நம்பனே நவின்றேத்த வல்லார்கள் நாதனே நர சிங்கம் அதானாய், * உம்பர் கோனு உலகேழும் அளந்தாய் ஊழியாயினாய் ஆழி முன்னேந்தி, * கம்பமா கரி கோள் விடுத்தானே காரணா கடலைக் கடைந்தானே, * எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே, ஏழையேன் இடரைக் களை யாயே.
பெரியாழ்வார் திருமோழி 5.1.9
எல்லோருக்கும் நம்பகத்தன்மை உடையவனாய், வாயாரச் சொல்லி ஸ்துதிக்க வல்லவர்களுக்கு நாயகனாய், நரசிம்ம அவதாரம் செய்து அருளினாய் . நித்யஸூரிகளுக்கு நிர்வாககனாய் சகல லோகங்களையும் அளந்து கொண்டவனாய் , பிரளய காலத்துக்குப் பின்பு உலகங்களை படைத்தவனாய் , முன்னே திருவாழியாழ்வானை திருக்கையால் ஏந்தி மிக்க நடுக்கத்தை அடைந்த ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுடைய முதலையால் வந்த நலிவை தீர்த்தவனாய் , ஷீராப்தியை கடைந்தவனாய் , எனக்கு உபகாரகனாய் , என்னைஅடிமை கொண்டவனாய் , தேன் போலே போக்கியனாய் , சபலனான என்னுடைய துன்பத்தை களைந்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
நவின்றேத்த வல்லார்கள் நாதனே என்று சொன்னது ஸ்நேஹாபூர்வமாக துதிப்பவர்களுக்கு ஸ்வாமியானவனே என்கிறார்.
நம்பனே என்றும் நரசிங்கம் என்றும் சொன்னது, தனக்கு தானும் ரக்ஷகன் அன்று , தந்தையும் ரக்ஷகன் அன்று ஈஸ்வரனை தவிர வேறு யாரும் ரக்ஷகன் அன்று என்பதை திருநாமம் மூலம் சொன்னதை பொறுக்காத ஹிரண்யன் வதைப்பட்டதையும் சொல்கிறது. நம்பனை நரசிங்கனை நவின்று ஏற்றுவர்களை கண்டக்கால் எம்பிரான் என்ற சின்னங்கள் என்றும், நாதனை நரசிங்கனை நவின்று ஏத்துவார்கள் உழக்கிய பாதத்துளிகள் படுவதால் பாக்கியம் செய்ய பெற்றோம் என்றும் கொண்டாட வேண்டியவன் விஷயத்தில் அபராதம் செய்தவன் ஹிரண்யன்.
உன் திருவடிகளில் நிரந்தர ஸேவை பண்ணுதற்கு விரோதியான, பாவங்களைப் போக்கி அருள வேண்டும் என்று எம்பெருமானை யாசிக்கிறார். ‘நரசிங்கம் தானாய்’ என்பது, எம்பெருமானைத் தவிர மற்ற யாரையும் நம்பக் கூடாது என்பதற்காகவும், அன்பு கொண்டு அவனை தொழுபவர்களை காக்கின்ற எம்பெருமானது தலைமைக்கும் சேர்த்து சொல்வதாகும்.
‘பரவி வானவ ரேத்த நின்ற பரம னைப்பரஞ் சோதியை‘ (திருவாய்மொழி 3.6.3) என்று ஸ்வாமி நம்மாழ்வார் சொன்னதை போல், அங்குள்ளார் ராகப்ராப்தமாக ஏத்துவார்கள் என்றும் இங்குள்ளவர்கள் தண்டனைக்கு அஞ்சியும் ஸ்வரூப அஞ்சியும் துதிப்பார்கள் என்கிறார் .
“உம்பர்கோன் உலகேழும் அளந்தாய்” என்பதை ஒரே வாக்கியமாக அமைத்து, இந்திரனுக்காக ஏழுலகங்களையும் அளந்தவனே! என்றும், ‘நான்முக னார்பெற்ற நாட்டுளே‘ (திருவாய்மொழி 7.5.1) என்றபடி பிரமனது ஏழுலகங்களையும் என்று அர்த்தங்கள் வரும்படி சொல்கிறார்.
ஆழி முன் ஏந்தி என்று சொன்னது விரோதி வருவதற்கு ஏற்றபடி என்பதற்க்காக என்கிறார் .
‘கோள்முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்‘ (மூன்றாம் திருவந்தாதி 99) சொல்லியவண்ணம் திருவாழியைக் கொண்டு தன் காரியம் கொண்டது சொல்லப்பட்டது .
தடமலர்ப் பொய்கை புக்கு ….. நாகத்தின் நடுக்கந் தீர்த்தாய் (பெரிய திருமொழி 4.6.1) என்றும் , ‘என் ஆரிடரை நீக்காய் ‘(சிறிய திருமடல்) என்றும் சொன்னது போல் ஆழ்வார் தன்னுடைய இடர் களைய வேண்டுகிறார் . ‘ஐயார்க்கண்டமடைக்கிலும் நின்கழல் எய்யாதேத்த, அருள் செய் எனக்கே‘ (திருவாய்மொழி 2.9.3)ல் சொல்லியபடி பிரார்த்திப்பது அப்போதைய வேதனையின் போது திருநாமம் சொல்ல இயலாமல் இருக்குமோ என்ற அச்சமே இவரது இடர் .
‘அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,’ (திருவாய்மொழி 1.3.11) என்று சொன்னபோது துதிக்கப்பட்டவனாய் நின்று கடைந்ததை சொல்கிறது .
‘தேட்டரும்திறல் தேனினைத்தென் னரங்கனை‘ (பெருமாள் திருமொழி 2.1) என்று சொல்லியபடி எம்பிரான் என்னை ஆளுடைத் தேனே என்கிறார்.
Leave a comment