வாக்குத் தூய்மை இலாமையினாலே மாதவா, உன்னை வாய்க் கொள்ள மாட்டேன், * நாக்கு நின்னை யல்லால் அறியாது நான் அது அஞ்சுவன் என் வசமன்று, * மூர்க்குப் பேசுகின்றான் இவனென்று முனிவாயேலும் என் நாவினுக்கு ஆற்றேன், * காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா கருளக் கொடியானே.
சென்ற பதிகத்தில், ‘சொல்லலாம் போதே உன் நாமம் எல்லாம் சொல்லினேன்‘ (பெரியாழ்வார் திருமொழி 4.10.3) என்று திருநாமத்தின் போக்கியதையை அனுபவித்து, முன்பு ‘ஆவியே அமுதே’ என்று இதர விஷயங்களில் அலைந்து திரிந்ததை எண்ணி, திருநாம இனிமையை பல காலம் இழந்தேன் என்று வருந்தி, இனி, ‘ஆவியை அரங்க மாலை‘ (திருக்குறுந்தாண்டகம் 12) என்றும், ‘ஆவியே அமுதே என் ஆருயிர் அனைய எந்தாய்‘, (திருமாலை 35) என்றும், தன் தப்பினை பொறுத்த அருள வேண்டும், என்றும் பெரியபெருமாள் இனிமையில் தன்னுடைய மூன்று கரணங்களை (உறுப்புகளை) லயிக்கவிட்டு பாடுவதை இந்த பதிகத்தில் சொல்கிறார்.
பெரியாழ்வார் திருமொழி 5.1.1
மஹாலக்ஷ்மியின் பதியானவனே, உன்னை ஸ்தோத்திரம் பண்ணத்தக்க பரிசுத்தி என் வாக்குக்கு இல்லாமையால் உன்னை ஸ்தோத்ரம் பண்ண சக்தி அற்றவனாக நின்றேன் ; ரஸா ஞானம் உள்ள நாக்கோ எனில், உன்னை அல்லாது வாய் கொள்ள அறியாது ; அந்த நாக்கின் தோஷத்தை எண்ணி நான் பயப்படுகிறேன் ; அந்த நாக்கானது என் வசம் இல்லை ; ‘இவன் மூர்க்கர் பேசும் வார்த்தைகளை பேசுகின்றான் ‘ என்று கோபித்துக் கொள்வாயே ஆனாலும் என்னுடைய நாக்குக்கு சகிக்க முடியாது ; காக்கையின் வாயில் உண்டாகும் சொற்களையும் தங்களுக்கு நல்ல சொற்களாக (அறிவுடையார்) எடுத்துக் கொள்வார்கள் ; (அப்படியே ) சர்வ காரண பூதனாய், பெரிய திருவடியை கொடியாக கொண்டவனே , நீயும் என் சொல்லை கொண்டு அருள வேண்டும் எனபது இந்த பாடலின் பொழிப்புரை .
வாக்குத் தூய்மை இலாமையினாலே என்பது , “எம்பெருமான் ஸந்நிதியில் பொய் சொல்லுதல், இதர உலக விஷயங்களை விரும்புதல், மற்றவர்களை புகழ்தல் முதலியவையாகிற அசுத்தமானவைகளை என்னுடைய வாய்மொழியில் அளவற்று இருப்பது. பாவியேன் பிழத்த வாறென் றஞ்சி (திருகுறுந்தாண்டகம் 12), அதாவது , பாவியான நான் பிழை செய்த விதம் என்னே!“ என்று திருமங்கை ஆழ்வார் சொல்லியது இங்கே குறிப்பிடப்பட்டு உள்ளது .
அதனால், அந்த வாயின் மொழி கொண்டு, உன் பெருமைகளைப் புகழுகைக்கு நான் ஏற்றவன் அல்ல என்று தள்ளினாலும், நாக்கு ரஸம் அறிந்ததாகையால், உன்னைத் தவிர்த்து மற்றொருவரை வாயினால் சொல்ல முடியவில்லை” என்று எம்பெருமானை நோக்கி ஆழ்வார் அருளிச் செய்தார்.
அது கேட்டு எம்பெருமான், ‘ஆழ்வீர்! அப்படியானால், நீரும் அந்த நாக்குடன் கூடிச் சொல்லும்” என்று நியமிக்க, அதற்கு ஆழ்வார், “நாக்கின் தோஷத்தை நினைத்து நான் அஞ்சுகின்றேன்” என்று சொல்ல, அதற்கு எம்பெருமான், ‘ஆழ்வீர்! நாக்கு ரஸம் அறிந்ததது என்று சொன்னீர், அதன் தோஷத்தை அறிந்துள்ள நீர், அதை உமக்கு வசப்படுத்தி நியமித்துக் கொள்ளும்” என்று திருவுள்ளம் கொள்ள, என்று சொல்ல, அது கேட்டு ஆழ்வார், “அந்த நாக்கு எனக்கு வசப்பட்டு இருந்தால் அல்லவோ அதை நான் நியமிக்க முடியும், அதுதான் உனக்கு வசப்பட்டு விட்டதே” என்று சொன்னார்.
அதற்கு எம்பெருமான், “ஆழ்வீர், ‘உன்னை வாயினால் சொல்ல மாட்டேன்’ என்கிறீர், ‘நாக்கு நின்னை அல்லாது வேறு அறியாது’ என்கிறீர், ‘நாக்குக்கு அஞ்சுகிறேன் ஏன் என்றால் அது என் வசமன்று’ என்கிறீர்; இந்த வாக்கியங்கள் ஒன்றோடு ஓன்று சேருவது எங்கே ? ஆராய்ந்து பார்த்தால் நீர் பேசும் பேச்சுக்களெல்லாம் மூர்க்கர் பேசும் பேச்சாக இருக்கிறது.’ என்று சொன்னார்.
ஆழ்வார், “அது உண்மையே; என்னுடைய பேச்சுக்கள் மூர்க்கப் பேச்சுகளாகத் தோன்றும் ; அதனால் உங்களுக்கு சீற்றமும் பிறக்கும்; ஆகிலும் அதைக்கூட ஒருவாறு என்னால் ஸஹிக்க முடியும்; இந்த நாக்குப் படுத்துகிற பாடு, ஸஹிக்கவே முடியவில்லையே” என்று சொல்ல, அதற்கு எம்பெருமான், “அந்த நாக்கைக் கொண்டு என்னை நீர் புகழத் தொடங்கீனராகில், அது எனக்கு குற்றமாக முடியுமே” என்று சொல்ல, அதற்கு ஆழ்வார் “எம்பெருமானே, காக்கையினுடைய வாயில் உண்டாகும் கடினமான கத்தல்களையும், விருந்தினர் வருகை என்று நல்லதாக கொள்வாரை போல, மூர்க்கர் பேசும் பாசுரங்கள் அறிவுடையார்க்குக் குற்றமாகத் தோன்றினாலும், சில நல்லகுணமான வார்த்தைகளும் இருக்க கூடும், அடியேன் நாவினுக்கு ஆற்ற மாட்டாமல் வாய்க்கு வந்த படி சிலவற்றைப் பிதற்றினாலும், அவற்றை நீ நல்ல விதத்திலே எடுத்து கொள்ள வேணும்” என்றருளிச் செய்ய; எம்பெருமான், “ஆழ்வீர் குற்றத்தை, நல்லதாக எடுத்துக் கொள்ள வேண்டிய கடமை, எனக்கு என்ன உண்டு?” என்று கேட்க; அது கேட்டு ஆழ்வார், “உலகங்களை யெல்லாம் படைத்தவன் அல்லவோ நீ? ரக்ஷிக்கிறேனென்று கொடி கட்டிக் கிடக்கிறாய் இல்லையோ” என்று சொல்வதாய் அமைந்து உள்ளது இந்த பாட்டு.
Leave a comment