திவ்ய பிரபந்தம்

Home

4.9.10 செருவாளும் புள்ளாளன்

பெரியாழ்வார் திருமொழி 4.9.10

தானே போர் செய்ய வல்ல பெரிய திருவடியை (கருடன் ) ஆளுமவனாய், லீலாவிபூதியை ஆளுமவனாய், அடியவர்களின் விரோதிகளின் மேல் சண்டை செய்யும் ‘நந்தகம் ‘ என்ற பெயரினை உடைய வாளினை உடையவனாய் , ஒப்பற்ற கொற்ற வாளை உடையவனாய் , நான்கு வேதங்களையும் ஆளுமவனாய் , யுத்தத்தில் முதுகு காட்டி ஓடாத படை வீரர்களைக் கொண்டவனாய் , சீர்மையோடு கூடின கொடையை உடையவனாய் , இரவு பகளாகிய காலங்களுக்குத் தலைவனாய் , என்னை ஆள்கின்றவனாய், சப்த லோகங்களாகிய பெரிய க்ஷேத்ரங்களை ஆளுமவனாய் பெரிய பிராட்டியாரை திவ்ய மஹிஷியாக உடையவனாய் திரு உள்ளத்தில் உஃப்ப்போடு திருக்கண் வளர்ந்து அருளுகின்ற கோவில், திருவரங்கம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

அஸுர ராக்ஷசர்களோடு போர் புரியுமிடத்து, அந்த யுத்தத்தை தானே போர்ச்செய்யவல்ல பெரிய திருவடியின் (கருடன்) தோள் மேல் அமர்ந்த எம்பெருமான் என்பதை செரு ஆளும் புள் என்று சொல்லி, பெரிய திருவடிக்குத் தலைவன் என்றார்; ‘பாறிப்பாறி அசுரர் தம் பல் குழாங்கள் நீறெழ, பாய்பறவை யொன்று ஏறி வீற்றிருந்தாய் ‘ (திருவாய்மொழி 4.9.8) என்று நம்மாழ்வார் கூறியதை இங்கே குறிப்பிடலாம். ‘புகழ்கின்ற புள்ளூ ர்தி போரரக்கர் குலம் கெடுத்தான்‘ (திருவாய்மொழி 10.6.9) என்று சொல்லியபடி அசுரர்களை அழித்த புகழ் எல்லாம் பெரிய திருவடிக்கே என்றாலும் , அவனை வாகனமாகக் கொண்டவன் என்ற பெருமை இவனுக்கு என்கிறார் .

நித்யஸூரியான பெரிய திருவடியை வாகனமாய் உடையவன் என்றதனால், நித்ய விபூதி நாயகத்வம் சொல்லப்பட்டது. லீலா விபூதி நாயகத்வம் சொல்ல மண்ணாளன் என்று கூறுகிறார். மண்ணாளன் என்று சொன்னதால் அடியவர்களையும் அடியவர் இல்லாதவர்களையும் சேர்த்து அனைவரையும் ஆளுமவன் என்கிறார். நித்யவிபூதி சொல்லும்போது பெரியதிருவடியைச் சொல்லி அடியவர்களை ரக்ஷிப்பதற்கு காரணமானாக இருக்கும் வாகனம் சொல்லப்பட்டது . இங்கு அடியவர்களின் விரோதிகளோடு சண்டை செய்ய நந்தகம் என்ற வாள் சொல்லப்பட்டது .

ஆயுதத்தினால் அழிக்க முடியாதவைகளை அழிப்பதற்குப் பரிகாரமான வேதங்களை ஆளுமவன் என்பதை மறையாளன் என்பதன் மூலம் தெரிவிக்கிறார். எனவே, விரோதிகளை அழிப்பது என்பது, அஸ்திரத்தாலும் சாஸ்திரத்தாலும் என்கிறார்.

சிறந்த ஔதார்ய முடையன் என்பதை விழுகை ஆனான் என்கிறார். இரவு, பகல் மற்றும் தனக்கும் தலைவன் என்று கூறுகிறார். ‘எயிற்றிடை மண் கொண்ட எந்தை, இராப்பகல் ஓதுவித்து என்னைப் பயிற்றிப் பணிசெய்யக் கொண்டான்‘ (பெரியாழ்வார் திருமொழி 5.2.3) என்கிறபடி தானே திருத்தி என்னை ஆள்கின்றான் என்கிறார் . அதாவது ‘பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற வெம்பெருமான்’ (நாச்சியார் திருமொழி 11.3) என்கிறபடி அலைகள் எறிகிற கடல்களால் சூழப்பட்ட இந்த உலகமும் பரமபதமும் ஒரு குறையும் வராதபடி ஆள்கின்ற எம்பெருமான் என்கிறார் .

பெரிய பிராட்டிக்கு தலைவன் என்றும், அப்படிபட்ட எம்பெருமான் திருப்பாற்கடல் முதல் உள்ள எல்லா திவ்யதேசங்களைக் காட்டிலும், உகந்து கண்வளரும் இடம் திருவரங்கம் என்று சொல்லி இந்த பாடலை முடிக்கிறார்.

Leave a comment