நன்மை தீமைகளொன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை யல்லால், * புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே, * உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோ நாரணா என்பன், * வன்மையாவது உன் கோயிலில் வாழும் வைட்டணவன் என்னும் வன்மை கண்டாயே.
பெரியாழ்வார் திருமொழி 5.1.3
மஹாலக்ஷ்மியின் பதியே, நாரணா என்கிற இதொன்று இல்லாமல் வேறு ஒரு நன்மை தீமைகளை அறிய மாட்டேன் ; தேவரீரை பிரயோஜனத்தின் ஆசையினால் வஞ்ச யுக்திகளை சொல்லி துதிப்பவன் அல்லன் என்று கண்டாய் . உன்னை நினைக்கத்தக்க வழி ஒன்றும் அறிகிலேன் . நிரந்தரமாக நமோ நாராயணாய என்று நின்றேன் . (எனக்கு உண்டான வன்மையாவது) உன்னுடைய கோவிலில் வாழ்கிற ஸ்ரீ வைஷ்ணவன் என்கிற வன்மை கண்டாய் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
“எம்பெருமானே! அடியேன் ‘நாராயணா! நாராயணா” என்று இந்த திருநாமத்தை இட்டு கூப்பிடுகை என்ற ஒன்றினை மட்டும் அறிவேனே தவிர, இந்த திருநாமம் சொல்வது, நன்மையாய் முடிகிறதா, அல்லது தீமையாய் முடிகிறதா என்பதையும் நான் அறிகின்றிலேன்” என்று ஆழ்வார் அருளிச் செய்கிறார். அதாவது ஒருபக்கம் அது தோஷம் என்றும் இன்னொரு பக்கம் அது குணம் என்றும் கூறுகிறார். அதே போல் ஒரு பக்கம் அபாரதமாகவும், இன்னொரு பக்கம் பார்வையில் அபராத தீர்வாகவும் இருக்கும். ‘நல்கத்தான் ஆகாதோ நாரணனை கண்டக்கால்‘ (திருவாய்மொழி 1.4.5) என்று சொன்னதுவும் அபராத தீர்வாகவோ அன்றோ. சம்சாரிகளின் குற்றங்களை பொறுத்து, அவர்களை விடமுடியாதவர் ஆயிற்றே என்பதை நாரணா என்னும் இத்தனை யல்லால், என்பதில் தெரிவிக்கிறார் .
அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர்! என்ன பயனை விரும்பி நீர் இங்கே திருநாமம் சொல்கின்றீர் ? ஏன் இப்படி கபடம் பேசுகின்றீர்?” என்று கேட்க, அது கேட்டு ஆழ்வார், “நான் ‘நாராயணா!” என்று சொல்லி உன்னைக் கபடமாகக் புகழ்வன் அல்லன்” என்று சொல்கிறார். புள்ளுவம் பேசி என்பதற்கு ‘என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்,’ (திருவாய்மொழி 5.1.4), அதாவது ‘உன்னைவிட்டு வேறு எதைக் கொள்வேன்! என்கிற கபட வார்த்தைகளைச்சொல்லியும் என்பது மேற்கோளாகச் சொல்லப்பட்டது. புன்மை என்பது பிரயோஜனம் கருதி சொல்வது , நன்மை என்பது மோக்ஷத்தை வேண்டி சொல்வது என்கிறார். பெருமக்கள் (திருவாய்மொழி 3.7.5) என்றும் ‘பேராளன் பேரோதும் பெரியோரை‘ (பெரிய திருமொழி 7.4.4) என்றும் ‘மாசூணா வான்கோலத் தமரர்க்கோன்‘ (திருவாய்மொழி 3.1.8) என்றும் உரையாசிரியர் மேற்கோள் காட்டுகிறார்.
அது கேட்டு எம்பெருமான், “நீர் ஒரு பயனையும் உண்மையாகவே விரும்பவில்லை என்றால், மோக்ஷமாகிற உயர்ந்த பலனை விரும்பி, அது பெறுகைக்கு உதவுகிற வழிகளில் முயற்சி செய்யுங்கள்” என்று சொல்ல, அது கேட்டு ஆழ்வார், “நாராயணனே! மோக்ஷப்ராப்திக்கு உதவும் நிரந்தரமாக உன்னையே எல்லா நேரங்களில் உன்னையே நினைத்து, உன் திருநாமங்களையே சொல்லி இருக்க வேண்டும், என்று சாஸ்திரங்களில் சொல்லியபடி அடியேன் அனுட்டிக்க வல்லவன் அல்லேன் ; ஒரு நொடிப் பொழுதும் வாய் மாறாமல் திருவஷ்டாக்ஷாரத்தையே அடியேன் அநுஸந்திக்க வல்வேன்; ஒரு க்ஷணம் அது மாறினாலும் எனக்கு ஸத்தை குலையுமே” என்று சொல்கிறார். அது கேட்டு எம்பொருமான், ப்ரயோஜனபரர்களுக்கு சத்தை குலையும் என்றும் ப்ரபன்னர்களுக்கு அது குலையாது என்றும் சொல்கிறார். மேலும், “ஆழ்வீர்! ஒரு க்ஷணம் திருநாமம் சொல்லாமல் இருந்தால் ஸத்தை குலையும் என்கிறீர்; ‘என் வாயால் சொன்னால் அது உனக்கு குற்றம் ஆகும் என்று சொன்னீர், இதெல்லாம் பெருத்த மிடுக்கா இருக்கிறதே ‘ என்று சொல்ல, அதற்கு ஆழ்வார், “மிடுக்கா? அந்த மிடுக்குக்கு என்ன குறை? உன்னுடைய அபிமானம் குறைவற்று இருக்கும்படி உன் கோயில் வாசலிலேயே வாழப் பெற்ற வைஷ்ணவன் என்கிற சொல்வதால் உண்டாகும் மிடுக்குக்குக் குறைவில்லை” என்பதாய் இந்த பாடல் சொல்கிறது, திவ்யதேசங்களில் வாழ்வதே சிறப்பு என்று நினைப்பதும் தெரிகிறது .
Leave a comment