திவ்ய பிரபந்தம்

Home

4.10.4 ஒற்றை விடையனும்

பெரியாழ்வார் திருமொழி 4.10.4

ஒப்பற்ற ரிஷப வாகனரான ருத்ரனும் சதுர்முக பிரம்மாவும் தேவரீரை அறிய முடியாதபடி பெருமையை உடையவனாய் ஒன்றொழியாதபடி சகல உலகங்களுக்கும் நீயேயாய் மூன்று எழுத்து ஆன (மூன்று அக்ஷ்ரங்களால் ஆன) ஓம் என்ற வார்த்தைக்கு அர்த்தமானவனாகக் கொண்டு சர்வ காரண பூதனாய் இருக்குமவனே, அரங்கத்தரவணைப் பள்ளியானே; எம கிங்கரர்கள் இவனுக்கு ஆயுள் முடிந்தது என்று நினைத்து பிடிக்கிற பிடியில் அஞ்சும்படியாக பிடிக்கையில், அடியவர்களுக்கு ரக்ஷகனான நீ என்னை அவர்கள் கையில் காட்டிக் கொடுக்காமல் ரக்ஷித்து அருள வேண்டும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நுண்ணுணர்வில், நீலார் கண்டத் தம்மானும்‘ (திருவாய்மொழி 6.10.8) என்கிறபடி ப்ரஹ்ம பாவனை தலையெடுக்கும் போது, தத்துவத்தை நேரடியாக தரிசிக்கவல்ல சூஷ்ம ஞானத்தை உடைய ஒற்றை ரிஷப வாஹனனும் என்று அவனது சிறப்பை சொல்கிறது. சிவபிரான் ஒற்றை என்று சிறப்பித்துக் கூறப்பட்டான்.

அடுத்து பிரம்மன் . எம்பெருமானின் திருநாபிக் கமலத்திலே பிறந்து, பிதாவான எம்பெருமான் தன்னாலே நான்கு வேதங்களையும் கொடுக்கப்பட்டவனாய், ‘அமரர்க்கும் அறிவு இயந்தும்‘ (திருவாய்மொழி 1.1.8) சொல்லியபடி தேவர்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும் ஏற்றத்தை உடையவன் என்று அவன் பெருமையும் சொல்லப்பட்டது.

இப்படிப்பட்ட சிறப்புகள் உடைய ஒப்பற்ற சிவனும், பிரம்மனும், உன்னை அறியாத வண்ணம், பெருமை பொருந்தியவனே என்று விஷ்ணுவுடைய பரம ஸ்வரூபத்தை தானும், ருத்திரனும், மற்றும் உண்டான தேவர்களும் ரிஷிகளும் அறியார் என்று ப்ரஹ்மமா சொன்னது இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையே திருமழிசை ஆழ்வாரும் நான்முகன் திருவந்தாதி 8.3ல் ‘கார்செறிந்த கண்டத்தான் எண் கண்ணான் காணான், அவன் வைத்த பண்டைத் தானத்தின் பதி’‘ என்று அவன் எழுந்து அருளி இருக்கும் தேசம் உட்பட அறிய மாட்டார்கள் என்றார்.

ஒன்றொழியாதபடி எல்லா உலகங்களும் நீயே, மூன்று அக்ஷரமான பிரணவ ஸ்வரூபி ஆனவனும், ஸர்வ காரணமானவனே, அரங்கத்து அரவு அணைப் பள்ளியானே, யம கிங்கரர்கள், இவனுக்கு ஆயுள் காலம் முடிந்துவிட்டது, என்று நினைத்து, பிடிக்கிற பிடியில் அஞ்சும்படி, பிடிக்கப் போகிற அன்றைக்கு, நீ என்னை காக்க வேண்டும் என்று சொல்கிறார்.

Leave a comment