சழக்கு நாக்கொடு புன் கவி சொன்னேன் சங்கு சக்கரம் ஏந்துகை யானே * பிழைப்பராகிலும், தம்மடியார் சொல் பொறுப்பதும் பெரியோர் கடனன்றே * விழிக்கும், கண்ணிலேன் நின் கண் மற்றல்லால் வேறொருவரோடு என் மனம் பற்றாது, * உழைக்கு ஓர் புள்ளி மிகையன்று கண்டாய் ஊழி ஏழுலகு உண்டு உமிழ்ந்தானே.
பெரியாழ்வார் திருமொழி 5.1.2
ஸ்ரீ பாஞ்சஜன்யத்தையும் திருவாழியானையும் தரித்த திருக்கைகளை உடையவனே, (உன்னை அன்றி மற்றவரையும் துதிக்க கூடிய ) குற்றம் உள்ள நாக்கினால், குற்றங்கள் நிறைந்த கவிகளை சொன்னேன் ; தப்பு செய்தார்களே ஆகிலும் , தம் அடியாருடைய சொல்லை பொறுத்துக் கொள்வது பெருந்தன்மை உடையவர்களுக்கு கடமை அன்றோ ; தேவரீருடைய கடாக்ஷம் ஒழிய வேறு ஒரு ரக்ஷகரை உடையேன் அல்லேன் ; (அன்றியும் ) மற்றொருவர் பக்கம் என் மனம் செல்லாது ; புள்ளிமானுக்கு ஒரு புள்ளி ஏறினால் அதிகமாகப் போகாது ; (இப்படி நீர் என்னை நிர்பந்திப்பது ஏன் என்று சொல்ல ), பிரளய காலத்தில் ஏழு உலகங்களையும் திரு வயிற்றுல் வைத்து பின்பு (வெளிநாடு ) காண உமிழ்ந்தவனே , இப்படி என்னையும் காக்க வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
எம்பெருமானே! நீ கையும் திருவாழியும் ஆக இருக்கிற இருப்புக் கண்ட நான், உன்னைக் கை விடாது இருக்க, எனது பொல்லாத நாக்கினால் சில அற்பமான பாசுரங்களைப் பாடினேன்” என்று ஆழ்வார் அருளிச் செய்ய; அதற்கு எம்பெருமான் “ஆழ்வீர்! நமது பெருமையையும் உமது சிறுமையையும் பார்த்தால், இங்ஙனே பாசுரம் பேசவும் உமக்கு யோக்யதை உண்டோ?” என்று கேட்க, அதற்கு ஆழ்வார், “அடியவர்கள் பேசும் பாசுரம் குற்றம் குறைகள் கொண்டதாக இருந்தாலும், அதனைப் பொறுக்க வேண்டிய பெருமையும் கடமையும் உனக்கு மட்டுமே உண்டு” என்று சொல்ல, அது கேட்டு எம்பெருமான், ஆழ்வீர்! அப்படி நான் பொறுக்கும்படி இருக்க, தாங்கள் சேஷ பூதரோ ‘ என்று கேட்க, அதற்கு ஆழ்வார், “உன்னுடைய கடாஷம் ஓழிய, மற்றொருவருடைய கடாக்ஷத்தை, நான் ஒரு பொருளாக மதிப்பவன அல்லேன்; உன்னைப் போல் ரக்ஷகனும் இனியனுமானவன் மற்றொருவன் உண்டாகிலும், உன்னிடத்தில் எனக்குள்ள தாஸ்யம் குணமடியாகப் பிறந்ததன்றி, மற்றவர்களிடத்து என் மனம் பொருந்தாது” என்று சொல்ல, அதற்கு எம்பெருமான் “பல குற்றங்களுக்குக் கொள்கலமான உம்மை கைப்பற்றினால் அது எனக்கு குற்றம் ஆகாதோ?” என்று கேட்க, அது கேட்டு ஆழ்வார், “எம்பெருமானே! புள்ளிமானுக்கு உடம்பில் ஒரு புள்ளி ஏறினால் என்ன, குறைந்தால் என்ன, எல்லா உயிர்களுடைய அபராதங்களைப் பொறுப்பதற்கு என்றே, காப்புக் கட்டிக் கொண்டு இருக்கிற உனக்கு, என் ஓருவனுடைய அபராதத்தைப் பொறுத்தருளுகை குற்றமாக போய் விடப் போகிறதோ?” என்று கேட்க, அதற்கு எம்பெருமான் , “இப்படி நான் அங்கீகரித்த இடம் உண்டோ?” என்று கேட்க, ஆழ்வார், ‘ஸம்ஸாரிகளில் உனக்கு அபராதம் செய்யாது இருப்பார் யாரேனும் உண்டோ? அவர்களது அபராதங்களைப் பாராதே அவர்களை நீ வயிற்றில் வைத்துக் காத்து அருளினவன் இல்லையோ? அப்படியே அடியேனையும் அங்கீகரித்து அருள வேணும் என்பதாய் இந்த பாட்டு சொல்கிறது.
Leave a comment