திவ்ய பிரபந்தம்

Home

5.2.1 நெய்க்குடத்தைப் பற்றி

சென்ற பதிகத்தில் ‘அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்‘ என்று ‘இறுதி காலத்தில் எம கிங்கரர்கள் வருத்தும் போது, உன்னை புகழ்ந்து பாட முடியாது என்று ஏற்கனவே சொல்லி வைத்தேன்’ என்று சொன்ன ஆழ்வார், ‘சழுக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன்‘ என்று தன்னுடைய நைச்சானுசந்தானத்தை சொல்லி ஆழ்வார் அகல, இந்த பதிகத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம். எம்பெருமான் கரணங்கள் இவர் மேல் விழுந்தது கண்டு மன்னிக்க வேண்டுகிறார். அதற்கு எம்பெருமான், கடந்து சொல்லும்போது விழுந்தால் அன்றோ மன்னிக்க வேண்டுவது, அவனோ கடந்து செல்லாமல், ஆழ்வார் மேல் விழுந்து, புகுந்து கிடந்தபடி இருந்ததை இந்த பதிகத்தில் கூறுகிறார்.

பெரியாழ்வார் திருமொழி 5.2.1

அவன் வந்து கைக்கொண்ட பின்பு, அவித்தையும், வியாதிகளையும், கர்மங்களையும், இந்திரியங்களையும், யம கிங்கரர்களையும் நோக்கி, இது முன்பு இருந்த தேகம், ஆத்மா என்று எல்லாம் எண்ண வேண்டாம், அவன் உகந்து அருளின திவ்ய தேசங்களில் பண்ணும் விருப்பங்கள் எல்லாம், தன்னுடைய தேகத்திலும், ஆத்மாவிலும் பண்ணிக் கொண்டு வந்ததாகவும், அவர்கள் மேலும் உஜ்ஜீவிக்க வேண்டுமானால் இங்கிருந்து உடனே செல்லவும் என்றும் ஆழ்வார் கூறுகிறார்.

நல்ல நெய் வைத்திருக்கும் குடத்தை பற்றிக்கொண்டு ஏறுகின்ற எறும்புகளைப் போலே எங்கும் பரந்து உடன் வந்திருக்கிற வியாதிகளே, நீங்கள் உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக சடக்கென்று போய் விடுங்கள் ; ப்ரஹ்மாவிற்கு வேதத்தை உபகரித்து அருளின சர்வேஸ்வரன் பரந்த திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளியோடு கூட என் சரீரத்தை போக்யமாகக் கொண்டு வந்து புகுந்து கிடந்தார் . ஆதலால் என் சரீரமும் ஆத்மாவும் பழைய நிலைமை உடையது அன்று . இந்த ஆத்மா ஆனது சர்வேஸ்வவரானால் காப்பாற்றப்படுகிறது; ஆதலால் நீங்கள் புக இடம் இல்லை என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

எங்கும் கைக் கொண்டு நிற்கின்ற நோய்காள் என்று சொல்வதால் எம்பெருமான் கட்டளைப்படி உள்ளே புகாமல் வெளியே நின்று கொண்டு இருந்தாலும் உடலைத் தொட்டுக்கொண்டே இருக்கிற சிரமத்தை எண்ணி சொல்கிறார். குடத்திற்கும் எறும்பினால் ஒரு பாதகமும் இல்லை என்பதும் விளங்கும்.

பெரிய திருவந்தாதி 30ல் சுவாமி நம்மாழ்வாரும் , பாவங்களை இந்த உடலுக்கு வராது என்று சொல்லிய ”மடியடக்கி நிற்பதனில் வல்வி னையார் தாம்,மீண்டு அடியெடுப்ப தன்றோ அழகு‘ என்பதை இங்கே நினைவில் கொள்ளலாம். மேலும் திருவாய்மொழி 3.3.6ல் ‘வேங்கடத் துறைவார்க்கு நம ‘ என்று சொல்லியபோதே பாவங்கள் எரிக்கப்படும் என்று சொன்னதால் தனியே பாவங்களை போ என்று சொல்ல வேண்டாம் என்று உரையாசிரியர் சொல்கிறார் .

வேதப்பிரானார் என்று சொன்னதால் தான் கேட்கிற வேதத்தால் அறியப்பட்ட எம்பெருமானை தன் கண்களால் கண்டு அனுபவிக்கும்படி உபகாரம் செய்தவனே என்கிறார் .

Leave a comment