திவ்ய பிரபந்தம்

Home

4.10.7 செஞ்சொல் மறைப் பொருளாகி

பெரியாழ்வார் திருமொழி 4.10.7

செவ்விய சொல்லை உடைய வேதத்திற்கு பொருளாக நின்றவனாய், நித்யசூரிகளுக்கு தலைவனாய், எனக்கு ஸ்வாமியானவனே, சுருங்குதல் இல்லாததாய், பரம போக்யமாய், அமிர்தம் போன்ற சுவையாய் எனக்கு நின்றவனாய், ஏழு உலகங்களுக்கும் ஸ்வாமியாய், எனக்கு உபகாரகனானவனே, அரங்கத் தரவணைப் பள்ளியானே, ஒருவருக்கும் தெரியாதபடி மறைத்துக் கொண்டு வரும் ரூபத்தை உடைய எம கிங்கரர்கள் பலத்துடன் ஹிம்சித்துக் கொண்டு வந்து, என்னை பிடிக்கும் காலத்திலே ‘அஞ்சாதே’ என்று என்னை காத்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நாஸ்திகராக இருப்பவருக்கு உண்மையான அர்த்தத்தை மறைப்பதால் இது தமிழில் மறை எனப்பட்டது. இது பூர்வ பாகம், உத்திர பாகம் என்று இரண்டு பகுதிகளாக உள்ளன. பூர்வ பாகத்தில், செய்ய வேண்டிய கர்மாக்களையும், உத்திர பாகத்தில், ப்ரஹ்மனை (பரமாத்மாவை) பற்றியும் உள்ளது. இது ஆராதனையில் செய்ய வேண்டியவைகளையும் ஆராதனை செய்யப்படுபவனையும் சொல்வதால் எல்லா வேதங்களுக்கும் பொருள் இவனே என்று சொல்வது சரியே.

அமுதத்திற்கு எஞ்சல் இல் என்று சொன்னதை குறைவில்லை என்ற பொருளில் வரும். எல்லா காலங்களிலும் எல்லா தேசங்களிலும் அனுபவிக்க கூடியதை என்கிறார். என்னுடைய அமுது என்று சொல்வதால், உடலை பூண் கட்டுவது போல் உயிரை பூண் கட்டுவது என்கிறார் . இன்னமுது என்றதனால் உண்பவருக்கு திருப்தியை கொடுப்பது மட்டும் அல்லாமல், ‘அப்பொழுதைக்கு அப்பொழுது என் ஆராவமுதமே” என்றபடி அனுபவிக்க அனுபவிக்க குறைவின்றி மேலும் மேலும் வளர்வது என்று சொல்கிறார். மேல் சொன்ன நித்யஸூரிகளும் ‘அப்பால் முதலாய் நின்ற, அளப்பரிய ஆரமுதை அரங்கம் மேய அந்தணனை‘ (திருநெடுந்தாண்டகம் 14) பருகுகின்றனர். அந்த அமிர்தம் தான் அரங்கமேய அந்தணன் என்று சொல்கிறார்.

வஞ்சவுருவின் நமன் தமர்கள் என்று சொன்னது தங்கள் வரவு ஒருவற்கும் தெரியாதபடி உருவத்தை மறைத்துக் கொண்டு வரும் யம கிங்கரர்கள் என்று சொல்வதாகும்.

வேதத்திற்கு பொருளாக இருக்கும் எம்பெருமானே, நித்யசூரிகளுக்கு தலைவனே, பரம போக்கியம் ஆனவனே, அமுதே, ஏழு உலகுக்கும் தலைவனே, எனக்கு உபகாரமானவனே, எம கிங்கரர்கள் அழைத்து செல்லும் போது, அஞ்ச வேண்டாம் என்று என்னை காக்க வேண்டும் என்று ஆழ்வார் சொல்கிறார்.

Leave a comment