திவ்ய பிரபந்தம்

Home

4.9.8 உரம் பற்றி இரணியனை

பெரியாழ்வார் திருமொழி 4.9.8

செழிப்பை உடைய தாமரைப் பூவானது, திருவுலகு அளந்து அருளினபோது உயர எடுத்த திருவடிகளைப் போலே, கிளர வளர்ந்து பிரகாசிக்க வரம்பு சேர்ந்து விளைந்து நிற்பதான கதிரை உடைய செந்நெற்களானவை தாள்களை நீட்டி தலை வளைந்து நிற்கும் குளிர்ந்த திருவரங்கமானது ; தேவர்களால் பெற்ற வர பலத்தை உடைய ஹிரண்யனை திரு உகிர்களின் கூர்மையால் அவனுடைய அழகிய மார்விலே மறுபாடு ஏற்படும் படியாக ஊன்றி கீரீடமானது பிதுங்கும்படியாகவும் வாய் அலறும்படியாகவும் தலையைப் பிடித்து நெரித்து ஆரவாரம் செய்தவன் வர்த்திக்கின்ற கோவில் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .

தேவர்களிடத்துப் பெற்ற வரங்களின் வலிவையும் தனது தோள் வலியையும் நினைத்து ‘நமக்கு ஒருவராலும் அழிவு நேராது’  என்று துணிந்து, தனக்கு வரமளித்த தேவர்களோடும், மற்றுள்ளாரோடும் வித்யாசம் இன்றி, அனைவரையும் அடக்கி, அவர்களை தன் கீழாக்கி ‘தன்னுடைய நாமம் ஓழிய, எம்பெருமானது திருநாமம் நாட்டில் இருக்க கூடாது’ என சொல்லி, பள்ளியிலோதி வந்த தன் சிறுவனான ப்ரஹலாதனை, (பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன் வாயில் ஓராயிர நாமம், ஒள்ளியவாகிப் போத‘ பெரிய திருமொழி 2.3.8) பல வகைகளால் துன்புறுத்திய இரணியன், ஒருநாள் ‘பிள்ளாய்! நீ சொல்லுகிறவன் எங்கு உளன்?’ என்று தன் மகனை கேட்க, ‘அவன் எங்குமுளன்’ (எங்கும் உளன் கண்ணன் என்ற மகனைக் காய்ந்து, இங்கில்லையால் என்று இரணியன் தூண் புடைப்ப, அங்கு அப்பொழுதே அவன் வீயத் தோன்றிய, என் சிங்கப் பிரான் பெருமை ஆராயும் சீர்மைத்தே – திருவாய்மொழி 2.8.9) என்று விடைகூற, அது கேட்ட இரணியன் ‘இத்தூணிலே உளனோ?’ என்று சொல்லித் தான் அளந்து கட்டி வைத்ததொரு துணை உடைக்க, (அளந்திட்ட தூணை அவன் தட்ட ஆங்கே வளர்ந்திட்டு வாள் உகிர்ச் சிங்க உருவாய்பெரியாழ்வார் திருமொழி 1.7.9) எம்பெருமான் தனது அடியவனுடைய சொல்லை மெய்ப்பிப்பதற்காக, அதே தூணில் நரசிங்கவுருவாய் புறப்பட்டு, ‘ஆயுதங்களால் சாக மாட்டேன்’ என்று வரம் வாங்கியதால் , ஆழி முதலானவை அழகுக்கு என்று இருந்திட, தனது திரு உகிர்களையே (நகங்களை) ஆயுதமாகக் கொண்டு, ‘அடித்த கை பிடித்த பெருமாள்’ என்னும்படி, அவனுடைய மார்பை கீறி, தலையில் கிரீடம் பொடிபடும்படியாகவும் , கண்கள் பிதுங்கும் படியாகவும், வேதனைகள் பொறுக்க முடியாமல், வாய் விரியும் படியாகவும், தலையைப் பிடித்து நெரித்தமையைக் கூறுகின்றார். இப்படிப்பட்ட விரோதிகள் ஒழித்து அடியவர்களைக் காக்கும் தேசம் இது என்கிறார் .

தேவர் முதலானார் திரண்டு வந்து காலை நீட்டி தலை வணங்கித் தண்டனிட்டு கிடப்பதை, எல்லோருக்கும் தாபங்களை தீர்த்து குளிர்விக்கும் திருவரங்கம் என்று பாடல் இறுதியில் உள்ள வரிகள் கூறுகின்றன என்று கொள்ளலாம்.

Leave a comment