திவ்ய பிரபந்தம்

Home

4.10.10 மாயவனை மதுசூதனன் தன்னை

பெரியாழ்வார் திருமொழி 4.10.10

ஆச்சர்யமான விளையாட்டு லீலைகளை உடையவனாய், மது என்ற அரக்கனை அழித்தவனாய், ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாரின் கணவனாய், வைதிகர்களால் துதிக்கும்படி இருப்பவனாய், இடையர்களுக்கு எல்லாம் தலைவன் என்ற ஏற்றத்தை உடையவனாய், அடுத்தவரை ஒரு காலும் நழுவ விடாதவனாய், திருவரங்கத்திலே திருவானந்தாழ்வானாகிற திருப்படுக்கையில் பள்ளி கொண்டு அருளுகிற அழகிய மணவாளன் விஷயமாக தாம் திருவவதரித்துள்ள குடியில் எல்லோரும் புகழும்படியாகவும் ஸ்ரீ வில்லி புத்தூருக்கு நிர்வாககரான பெரிய ஆழ்வார் அருளிச்செய்த சொல் மாலையான பத்துப்பாட்டையும் பரிசுத்தமான மனதை உடையவராய் ஓத வல்லவர்கள் பழிப்பற்ற நீல ரத்னம் போன்ற வடிவழகை உடையவனுக்கு அடிமை செய்ய பெறுவார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

இந்த பதிகம் கற்பவர்களுக்கு கிடைக்கும் பலன், பழிப்பற்ற நீலமணி போன்ற வடிவையுடைய எம்பெருமானுக்கு கைங்கர்யம் என்றும் செய்ய பெறுவார்கள் என்று சொல்லி இந்த பதிகத்தை முடிக்கிறார். மேன்மைக்கு “அமரரேறு” என்பது போல, எளிமைக்கு “ஆயர்களேறு” என்று கூறுகிறார்.

மாதவனை என்று சொன்னது, ‘வடிவாய் நின் வல மார்பில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு’ என்று சர்வ காலமும் மங்களாசாசனம் செய்ய வேண்டும் படி இருப்பவன் என்று சொல்கிறார்.

பெரியபெருமாளை கிருஷ்ணாவதாரம் என்றே சொல்வதுண்டு . ‘கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயன்‘ (அமலனாதிபிரான் 10) என்றே திருப்பாணாழ்வாரும் சொன்னார். மறையோர்கள் என்று சொன்னது திருப்பாணாழ்வார் போன்றவர்களை என்று உரையாசிரியர் சொல்கிறார்.

ஆயர்கள் ஏற்றினை, அச்சுதனன் தன்னை என்று இந்த ஆழ்வார் சொன்னது போல் திருமலையில்(2), தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் ‘பச்சை மா மலை போல் மேனி பவளவாய் கமலச் செங்கண், அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே’ என்று பெரியபெருமாளை பாடி உள்ளார்.

விட்டு சித்தன் என்று சொன்னது, எங்கும் பரந்து வியாபித்து இருக்கும் சர்வேஸ்வரனை ‘அரவத் தமளியி னோடும் அழகிய பாற்கட லோடும், அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்த‘ வனை, (பெரியாழ்வார் திருமொழி 5.2.10) தன் திருவுள்ளத்தில், ‘உறகல் உறகல்‘ (பெரியாழ்வார் திருமொழி 5.2.9) என்றபடியே மங்களாசாசனம் செய்கிறார்.  

தூமணி வண்ணனுக்கு ஆளர் தாமே. என்று சொன்னது , மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு (திருப்பல்லாண்டு 1) என்று மங்களாசாசனம் செய்பவர்கள், பரமபதத்தில் ‘சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே‘ (திருப்பல்லாண்டு 12) என்றபடி மங்களாசாசனம் செய்து கொண்டு இருப்பார்கள் என்கிறார் .

Leave a comment