உற்றவுறு பிணி நோய்காள் உமக்கு ஒன்று சொல்லுகேன் கேண்மின், * பெற்றங்கள் மேய்க்கும் பிரானார் பேணும் திருக்கோயில் கண்டீர், * அற்றம் உரைக்கின்றேன் இன்னம் ஆழ்வினை காள் உமக்கு இங்கு ஓர் * பற்றில்லை கண்டீர் நடமின் பண்டன்று பட்டினம் காப்பே.
பெரியாழ்வார் திருமொழி 5.2.6
மிகக் கொடிய வியாதிகளே, மாறுபாடு உருவம் கொண்ட நோய்களே, உங்களுக்கு ஒரு வார்த்தை சொல்கின்றேன், கேளுங்கள் ; பசுக்களை மேய்க்கின்ற உபகாரகன் விரும்பி வர்த்திக்கின்ற திருக்கோயிலாகும். பிறவிக்கடலில் ஆழ்த்தள்ளிய பாவங்களே , மீண்டும் உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் ; இங்கு இருப்பதால் ஒரு பயனும் இல்லை, செல்லுங்கள் ; இது பழைய ஆத்மாவோ உடம்போ அல்ல, எம்பெருமானால் காக்கப்படுவதாகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
யசோதைக்கு அடங்கி நடந்த கண்ணன், எனக்கு எளியனாய் இருந்து, தான் உகந்தருளின நிலங்களில் உள்ள அன்பினை, என் மீது கொண்டு, என் உடலில் எழுந்தருளி இருக்கிறான்; இதை நேரடியாக காணுங்கள் என்று நோய்களுக்குக் கூறி, பிறகு அந்நோய்களுக்கு காரணமான பாவங்களை நோக்கி, மீண்டும் ‘உங்களுக்காகத் தேர்ந்த ஒரு விஷயம் சொல்லுகின்றேன்: அதாவது என்னுடைய உடல் முன் போலன்றி, கண்ணன், குடி புகுந்ததனால் காவல் பெற்றிருக்கின்றது; ஆகையால் இந்த உடலில் நீங்கள் ஆசை கொள்ளாதீர்கள், போய் விடுங்கள் ’ என்றருளிச் செய்கிறார்.
Leave a comment