கண்ணா நான்முகனைப் படைத்தானே காரணா கரியாய் அடியேன் நான், * உண்ணா நாள் பசியாவது ஓன்றில்லை ஓவாதே நமோ நாரணா வென்று * எண்ணா நாளும் இருக்கெசுச் சாம வேத நாண் மலர் கொண்டு உன் பாதம் * நண்ணா நாள் அவை தத்துறுமாகில் அன்று எனக்கு அவை பட்டினி நாளே.
பெரியாழ்வார் திருமொழி 5.1.6
சர்வ சுலபனான கிருஷ்ணனாய், சதுர்முக பிரம்மாவை படைத்தவனாய் , ப்ரம்மாஹ்விற்கு முன்பான சிருஷ்டிகளைப் படைத்தவனே , நீல மேக ஷ்யாமளனாய் இருப்பவனே , உனக்கு (அநந்யார்ஹ ) சேஷபூதனான நான் உண்ணாத அன்று பசி உண்டாவதில்லை ; நிரந்தரமாக ‘நமோ நாராயணாய’ என்று எண்ணாத நாளும் , ரிக் , யஜுர் , சாம வேதங்களை சொல்லி , அப்போது அலர்ந்த புஷ்பங்களை உன் திருவடிகளை நண்ணாத நாளும் எனக்கு உண்ணாத நாளாம் . மந்திரங்களை சொல்வதும் , புஷ்பங்களை சமர்ப்பணம் செய்வதும் ஆகியவை செய்வதற்கு தடங்கல் ஏற்பட்டால் அப்போது அந்த நாள் நான் பட்டினி கிடந்த நாள் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
எல்லா உலகங்களையும் படைப்பதற்கு காரணமானவனே, பிரமனை நாபி கமலத்தில் படைத்தவனே, கண்ணனே, காளமேகம் போன்ற நிறம் உடையவனே, அடியேன் உண்ணாது இருந்த போது பசி என்று உணர்ந்தது இல்லை; நமோ நாராயணாய’ என்று இடைவிடாமல் சொல்லாத நாட்களும் ருக், யஜுர், ஸாமம் என்கிற வேதங்களை சொல்லாத நாட்களும், அன்று மலர்ந்த பூக்களை உன் திருவடிகளில் சேர்க்காத நாட்களுமே, அந்நாட்களில் உணவு உண்டாலும் , அவை உணவு உண்ணாத நாட்களாகும் என்று ஆழ்வார் கூறுகிறார்.
கண்ணா நான்முகனைப் படைத்தானே என்று சொல்வது , இப்படி சுலபனாக இருந்தாலும், நான்முகனைப் படைத்தவனே என்கிறார், பிரம்மனுக்கு முந்திய படைப்புகளை படைத்த காரணனே என்று சௌலப்யம் , காரணத்துவம் சொல்லி அரிதானாலும் விடமுடியாத வடிவழகை ‘கரியாய் ‘ என்கிறார் .
‘மாதவன்பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு‘ என்று இரண்டாம் திருவந்தாதியில் சொல்வது , திருமாலின் திருநாமங்களை உச்சரிப்பதே ஸகல வேதங்களின் ஸாரமாகும் என்பது இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.
‘நாடாத மலர்நாடி நாள்தோறும் நாரணந்தன், வாடாத மலரடிக்கீழ் வைக்கவே’ (திருவாய்மொழி 1.4.9)ல் சொல்லியபடி, தேடவொண்ணாத புஷ்பங்களைத் தேடி தினம்தோறும் ஸ்ரீமந்நாராயணனுடைய வாடாத தாமரை மலர் போன்ற திருவடிகளில் ஸமர்ப்பிப்பதற்காகவே படைக்கப்பட்ட அவயங்கள் என்பதும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது . சம்சாரிகளை பொறுத்த வரையில் மலர்கள் கண்ணில்படுவதும் , படாததும், உபேயம், உபாயம் எல்லாம் புறம்பே அல்லது பெருமை குலைப்பதே. உபாசகருக்கு உபாயம் தங்கள் கையில் என்றும் உபேயம் ஈஸ்வரன் என்றும் சொல்கிறார். உண்ணா நாள் உன் பாதம் நண்ணா நாள் ; உண்ணும் நாள் உன் பாதம் நண்ணும் நாள்.
Leave a comment