திவ்ய பிரபந்தம்

Home

4.10.5 பையர வினணைப் பாற்கடலுள்

பெரியாழ்வார் திருமொழி 4.10.5

க்ஷீராப்தியில் (திருப்பாற்கடலில்) பரந்த படங்களை உடைய திருவனந்தாழ்வானாகிற இனிய படுக்கையின் மேலே பள்ளி கொள்கின்ற பரம சேஷியானவனே , அரங்கத் அரவணை பள்ளியானே , சகல ஆத்மாக்களும் தன்னை அடைந்து உஜ்ஜீவிக்கைக்கு உறுப்பாக லோகங்களை படைக்க விரும்பி, சதுர்முக பிரம்மாவை திரு நாபி கமலத்தில் தோற்றுவித்த நீ பூமியில் உள்ள மனிதர்கள் நம்முடைய கட்டளையான சாஸ்த்ர மரியாதையில் நிற்க மாட்டார்கள் என்று திருவுள்ளம் பற்றி அவர்கள் மீறி நடக்கும் காலத்தில் இறுதிக்கு ஈடான காலனையும் உடனே படைத்தாய் . பரமபந்துவானவனே! இனி மங்களாசாசனபரனான அடியேனை எம கிங்கரர்களால் வரும் நலிவில் அகப்படாதபடி காப்பாற்ற வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பையர வினணைப் பாற்கடலுள் பள்ளி கொள்கின்ற பரம மூர்த்தி என்று சொன்னது, சுவாமி நம்மாழ்வார் திருவாய்மொழி (7.8.4)ல் கூறியது போல், ‘உள்ளப் பல் யோகு செய்தியிவை யென்ன உபாயங்களே‘ என்று திருவுள்ளத்திலே பலவகைப்பட்ட ரக்ஷிக்க உபாயங்களைச் சிந்தித்து கண் வளர்ந்திருக்கின்ற பரம சேஷியானவனே என்று சொல்கிறார்.

பரமமூர்த்தி என்று சொன்னது, “மூர்த்தி சப்தம் ஐச்வர்யத்துக்கும் விக்ரஹத்துக்கும் வாசகமாகையாலே, இவ்விடத்தில் ஐச்வர்ய வாசகமாய்க் கொண்டு,சேஷித்வத்தைச் சொல்லுகிறது” என்ற விளக்கம் அறியத் தக்கது. சேஷித்வம் என்பது, எம்பெருமான் ஒருவனுக்கே கைங்கர்யம் செய்து அவனை மட்டுமே அண்டி இருப்பது.

தனது கட்டளையான சாஸ்திரங்களை மீறி சுயேச்சையாக கபட நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள், இவ்வுலகத்தவர்கள் என்று எம்பெருமான் திருவுள்ளத்தில் கொண்டு, அவ்வப்போது அவரவர்கள் செய்யும் பாவங்களுக்கு ஈடாக தண்டனை கொடுத்து இவ்வுலகைக் காக்க வேணும் என்ற கருணையினால், அதற்காக யமனையும் படைத்து அருளினது சொல்லப்பட்டது.

வைய மனிசரைப் பொய்யர் என்று சொல்ல வந்தது வைய மனிசரைப் பொய் என்று குறைத்து சொல்லப்பட்டது.

Leave a comment