திவ்ய பிரபந்தம்

Home

5.2.2 சித்திரகுத்தன் எழுத்தால்

பெரியாழ்வார் திருமொழி 5.2.2

தென் திசைக்கு தலைவன் ஆன யமன் மேல் எழுத்திட்டு முத்திரை வைக்கப்பட்டு இருந்த சித்ரகுப்தன் என்னும் கணக்கன் உடைய கணக்கு சுருணையை சுட்டுப்போட்டு அவனுடைய தூதர்கள் ஓடிப்போய் ஒளிந்து கொண்டார்கள் ; முத்துக்கள் திரைஎறிகிற கடலிலே கண் வளர்ந்து அருளும் முதிர்ந்த அறிவை உடைய நித்யஸூரிகளுக்கு தலைவனாய் பக்தர்களுக்கு என்றும் போக்யன் ஆகஇருக்கும் அவனுக்கு நான் சேஷ பூதன் ; என் சரீரமும் ஆத்மாவும் பழையது அன்று ; இந்த ஆத்மா சர்வேஸ்வரனால் காக்கப்படுகிறது என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

கீழ் ‘துப்புடையாரை” என்ற திருமொழியில், “எல்லையில் வாசல் குறுகச் சென்றால், (4.10.3) ஏற்றி நமன் தமர் பற்றும் போது, நில்லும் என்னும் உபாயமில்லை” என்ற  குறை தீர, இன்று அச்சம் தீர்ந்ததை இப்பாட்டில் அருளிச் செய்கிறார்.

வைத்த இலச்சினை மாற்றித் தூதுவர் ஓடி ஓளித்தார் என்பதை, பெரிய திருமொழி (8.10.7)ல் சொல்லியபடி ‘வள்ளலே உன் தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர்போல்” என்றதையும், முதல் திருவந்தாதி (55)ல் சொல்லிய ‘நமன்தமரால் ஆராயப் பட்டறியார் கண்டீர்என்றதையும் முதல் திருவந்தாதி (67) ல் சொல்லிய ‘உயிரும் தருமனையே நோக்கு” என்பதும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.

முத்துத்திரைக்கடல் என்பதற்கு , ”வெள்ளைநீர் வெள்ளத் தணைந்த அரவணைமேல் துள்ளுநீர் மெள்ளத் துயின்ற பெருமானே‘ (பெரிய திருமொழி (8.10.7) என்பதும் , வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காண  (பெரியாழ்வார் திருமொழி 5.1.7) என்பதும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. முத்துத்திரைக்கடல் என்பது லீலா விபூதி யோகம் .

மூதறிவாளர் முதல்வன் என்பது நித்யஸூரிகளின் தலைவன் என்பதாகும். இதற்கு, ‘அயர்வறும் அமரர்கள் அதிபதி (திருவாய்மொழி 1.1.1) என்பது மேற்கோள்; அது நித்யவீபூதி யோகம். அடியேன் என்று சொன்னதால் நித்ய விபூதி , லீலா விபூதி என்ற இரண்டிற்கும் நாதனானவின் போக்கியதையில் தோற்ற அடியேன் என்கிறார் .

பத்தர்க்கு அமுதன் என்பதற்கு ‘அடியேன் மேவி யம ர்கின்ற அமுதே.’ (திருவாய்மொழி 6.10.7) என்பது மேற்கோள் காட்டப்பட்டு உள்ளது .

யமலோகத்தில், இவ்வுலகத்தில் உள்ள எல்லா ஆத்மாக்களினுடைய பாவ புண்ணியங்களை கணக்கிட்டு எழுதுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள சித்திரகுப்தன என்னும் கணக்கப்பிள்ளை தன் தெய்வீகத் தன்மையால், ஸூரியன், சந்திரன், வாயு, அக்நி, ஆகாசம், பூமி, வருணன், ஹ்ருதயம், யமன், பகல், இரவு, காலை, மாலை, தருமம் என்ற பதினான்கு பேர் சாட்சியாக, நாம் ஒவ்வொருவரும் செய்யும் நல்ல, தீவினைகளை எழுதி வைப்பது போல, ஒரு சுவடியில் என் நல், தீவினைகளை எல்லாம் எழுதி, அதன் மேல் யமனுடைய மேலெழுத்தையும் இடுவித்து அதனைப் பாதுகாவலாய் வைத்திருக்க, அதனை யம தூதர்கள் எடுத்து போட்டு ஓடி ஒளிந்து கொண்டனர்; அயர்வறும் அதிபதிக்கு நான் அடிமைப்பட்டதே அதற்கு காரணம் ஆகும். அதனால் எனது ஆத்மா அந்த எம்பெருமானுடைய பாதுகாப்பை பெற்றிருக்கின்ற படியால், அந்த யம தூதர்களுக்கு என்னை அணுகும் வழி தெரியவில்லை என்கிறார்.

Leave a comment