திவ்ய பிரபந்தம்

Home

5.2.3 வயிற்றில் தொழுவைப் பிரித்து

பெரியாழ்வார் திருமொழி 5.2.3

பூமியை தன் கொம்பின் இடத்திலே எடுத்துக் கொண்டு அருளின என் ஸ்வாமியானவன் கர்ப்ப வாசம் ஆகிற சிறைக்கூடத்தை கழித்து இந்திரியங்கள் ஆகிற வலிய காளைகளை நெருக்கி நரம்பும் எலும்புமான சரீரத்தை நீக்கி, இரவும் பகலும் சேஷத்வமே ஸ்வரூபம் என்னுமிடத்தை எனக்கு அறிவித்து அதனை அனுஷ்டானம் செய்யும்படி நித்ய கைங்கர்யம் பண்ணும்படி என்னை கைக்கொண்டு அருளினான் ; என் ஆத்மாவும் சரீரமும் பழையது அல்ல , எம்பெருமானால் காப்புற்று உள்ளது என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

கீழ்ப்பாட்டில் “பக்தர்க்கு அமுதன் அடியேன்” என்று எம்பெருமானுக்கு தம்மை அடிமைப்பட்டவராக அருளிச் செய்து, இந்த பாட்டில், அந்த எம்பெருமான் தம்மை அடிமை கொண்ட செயல்களை அருளிச் செய்கிறார். அவன் செய்து அருளின உபகார விவரங்களை கூறுகின்றார்.

வயிற்றில் தொழுவை பிரித்து, என்றது, இனி யான் கருவிருத்தக் குழியில் விழாதபடி செய்து அருளினான் என்று கூறுகிறார். அப்படி கர்ப்பவாஸம் நேராமைக்கு உதவும் வகையில், இந்திரியங்களாகிய காளைகளை, பட்டி மேய்த்து, திரிய விடாமல், பாதுகாத்து அருளினான்; அதாவது, உடலில் விருப்பம் ஓழியும்படி செய்து அருளினான்;

வன் புலச் சேவை யதக்கி என்று இங்கு சொன்ன ஆழ்வார் , முன்பு ‘தென்னவன் தமர் செப்பமிலாதார் சே வதக்குவார் போலப் புகுந்து‘ (பெரியாழ்வார் திருமொழி 4.5.7). தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் (திருமாலை 1)ல் ‘காவலில் புலனை வைத்து‘ என்று பாடி உள்ளார் .

இப்படி எல்லாம் அருள் செய்கையினால், யமகிங்கரர்கள் பாசக் கயிற்றுடன் வந்து, பாசங்களை அறுத்து, வேறு உலக துன்பங்களுக்கும் ஆளாகாதபடி என் உடலில் வந்து புகுந்து அருளினான். இந்தவிதமான அருள்களை, என் நெஞ்சில் இரவும் பகலும், ஓய்வின்றி குடி கொண்டு இருந்து, எனக்கு ஸ்வரூப ஞானத்தைப் பிறப்பித்து, அதன் பிறகு, அவற்றை அடியேன் அனுஷிட்டிக்கும் படியாக கற்பித்து, அடியேன் அவற்றை உனது திருவடிகளின் கீழ் கைங்கர்யங்களாக (சேவை) செய்யும்படி செய்து, அடியேன் உய்யும்படி அருளினான் என்று சொல்லி தனக்கு இந்த வகை நன்மைகள் எப்படி வாய்த்தன என்று விளக்குகிறார்.

குற்றம் செய்தவர்களைத் தொழுமரத்தில் அடைப்பதும், விலங்கிடுது போன்றதே, அதனால், வயிற்றில் கிடப்பது விலங்கிடுவதைப் போல் ஆகும் அதனால், கர்ப்பவாஸத்தை “வயிற்றில் தொழு” என்கிறார்.

கயிறு என்பது நரம்பு என்றும், அக்கு என்பது எலும்பு என்றும், ஆணி என்பது சரீரம் என்றும் சொல்லி, ஆணி கழித்தல் என்பது, சரீரத்தில் தசையை ஒழித்தல் என்கிறார்.

“காலிடைப் பாசம் கழற்றி’ என்பதற்கு பல வகையாகப் பொருள் கூறுவர்;

  • முதலில், பாசங்களை, காலிலே கட்டி இழுக்க முடியாதபடி செய்ததை சொல்வது.
  • இரண்டாவது பொருள், கால் என்பது காற்று என்று சொல்லி, அதனால் பிராண வாயுவைச் சொன்னது. பாசம் என்று ஆத்மாவைக் கட்டிக்கொண்டு இருக்கின்ற கண்ணுக்கு தெரியாத சரீரத்தை சொல்கிறது. எனவே, ‘கயிற்றுமக்காணி கழித்து’ என்று சொன்னது, இந்த உடலில் இருந்த ஆசையை அறுத்த படியைச் சொல்லியது ஆகும்.
  • மூன்றாவது பொருள், கால்கட்டான பிள்ளை, மனைவி, வீடு, நிலம் போன்றவற்றில் உள்ள பற்றைப் போக்கியதை சொல்கிறார்.

என்னை ஆளும் வன் கோ ஒர் ஐந்து இவை பெய்து (திருவாய்மொழி 7.1.2)ல் சொல்லியபடி என்னை அடிமை கொள்ளுகிற கொடிய அரசர்கள் போன்ற இந்த பஞ்சேந்திரியங்களை ஏவி வைத்து அவைகளுக்கு தான் அடிமை செய்த காலம் போன்ற பழைய காலம் இல்லை என்பதை, பண்டன்று என்பதால் சொல்கிறார் .

பட்டினம் காப்பே ‘ என்று சொல்லி இவர் ரக்ஷிக்கப்பட்டதால், இது இந்த ஆழ்வார் பின்னால் சொல்லப்போகின்ற ‘கூற்றமும் என் கோலாடி குறுகப் பெறா‘ என்ற யமனும் என் செங்கோல் செல்கின்ற இடங்களில் அணுக வல்லவன் அல்லன் என்று சொல்கிறார் .

Leave a comment