வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து அதன் மேலே * கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசையினாலே * உள்ளம் சோர உகந்தெதிர் விம்மி உரோம கூபங்களாய் கண்ணநீர்கள் * துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான் உன்னைத் தத்துறுமாறே.
பெரியாழ்வார் திருமொழி 5.1.7
நிர்மலமான ஜலத்தின் மேல் ஒப்பற்ற திருவனந்தாழ்வானை படுக்கையாக விரித்து அந்தப் படுக்கையின் மேல் யோக நித்திரை கொள்கின்ற பிரகாரத்தை பார்க்கலாகுமோ என்கிற ஆசையினால் நெஞ்சழியவும் மிகக் களித்து எதிரே விம்மியும் உடம்பு எல்லாம் மயிர் கூச்செறியவும் (அனுசந்திக்கையில் உரு வெளித்தோற்றமாகி கையை நீட்டி அணைக்கத் தேடி அது காணாமையால் வந்த அவஸ்தையினால் ) கண்ணீரானது துளி சேர்ந்து படுக்கையிலே நித்திரை கொள்ளமாட்டாதவனாக நின்றேன் . அடியேன் தேவரீரை கிட்டும் வழி அருளிச் செய்ய வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
இப்பாட்டில் திருப்பாற்கடலில் திருவனந்தாழ்வான் மீது சயனித்துக் கொண்டு யோக நித்திரை செய்து அருளும் கிரமத்தை காண சந்தர்ப்பம் கிடைக்குமோ என்னும் ஆவல்கொண்டு, “பாலாழி நீ கிடக்கும் பண்பை யான் கேட்டேயும், காலாழும் நெஞ்சழியும் கண் சுழலும்” (பெரிய திருவந்தாதி 4.4) என்கிறபடியே, நெஞ்சு அழியப் பெற்று, வாய் திறந்து ஒரு பேச்சுப் பேச முடியாதபடி ஏங்கி உடம்பெல்லாம் மயிர் கூச்செறியப்பட்டு ‘நமது மநோரதம் நிறைவேறவில்லையே’ என்று கண்ணீர் துளிதுளியாகச் சிந்தி, படுக்கையில் சாய்ந்தால், கண்ணுறங்கப் பெறாத அடியேன், உன்னை எவ்வாறு கிட்டுவேனோ, அவ்வழியை அருளிச் செய்வாய் என்கிறார்.
பாம்பை மெத்தையாக விரித்து என்று சொல்வதால், வாசனை, குளிர்ச்சி, மென்மை போன்ற குணங்களை உடைய ஒரு பாம்பின் மேல் சயனித்து இருக்கிறான் என்கிறார் . ப்ரம்மன் ருத்திரன் போன்றவர்கள் படுக்கை வாய்த்ததனால் உறங்குகின்றான் என்றும் , ‘நாகமிசைத் துயில்வான் போல் உலகெல்லாம் நன்கொடுங்க, யோகணைவான் ‘ (திருவாய்மொழி, 4.8.9) ல் சொல்லியபடி, ஆதிசேஷன் மேல் எல்லா உலகும் நன்மை அடையும்படி, உபாய சிந்தனை செய்வது போல் உறங்குகின்றான் என்கிறார்.
ஆழ்வார் அழுகை போவது, அவருக்கு அனுபவம் ஏற்பட்டால் என்றும், அந்த அனுபவத்தில் உள்ள அவன் கிட்டினால் என்றும் சொல்கிறார். அவன் கிட்டுவதற்கு சாதனம் ஆழ்வார் சிந்திக்கிற அவனே என்றும், ஆழ்வாரை அடைவதற்கு அவன் சிந்திக்க வேண்டும் என்றும் வேண்டுகிறார். பாற்கடலில் யோக நித்திரை செய்யும் போதும், நான் உன்னை சிந்திக்காவிட்டாலும், எங்களை பற்றி சிந்திக்கின்ற நீ, இப்போது நான் உன்னை சிந்திக்கும் போது என்னை ஏற்றுக்கொள்ளும் வழி அருளிச் செய்வாய் என்கிறார். (‘பாற்கடல் யோக நித்திரை சிந்தை செய்த எந்தாய், உன்னை சிந்தை செய்து செய்தே’ என்று இவர் நினைவிற்கு அவன் நினைவே ).
எம்பெருமான் திருவனந்தாழ்வான்மீது உறங்குவான்போல் யோகு செய்கின்றான் ஆதலால் கள்ளநித்திரை எனப்பட்டது. இது திருவாய்மொழி 5.4.11ல் ‘உறங்குவான் போல்யோகு செய்த பெருமானை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது .
Leave a comment