அரவத்து அமளியினோடும் அழகிய பாற் கடலோடும், அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து, பரவைத் திரை பல மோதப் பள்ளி கொள்கின்ற பிரானை, பரவுகின்றான் விட்டுசித்தன் பட்டினம் காவற் பொருட்டே.
பெரியாழ்வார் திருமொழி 5.2.10
தமது திருமேனி , திருப்பள்ளி அறையானதை சொல்கிறார்.
திருவனந்தாழ்வானாகிற படுக்கையோடும் , அழகிய திருப்பாற் கடலோடும் செந்தாமரை மலரை பிறப்பிடமாகக் கொண்ட பிராட்டியும் தானும் அடியார் குழாங்களோடு வந்து புகுந்து பல சமுத்திர திவலைகள் மோத, (தம் திரு உள்ளத்திலே) பள்ளிகொள்ளுகின்ற உபகாரகனை பெரியாழ்வார் தமது சரீரத்தை காக்கும்படிக்கு ஈடாக போற்றுகிறான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘பைம்கொண்ட பாம்பனையோடும்’ ‘மெய்க்கொண்டு வந்து புகுந்து கிடந்தார்’ என்று அருளிச் செய்ததை சொல்கிறார். எம்பெருமானுக்குத் திருப்பாற்கடலிலும், திருவனந்தாழ்வானிடத்தும் மிக்க அன்பாதலால் அவற்றை விட்டுப் பிரிந்து வரமுடியாமல் அவற்றையும் உடன் கொண்டு எழுந்தருளினான் என்கிறார். இப்படி சொன்னது, மற்றுமுள்ள நித்யஸூரிகளோடும் கூட எழுந்தருளிமைக்கு ஒரு உதாரணம் ஆகும். அமளி என்றால், படுக்கை. அரவிந்தம் என்பது பாவை ஆகும். அகம்படி வந்து புகுந்து என்று சொல்வது, அந்தரங்க பணியாளர்கள் மற்றும் பொருட்களோடும் வந்து புகுந்ததை சொல்கிறார்.
பாவை என்றால் கடல், எம்பெருமான் அழைத்துக் கொண்டு வந்த திருப்பாற்கடல், “பட்டினக் காவல் பொருட்டுப் பரவுகின்றான்” என்று சொல்லி, இப்படி ஆத்மாவைக் காத்தருளின உபகாரத்திற்காகப் போற்றுவதை சொல்கிறார். கடல் அலை ஓசை கேட்கும்படி கண் வளர்ந்து இருக்கின்ற உபகாரத்திற்குத் தோற்று பரவுகின்றான் விட்டுசித்தன் என்கிறார். தனக்கு நல்லது செய்ததற்கு மட்டும் இன்றி காவலுக்கு உறுப்பாகப் போற்றுகிறார் .
திருவனந்தாழ்வனாகிற படுக்கையோடும், அழகு பொருந்திய திருப்பாற் கடலோடும் கூட, செந்தாமரை மகளாகிய பெரியபிராட்டியாரும் தானும் வந்தருளி தனது உடம்பாகிற ஸ்தானத்தில் புகுந்தார் என்கிறார்.
இந்தப் பதிகத்தினால் திருப்பல்லாண்டின் அர்த்தத்தையும் சொல்கிறார். ‘சேவடி செவ்வித் திருக்காப்பு’ என்பதை ‘உரகல், உரகல்’ பாட்டில் சொன்னார் ; அடியோமோடும் நின்னோடும் என்ற அர்த்தத்தை அரவத்தமளியில் சொன்னார் .
Leave a comment