தண்ணென வில்லை நமன் தமர்கள் சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர், * மண்ணொடு நீரும் எரியும் காலும் மற்றும் ஆகாசமுமாகி நின்றாய், * எண்ணலாம் போதே உன் நாம மெல்லாம் எண்ணினேன் என்னைக் குறிக் கொண்டு என்றும் * அண்ணலே நீ என்னைக் காக்க வேண்டும் அரங்கத் தரவணைப் பள்ளி யானே.
பெரியாழ்வார் திருமொழி 4.10.6
எம கிங்கரர்கள் தயை இல்லாதவர்களாய் மிகவும் கொடிய தண்டனைகளை கொடுப்பார்கள். பூமியும் தண்ணீரும், அக்கினியும், வாயுவும் ஆகாசமுமாகிற பஞ்ச பூதங்களும் காரிய ரூபமான உலகம் தானும் உனக்குப் பிரகாரமாக, நீ அவற்றுக்கு பிரகாரியாய் கொண்டு நின்றவனாய் , சர்வஸ்வாமியானவனே , அரங்கத் தரவணைப் பள்ளியானே , அனுசந்திக்க யோக்கியதை உண்டான காலத்திலேயே உன்னுடைய திருநாமங்களை எல்லாம் எனக்கு தாரகமாகவும் போக்யமாகவும் அனுசந்தித்தேன். பல்லாண்டு பாடுமவனான என்னை தேவரீர் எப்போதும் திருவுள்ளம் பற்றி என்னை ரக்ஷித்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
பூமியும், நீரும், வாயுவும், காற்றும், நெருப்பும் ஆகிய பஞ்ச பூதங்களும் மற்றும் எல்லா பொருட்களும் ஆனவனே, சர்வ சுவாமி ஆனவனே, அரவணை பள்ளியானே, யம கிங்கரர்கள் இரக்கமற்றவர்களை கொண்டு மிகவும் கொடிய தண்டனைகளை கொடுப்பவர்கள். அப்படிபட்ட தண்டனைகளுக்கு ஆளாகாதபடி, என்னால் முடிந்த இப்பொழுது, உன் திரு நாமங்களை சொல்லி உள்ளேன்; இதை நீ திருவுள்ளத்தில் கொண்டு எப்போதும் அடியேனை காக்க வேண்டும் என்று கூறுகிறார்.
தண்ணென வில்லை என்று சொன்னது, திருமங்கை ஆழ்வார் பெரிய திருமொழியில் (1.6.5)ல் சொல்லியபடி கடுஞ் சொலார்க் கடியார்க் காலனார் தமரால் , அதாவது , க்ரூரமான சொற்களை உடையராய் க்ரூரமான செய்கைகளை உடையரான யம கிங்கரர்கள் என்பது குறிப்பிடப் பட்டுள்ளது.
சாலக் கொடுமைகள் செய்யா நிற்பர், என்பதை சுவாமி நம்மாழ்வார் அருளிய ‘தலைப்பெய் காலம் நமன்தமர் பாசம்விட்டால், அலைப் பூணுண்ணும்’ (திருவாய்மொழி 3.2.10), அதாவது எம கிங்கரர்கள் பாசக்கயிற்றை விட்டால், அலைச்சல் படுகிற அந்த துயரமானது என்று விவரித்ததுடன் நினைவில் கொள்ளலாம்.
உன் நாம மெல்லாம் எண்ணினேன் என்று சொல்வது,
- பெரியாழ்வார் அருளிய பெரியாழ்வார் திருமொழி (5.1.3)ல் ‘நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நார ணாஎன்னும் இத்தனை யல்லால்‘ என்று சொல்வதும்,
- சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே (திருப்பல்லாண்டு,12) என்று சொல்வதும்,
- உண்ணா நாள் பசியாவது ஓன்றில்லை ஓவாதே நமோ நாரணா என்று எண்ணா நாளும் இருக்க ….. பட்டினி நாளே (பெரியாழ்வார் திருமொழி 5.1.6) சொல்வதும் இந்த ஆழ்வார் எப்போதும், திருநாராயண என்ற திருமொழியை சொல்லியதால், நாராயண பதத்தில் சகல நாமங்களும் அடங்கி இருப்பதால், எல்லா திருநாமங்களை சொல்லியதாயிற்று .
Leave a comment