, எம்பெருமானுக்குத் திருப்பள்ளி அறையாகிய என் சரீரத்தை குறி வைத்து பார்த்துகொண்டு இருங்கள் என்று வேண்டுகிறார்.

சாரங்கத்திற்கு அழகாவது ஈஸ்வரன் ஒருமுறை நோக்கினால் ‘சார்ங்கமுதைத்த சரமழை போல்'(திருப்பாவை, 4) சரமாக அம்புமழை பொழிவது என்கிறார் .

Leave a comment