திவ்ய பிரபந்தம்

Home

5.2.4 மங்கிய வல்வினை நோய்காள்

பெரியாழ்வார் திருமொழி 5.2.4

உருத்தெரியாதபடி மங்கிக்கிடக்கின்ற வலிய பாவத்தால் வந்த வியாதிகளே உங்களுக்கு கூட ஒரு வலிய பாவத்திற்கு பலனான நோய் இருக்கிறது பார்த்தீர்களா , எங்களிடத்தில் வராதீர்கள் , வராதீங்கள் . நீங்கள் எங்களை அடைவது சுலபம் அன்று என்று அறிந்து புகாமல் இருங்கள் ; நரசிம்ம அவதாரியாய் , உபகரித்தருளிய எனக்கு ஸ்வாமியானவன் நித்ய வாசம் பண்ணுகிற திருக்கோயிலாக இருக்கிறது ; (ஆதலால் ) சேதாரம் இல்லாமல் பிழைத்துப் போங்கள்; இந்த ஆத்மாவும் உடம்பும் பழையது அல்ல; அவனால் காக்கப்படுகிறது என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

வியாதிகளின் அனுபவத்திற்கு ஊழ்வினைகள் காரணம் ஆவதால், அந்த ஊழ்வினைகளை  கூப்பிட்டு, ‘பகைவனுக்கும் பகைவன் வந்தான்’ என்பது போல உங்களுக்கும் ஒரு வினை வந்தது. நீங்கள் உறையும் என் உடல் எம்பெருமான் மூலம் காவல் பெற்றததால், இனி நீங்கள் என்னிடம் தங்க முடியாது; தங்கினால் உங்களுக்கு நல்லது நடக்காது; வேறிடம் தேடி ஓடினால் பிழைக்கலாம் என்கிறார்.

மங்கிய வல்லினை என்று சொன்னது, வேறுபடுத்த முடியாதபடி, உருத்தெரியாமல் ஆத்மாவோடு ஒட்டிக் கொண்டிருக்கிற வினைகள் என்பதை குறிக்கிறது.

இங்குப் புகேன்மின் புகேன்மின் என்றதில் இங்கு என்று சொன்னது திருப்பல்லாண்டு உடன் சம்பந்தப்பட்ட எல்லாரையும் ஆழ்வார் சொல்கிறார் என்பார் பட்டர் என்னும் ஆச்சாரியார் .

சிம்மம் கலந்த உருவத்துடன் உள்ள அவன் இருக்கும் இடம் புகுவார் உண்டோ என்கிறார். பிரகலாதன் விரோதியை ஒழித்து, ஹிரண்யன் பட்ட பாட்டை அறிந்தும் நீங்கள் இங்கே தங்கலாமோ என்கிறார்.

Leave a comment