ஏதங்களாயின வெல்லாம் இறங்கலிடுவித்து என்னுள்ளே, * பீதக வாடைப் பிரானார் பிரம குருவாகி வந்து, * போதில் கமல வன் னெஞ்சம் புகுந்தும் என் சென்னித் திடரில், * பாத விலச்சினை வைத்தார் பண்டன்று பட்டினம் காப்பே.
பெரியாழ்வார் திருமொழி 5.2.8
சென்ற பாட்டில் மாதர் கயற்கண்ணில் பட்டு வீழ்ந்ததில் இருந்து மீட்டது, (திருமாலை 16) அவர் வடிவழகு என்றார், இந்த பாட்டில் ஐயப்பாடு அறுத்ததும் (திருமாலை 15) அவன் வடிவழகு என்கிறார். மேலும், ‘இரா பகல் ஒது வித்தது’, (பெரியாழ்வார் திருமொழி 5.2.3) சாஸ்திரம் கொண்டா, ஈஸ்வரன் முகம் கொண்டா அல்லது ஆச்சார்யன் முகம் கொண்டா என்று கேட்டு, ஆச்சார்யன் முகத்தால் என்று சொல்கிறார்.
திருப்பீதாம்பரத்தை உடைய சர்வேஸ்வரன் பிரம்மோபதேச ஆச்சார்யனாக வந்து அறிவுக்கு இருப்பிடமாய் உள்ளிருப்பவனை அறிய முடியாத வலிமையை உடையவனாக இருதயம் ஆகிற தாமரை மலரிலே புகுந்தும், என்னுடைய மனத்தில் உள்ள தேக ஆத்ம ப்ரமாதி தோஷங்களையெல்லாம் போக்கி என்னுடைய தலையில் திருவடிகளாகிற முத்திரையை வைத்து அருளினான் ; இது பழைய ஆத்மா மற்றும் தேகம் அன்று , எம்பெருமானால் காப்பாற்றப் படுவதாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
ஏதங்கள் என்றால், குற்றம். ஏதங்கள் எல்லாம் என்று இங்கே குறிப்பிடப் படுபவை, தேஹாத்மாபிமானம், ஸ்வாதந்திரியபுத்தி, எம்பெருமான் தவிர வேறு ஒருவருக்கு அடிமையாக இருப்பது, தானே தன்னை காத்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையும், தன்னுடைய உலக இன்பப் பயன்களுக்காக கார்யங்கள் செய்வதும் போன்ற மன குற்றங்களை ஆகும்.
ஸர்வேஸ்வரத்வத்திற்கும், புருஷோத்தமவத்திற்கும் இலக்கணமாகிய திருப்பீதாம்பரத்தைத் திருவரையில் அணிந்துள்ள ஸர்வேஸ்வரன் ஞானோபதேசம் பண்ணுகின்ற ஆசார்யனாக என் நெஞ்சினுள் வந்து புகுந்து, என்னுடைய மனக்குற்றங்களை ஒழித்து, அந்த அளவில் மட்டும் திருப்தி அடையாமல், தனது திருவடிகளின் முத்திரை (இலச்சினை) படும்படி, என் தலை மேல் வைத்தான். இவ்வாறு அதிக அளவில் உபகாரம் பண்ணி அருளினவன் ஆதலால், இந்த ஆத்மா முன்பு போலன்றி, இப்போது குறைவற்ற காப்பை அடைந்து விட்டது என்கிறார்.
இறங்கலிடுவித்து என்பது தான் இருந்த இடத்தில் இருந்து இறங்கச் செய்து என்பதாகும். பிரமகுரு என்பது, பிரமம் என்ற ஞானத்தைச் சொல்லுகிறது.
பாதவிலச்சினை வைத்தார் என்பது தோளுக்குத் திருவாழியில் இலச்சினை இட்டது போலத் தலைக்குத் திருவடியால் இலச்சினை இட்டான் என்கிறார். இனி, திருவாழி இலச்சினை தலையிலும் உண்டு என்கிறார். ‘ஒரு காலில் சங்கு ஓரு காலில் சக்கரம் உள்ளடி பொறித்து அமைந்த , இருகாலும் கொண்டு அங்கு அங்கு எழுதினால் போல இலச்சினை பட நடந்து” (பெரியாழ்வார் திருமொழி 1.8.6) என்றதும் அறியத்தக்கது.
ஈஸ்வரனுக்கும் ஜீவாத்மாவிற்கும் பிரிவு என்பது எப்போதும் கிடையாது என்று இருக்கும்போது, பிரிந்தான் என்று செய்வது ஞானம் இன்மையால் என்றும், அந்த ஞானம் இல்லாதபோது அதனை அடையச்செய்வதும் ஈஸ்வரனாக இல்லாமல், ஆசார்யனாக வந்து புகுந்து உபதேசிக்கிறார் என்று உரையாசிரியர் கூறுகிறார். இவன் செய்யும் காரியங்கள் நல்ல பயன்களை கொடுக்காமல் தீய பலன்களை கொடுத்தாலும் அவற்றை மாற்றி நல்ல பலனை நோக்கி அழைத்துச் செல்வதால் இது உபதேசம் ஆகிறது. ஒத்தார் மிக்காரை இலையாய மாமாய, திருவாய்மொழி (2.3.2)ல் தனக்கு சம்மானவர்களோ மேற்பட்டவர்களோ இல்லாத பெரிய ஆச்சர்யமான குணங்களை உடைய எம்பெருமான், ஆச்சார்யனாக இருந்து எனக்கு அறியாதன அறிவித்தான் என்று சொல்வது என்பது இங்கு மேற்கோளோகச் சொல்லப்பட்டது .
‘நீள்கழல் சென்னி பொருமே.’ (திருவாய்மொழி 1.9.11) என்று சுவாமி நம்மாழ்வார் கூறியது போல் என் சென்னித் திடரில், * பாத விலச்சினை வைத்தார் என்கிறார்.
Leave a comment