திவ்ய பிரபந்தம்

Home

5.1.10 காமர் தாதை கருதலர்

பெரியாழ்வார் திருமொழி 5.1.10

காமனுக்கு தந்தையாய், தன்னை நினையாதவருக்கு சிம்மம் போலே கிட்டுவதற்கு அரியவனாய், தன்னை பற்றினார் கண்டு களிப்பதற்கு இனியவனாய், கருத்த திருக்குழலை உடைய சிறிய வடிவம் உடையவனாய், குறிகிய வடிவம் உடைய ப்ரம்மச்சரியாய், எனக்கு பவ்யனாய், மரகத பச்சை போன்ற வடிவழகை உடையவனாய், திருமகள் தனக்கு பதியாய், மதுசூதனனான எம்பெருமான் விஷயமாக ரக்ஷை நன்கு பொருந்தின ஸ்ரீ வில்லிபுத்தூரில் உள்ளார்க்கு செய்த நிர்வாககரான பெரிய ஆழ்வார் அருளிச் செய்த ஆச்சர்யமான தமிழ் மொழியில் பத்துப்பாட்டையும் ‘திருநாமம்’ என்று நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்திடுபவர்கள் ஸ்ரீவைகுண்டத்தை சடக்கென கிட்டப் பெறுவார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

மற்ற பதிகங்களை காட்டிலும் இந்த பதிகத்தில் எம்பெருமானுடைய திருநாமங்கள் விசேஷமாக அருளிச் செய்யப்பட்டு இருப்பதால், இந்த பதிகத்தை ஸஹஸ்ர நாம பாராயண தொடக்கத்தில் சொல்வது சிறப்பு என்று சொல்வதுண்டு.

தெரிவைமார் உருவமே மருவி‘ (பெரிய திருமொழி 1.1.3) அதாவது, ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி இருந்த இவரை மீட்டது காமனார் தாதை என்ற வடிவே என்கிறார். காமர் தாதை என்பது, ருக்மிணிப் பிராட்டிக்கு மன்மதனுடைய அம்சமாக பிறந்த பிரத்யும்னனுக்குக் கண்ணன் தந்தை என்பதால் சொல்லப்பட்டது.

காண வினிய என்று சொன்னது, கண்ணுக்கு இனியான்(பெரியாழ்வார் திருமொழி 3.2.4), மனத்துக்கு இனியான் (திருப்பாவை 12) என்று புறக்கண்ணுக்கும் அகக்கண்ணுக்கும் இனியவன் என்று சொல்கிறது.

கருங்குழல் என்பது அழகுக்கு அணிகலமாய் சொன்னது ; ‘என்னரங்கத் தின்னமுதர், குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழகர்‘ என்று ஆண்டாள் (நாச்சியார் திருமொழி 11.2) ல் சொன்னதை இங்கு நினைவில் கொள்ளலாம். ‘வாமன நம்பீ வருக இங்கே, கரிய குழல் செய்ய வாய் முகத்துக் காகுத்த நம்பீ வருக‘ (பெரியாழ்வார் திருமொழி 2.9.2) என்று இந்த ஆழ்வார் சொன்னதையும் நினைவில் கொள்ளலாம் .

என் மரகத வண்ணன் என்று இந்த ஆழ்வார் சொன்னதையும், சுவாமி நம்மாழ்வார் திருவிருத்தம் (85)ல் உலகளந்த மாணிக்கமே! என்மரகதமே! என்று சொன்னதையும் ஒப்பு நோக்கலாம்.

வடிக்கோல வாள்நெடுங்கண் மாமலராள், செவ்விப் படிக்கோலம் கண்டகலாள்” (இரண்டாம் திருவந்தாதி 82) ல் சொல்லியபடி (வடிக்கட்டின அழகையுடையவளும் ஒளி பொருந்திய நீண்ட திருக்கண்களை யுடையவளும் சிறந்த தாமரை மலரில் பிறந்தவளுமான பெரிய பிராட்டியார் சிறப்புற்ற (அவனது) திருமேனியின் அழகை கண்ணால் அநுபவித்து ஒரு நொடிப்பொழுதும் விட்டுப்பிரியாமல் எப்போதும் கூடியேயிருக்கின்றாள்) அவன் அழகை ரசிப்பதால் , மாதவன் என்றார்.

மதுசூதனன் தன்னை என்று சொன்னது, திருவாய்மொழி (1.5.5)ல் வானார் சோதி மணிவண்ணா. மதுசூ தாநீ யருளாய் ‘ என்று அனுபவ விரோதியை போக்கியதை சொல்லியது .

நாமமென்று என்று சொன்னது நாமமாயிரம் என்று திருவாய்மொழி (5.9.11)ல் நாமங்க ளாயிர முடையநம்பெரு மானடிமேல் என்று சொல்லியபடியும், ஆண்டாள் ‘ நாமமாயிர மேத்தநின்ற நாராயணா‘ என்று (நாச்சியார் திருமொழி 2.1)ல் சொல்லியபடியும் கொள்ளலாம் .

சேமம் நன்று அமருகை என்று சொன்னது ஆழ்வாருக்கு ஸ்ரீவைகுந்தத்தில் இருக்கும் எம்பெருமான் மேல் இங்கு பல்லாண்டு பாடுவதை தெரிவிக்கிறது. இதே ஆழ்வார் ‘பொன்திகழ் மாடம் பொலிந்துதோன்றும் புதுவை’ என்று (பெரியாழ்வார் திருமொழி 5.3.10) சொல்லியபடி பொன் உலகோடு ஒத்த ஸ்ரீவில்லிபுத்தூரில் பல்லாண்டு பாடுவது சொல்லியது .

மன்மதனுக்கு தந்தையும், தன்னை நினைக்காதவர்களுக்கு சிங்கம் போல கிடைப்பதற்கு அரியவனாகவும், தன்னை நினைப்பவர்களுக்கு இனிமையானவனாகவும் கறுத்த குழலை உடைய சிறுவனான வாமனனாகவும், தனக்கு பவ்யனாய் மரகத பச்சை போன்ற வடிவழகனாய், மாதவனாய், மதுசூதனனான எம்பெருமான் விஷயமாக, க்ஷேமமானது நன்றாக அமைந்து இருக்கும், ஸ்ரீவில்லிபுதூரில் உள்ளவர்களுக்கு நிர்வாககரான பெரியாழ்வார் ஆச்சரியமான தமிழ் மொழியில் அருளி செய்த இந்த பத்து பாடல்களையும் ‘திருநாமம்’ என்று நெஞ்சார நினைத்து வாயார வாழ்த்துபவர்கள் ஸ்ரீவைகுந்தத்தை சீக்கிரம் (சடக்) என்று கிடைக்க பெறுவார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார்.

Leave a comment