திவ்ய பிரபந்தம்

Home

5.1.5 தோட்டம் இல்லவள்

பெரியாழ்வார் திருமொழி 5.1.5

ஒப்பற்ற வராக ரூபியாய்க் கொண்டு தம் கொம்பினால் பூமியை உயர எடுத்தருளின ஸ்வபாவத்தை உடைய குவலயாபீட கஜமானது முடிந்து விழும்படி அதன் கொம்பை முறித்தவனே, தேவரீருடைய அழகிய திருவடிகளில் தோட்டமும் மனையாளும் பசுக்களும் பசுக்கள் காட்டும் தொழுவமும் குளமும் விளைநிலமும் கிணறும் இவற்றில் ஒன்றும் குறையாமல் நான் திரள வகுத்துக் கொண்டு இருந்தேன் . இப்படி எல்லாம் நீயே என்று இருக்கிற எனக்கு நாட்டில் உள்ள மனிதரோடு சகவாசம் செய்வது கஷ்டம் ; பல பேர் இத்தை விரும்பா நிற்பார்கள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

தோட்டம் என்பது சத்யம் தர்மம் முதலியவற்றை அனுஷிட்டிக்க ஒருவன் உருவாக்கும் இடம் என்றும், இல்லவள் என்பது கிரகத்தில் இருப்பவள் என்றும், ஆ என்பது பசு என்றும், தொழு என்பது பசு வசிக்கும் இடம் என்றும், துடவை என்பது நிலம் என்றும், ஓடை நிலத்திற்கு என்றும், கிணறு தோட்டத்திற்கு உறுப்பாகவும் சொல்கிறார். இப்படி மேற்சொன்ன போஷக வஸ்துக்கள் அனைத்தும் ஒன்றும் குறை இல்லாமல் உன் திருவடிகளுக்கே என்று அறுதி இட்டு நின்றேன் என்கிறார். எம்பெருமானது திருவடியை ஓழிய வேறொன்றைப் போஷகமாக மதிப்பதில்லை என்கிறார். உன் திருவடி நிழலையே எல்லாப் பொருளுமாக ப்ரதிபத்தி பண்ணி, அத்திருவடியை நெஞ்சினால் வளைத்துக்கொண்டேன் என்பது கருத்து.

இப்படி செய்த ஆழ்வாரை நோக்கி எம்பெருமான், “இனி உமக்கு ஒரு குறையும் இல்லையே” என்று கேட்க, அதற்கு ஆழ்வார், “பிறர் பொருள், தாரகம் என்று இவற்றை நம்பி அலைந்து ஓடுகின்ற ஸம்ஸாரிகளுடன் எனக்கு இருக்க முடியவில்லை. இந்த இருப்பை ஒழித்தருள வேணும்” என்று வேண்ட, அது கேட்டு எம்பெருமான், “ஆழ்வீர்! நீர் இப்படி வேண்டலாகாது, இந்த உலக இருப்பை வேண்டுவார் எத்தனை பேர் உள்ளனர் என்று பாரும், அவர்களொடு நீரும் இந்த உலகத்தில் இருந்தால் என்ன குறை ?” என்று கேட்க, அதற்கு ஆழ்வார், ‘பலர் இங்கே இருப்பதை விரும்புகிறார்கள் என்றாலும், எனக்கு இதை ஒழித்தே அருள வேண்டும் ‘ என்று இந்த பாசுரத்தில் சொல்கிறார்.

கேழல் ஓன்றாகி, கோட்டு மண் கொண்ட என்று சொல்வது, ‘ஏனத் துருவாய் இடந்த இம் மண்ணினை தானத்தே வைத்தானால்‘ என்று (பெரியாழ்வார் திருமொழி 2.10.9) சொல்லியபடி ஊன்றி இடந்து எடுத்து உரிய இடத்தில் வைத்ததை சொல்கிறது. கொள்கையினான் என்று சொன்னது அவன் ஸ்வபாவம் என்பதை குறிக்கிறது .

ஸம்ஸார சமுத்திரத்தில் இருந்து அடியேனை எடுத்து, உன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளவல்ல வல்லமை இருப்பதனால் “கேழல் ஓன்றாகிக் கோட்டு மண் கொண்ட கொள்கை யினானே” என்றும், அந்த சேர்த்திக்கு விரோதியான கருமங்களை ஓழித்து அருளவல்ல வல்லமை இருப்பதனால் “குஞ்சரம் வீழக் கொம்பு ஓசித்தானை” என்றும் எம்பெருமானை அழைக்கின்றார். இத்தால் சம்சாரிகள் பக்கத்தில் இருந்து எடுத்து, ஸ்வஸ்த்தானமான உன் திருவடிகளில் வைத்து, அதற்கு விரோதியான கர்மங்களையும் கழித்து தர வேண்டும் என்கிறார் .

Leave a comment