கொங்கைச் சிறுவரை என்னும் பொதும்பினில் வீழ்ந்து வழுக்கி, * அங்கோர் முழையினில் புக்கிட்டு அழுந்திக் கிடந்து உழல்வேனை, * வங்கக் கடல் வண்ணன் அம்மான் வல்வினை யாயின மாற்றி, * பங்கப் படா வண்ணம் செய்தான் பண்டன்று பட்டினம் காப்பே.
பெரியாழ்வார் திருமொழி 5.2.7
முலைகள் இருக்கும்படியே என்றும், சிறிய இடை இருக்கும்படியே என்றும் கொண்டாடி அல்குல் ஆகிற ஒரு குழியில் வழுக்கி விழுந்து அதனாலே , ஒப்பற்ற நரகத்திலே புகுந்து அவ்விடத்தில் அழுந்தி இருந்து சஞ்சரிக்கக்கூடிய என்னை , மரக்கலங்கள் உலவுகின்ற கடல் போன்ற திருநிறத்தை உடைய எம்பெருமான் கொடூரமான கர்மங்களாக இருக்குமவற்றை போக்கி அடியேன் அவமானப்படாதபடி செய்தான் ; இது பழைய ஆத்மா மற்றும் தேகம் இல்லை ; எம்பெருமானால் காக்கப்படுகிறது, என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
கொங்கைச் சிறுவரை என்னும் என்பதை முலைமலை என்று கவிநயத்துடன் வர்ணிக்கிறார் . திருவிருத்தம் (52)ல் நம்மாழ்வாரும் முலைமலை மேல்நின்றும் ஆறுகளாய் என்று கூறியது மேற்கோள் ஆகிறது.
அழுந்திக் கிடந்து உழல்வேனை என்று சொன்னது , அவன் வெளியே வர விரும்பினாலும் அவனை விடாது உள்ளேயே அழுத்தி வைத்து இருக்குமது என்கிறார்.
வங்கக் கடல் வண்ணன் அம்மான் என்றது, ‘தெரிவை மார் உருவமே மருவி‘ (பெரிய திருமொழி 1.1.3) என்று பெண்களுடைய வடிவழகையே பேணி இருந்தவரை திருத்தியதும் எம்பெருமானின் வடிவழகாலே என்கிறார். ‘வங்கமா முந்நீர் வரி நிறப் பெரிய வாளர வினணை மேவி‘ (பெரிய திருமொழி 9.1.1) என்று திருநிறத்தைச் சொல்கிறார் .
உலக விஷயங்களில் ஈடுபட்டு, பின்பு அதற்கு பலனாக, நரகங்களில் கொண்டு போய் செலுத்த கூடியவனான எம்பெருமான், தனது கருமங்களை எல்லாம் ஒழித்தருளி, அவமானங்களுக்கு ஆளாகாதபடி செய்தருளி பாதுகாத்து அருளினார் என்கிறார்.
முழை என்று குகைக்குப் பெயர்; அது நரகத்தின் பயங்கரத்தைச் சொல்லுகிறது. இப்போது கொங்கைச் சிறுவரை என்னும் பொதும்பினில் வழுக்கி வீழ்ந்ததற்குப் பலனாக, பின்பு நரகத்தில் புகுந்து அங்கு உழலப் போகிற என்ற பொருளில் வருகிறது. “வங்கக் கடல் வண்ணன்” என்று சொன்னது, எம்பெருமான் தன் திருமேனியின் அழகை தனக்குக் காட்டி அருளின உடனே, ஊழ்வினைகள் எல்லாம் ஒழிந்தன என்கிறார்.
Leave a comment