வண்ணமால் வரையே குடையாக மாரி காத்தவனே மது சூதா * கண்ணனே கரி கோள் விடுத்தானே காரணா களிறட்ட பிரானே, * எண்ணுவார் இடரைக் களைவானே ஏத்தரும் பெருங்கீர்த்தி யினானே * நண்ணி நான் உன்னை நாள் தொறும் ஏத்தும் நன்மையே அருள் செய் எம் பிரானே.
பெரியாழ்வார் திருமொழி 5.1.8
காரண பூதனாய், எப்போதும் உன்னையே தியானிப்பவர்க்கு துன்பங்களை போக்குபவனாய், மது என்ற அரக்கனை அழித்தவனாய், ஸ்ரீ கஜேந்திராழ்வானுடைய (முதலையால் வந்த) ஆபத்தை தீர்த்தவனாய், சர்வ சுலபனான கிருஷ்ணனாய், பலவகைப்பட்ட காவிகற்களை உடைய பெரிய கோவர்த்தன மலையை குடையாக எடுத்து கல் மழையில் இருந்து ரக்ஷித்தவனாய், குவலயாபீட யானையை முடித்து உபகாரம் செய்தவனாய், ஸ்துதித்து முடிக்க முடியாதவனாய், பெரிய கீர்த்தியை உடையவனாய், சர்வ உபகாரகன் ஆனவனே, அடியேன் தேவரீரை அணுகி எப்போதும் ஸ்துதி செய்வதற்கு உரிய நன்மையை செய்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
உலகங்களுக்கு காரணம் ஆனவனே, உன்னை துதிப்பவர்களுக்கு துன்பங்களை போக்குபவனே, மது என்ற அரக்கனை கொன்றவனே, கஜேந்தரனின் துக்கத்தை போக்கியவனே, அழகிய கருநீல கோவர்தனம் என்ற மலையை ஏந்தி, மழையில் இருந்து ஆநிரைகளை காத்தவனே, குவலயாபீடம் என்ற யானையை முடித்தவனே, அடியேன் உன்னை, தினந்தோறும் தஞ்சம் அடைந்து துதிக்கிற நன்மையை அருள் செய்ய வேண்டும் என்கிறார்.
வண்ணமால் வரையே என்று சொன்னதில் ‘உள்ளம் வானவர் கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும், (திருவாய்மொழி 5.10.5) என்று நினைத்த மலையையே குடையாகக் கொண்டு ரக்ஷித்தது சொல்லப்பட்டது.
இந்தப் பாட்டால், அவதார ரக்ஷத்துவம், சர்வ சுலபத்வம் மற்றும் ப்ராப்யத்வம் சொல்லப்பட்டது.
Leave a comment