திவ்ய பிரபந்தம்

Home

5.1.4 நெடுமையால் உலகு ஏழும்

பெரியாழ்வார் திருமொழி 5.1.4

த்ரிவிக்ரம அவதாரத்தாலே உலகங்களை எல்லாம் திருவடிகளால் அளந்து கொண்டவனாய் , பரிசுத்தனாய் , சர்வாதிகனானவனாய் கொடூரமான கர்மங்களை செய்யுமவனான கம்சனைக் கொன்று உன்னுடைய தகப்பனாரான வாசுதேவருடைய காலிலே பூட்டப்பட்ட வழிய விலங்கின் பூட்டை தரித்துப் போட்டவனே, சேஷபூதனான என்னை அடிமை கொள்வதற்கு சந்தேகிக்க வேண்டாம் . கூறையும் சோறுமாகிற இவற்றை உன்னிடத்துப் பெற வேண்டும் என்று விரும்புவதில்லை ; ‘தாஸ்யம்’ என்கிற அப்படிப்பட்ட ராஜகுலம் புகுகையாலே அந்தக் கூரையும் சோறும் அந்தந்த ஜென்மங்களில், வரும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

பிக்ஷைக்கு சிறிய வடிவத்திலும் , அளக்கைக்கு நெடியனானபடியும் ஏக ரூபவடிவை எடுத்து பிரமிக்க செய்தததும், கொடுக்கும் கையைக்கொண்டு ஏற்றதும், நெடுமையான திருவடிகளைக் கொண்டு அளந்ததையும் நெடுமையால் உலகு ஏழும் அளந்தாய் என்றார். நெடுக வளர்ந்த திருவடியினால் அளந்தாய் என்று சொல்லாமல், “நெடுமையால் அளந்தாய்” என்றது.

முதலில் தன்னைச் சிறியனாகவும், பின்னர் பெரியவனாகவும் ஆக்கிக் கொண்ட விதத்தினால், உனக்கு ஒரு குறையும் இல்லை என்பதை, ‘நின்மலா’ என்று குறிப்பிடுகின்றார். மேலும் சுயபிரயோஜனம் இல்லாமல், பிறர் பயனுக்காக உள்ளதாலும் குறை இல்லை என்கிறார் . அமரர்க்கு அரியானை தமர்கட்கு எளியானை (திருவாய்மொழி 10.5.9) என்பது போல் அடியார்க்கு எளிதாய் கிட்டுவதாய் இருப்பதை சொல்கிறார் . சுயபிரயோஜனம் என்றால் அரிதாகவும் பரப்ரயோஜனம் என்றால் எளிதாகவும் விருப்பத்தை சொல்கிறார் . மஹாபலியைப் போல் ஓளதார்ய (கொடுப்பதில் ) ஆசையை உடையவனோ , தேவேந்திரனைப் போல் ஐஸ்வரியத்தை விரும்பினவானோ இல்லை என்று தன்னை பற்றி ஆழ்வார் சொல்கிறார் .

‘உனது திருவடி ஸ்பர்சத்தில் விருப்பம் இல்லாதவர் தலையிலும் திருவடியை வைத்து அருளின நீ, உன் திருவடியையே பரம ப்ராப்யமாக ப்ரதிபத்தி பண்ணி இருக்கிற நீ, அடியேனை ஆட்படுத்திக் கொள்ளாமல் இருப்பது தகுதி அன்று என்று சொல்கிறார்.

“திரிவிக்கிர அவதாரத்தில் அனைவரையும் அடிமை கொண்ட நீ அடியேனையும் அடிமை கொள்ள வேண்டும்” என்று ஆழ்வார் பிரார்த்திக்க, அதற்கு எம்பெருமான், “உம்முடைய ஸ்வரூபத்தின் உண்மை எனக்கு விளங்க வில்லையே” என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், தன்னிடம் ஸ்வாதந்திரியமும் ஸ்வயபிரயோஜனமும் இல்லை என்றும் , “தேஹத்திற்காக சோறு கூறை முதலியவற்றை, நான் ஆசைப்படுவதும் இல்லை, உன்னிடத்தில் இருந்து பெற விரும்பவும் இல்லை; அடியேனை அடிமை கொண்டருள வேணும்” என்பதாய் இந்த பாடல் சொல்கிறது.

தம்மை அடிமை கொள்ளுவது பிரகிருதி ஸம்பந்தத்தையும், ஊழ்வினைத் தொடர்களையும் ஒழித்து அருளுவது என்பதை, கஞ்சனைக் கொன்றது போலப் பிரகிருதி ஸம்பந்தத்தைக் கொல்ல வேண்டும் என்றும், தந்தை காலில் விலங்கை அறுத்தது போல ஊழ்வினைத் தொடர்களை அறுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

Leave a comment