குறட் பிரமசாரியாய் மாவலியைக் குறும்பதக்கி அரசு வாங்கி, * இறைப்பொழுதில் பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் கோயில், * எறிப்புடைய மணி வரை மேல் இள ஞாயிறு எழுந்தாற் போல் அரவணையின் வாய், * சிறப்புடைய பணங்கள் மிசைச் செழுமணிகள் விட்டெறிக்கும் திருவ ரங்கமே.
பெரியாழ்வார் திருமொழி 4.9.7
மாவலியினிடத்து மூன்றடி மண் வாங்கி, இரண்டிகளால், கீழ் மேல் உலகங்கள் அனைத்தையும் அளந்து கொண்டு, மூன்றாம் அடிக்கு இடம் கிடைக்காமல், அதனைத் தருமளவும் சிறை வைப்பாரைப் போலே அவனைப் பாதாளத்தில் கிடக்கும்படி தள்ளியதை கூறுகின்றன.
மிக்க ஒளி உடைய ஒரு நீல ரத்ன மலையின் மேல் பால சூரியர்கள் உதித்ததை போலே திருவானந்தாழ்வான் இடத்தில் அழகியதான படங்கள் மேல் உண்டான செழுமை தங்கிய ரத்தினங்கள் மிகவும் விளங்குகின்ற திரு அரங்கம் ; மஹாபலி இடத்திலே வாமன ப்ரஹ்மச்சாரியாய் சென்று அவனுடைய செருக்கை அடக்கி , ராஜ்யத்தை நீரேற்று வாங்கி , ஒரு நொடிப்பொழுதில் பாதாள லோகத்தை அவனுக்கு இருப்பிடமாகக் கொடுத்து இந்திரன் மனோரதத்தை ஈடு செய்தோம் என்று சந்தோஷித்த என் ஸ்வாமியானவன் வர்த்திக்கின்ற கோவில் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
‘புலங்கொள் மாணாய், நிலம்கொண் டானே‘ (திருவாய்மொழி 1.8.6) ல் கூறியபடி கண் முதலிய இந்திரியங்களைக் கவர்ந்து கொள்கின்ற மநோஹரமான வாமந ப்ரம்மசாரி சேஷத்தையுடையவனாய், பெரிய வடிவு சுருங்கினதையும், கண்ணாலே முகந்து அனுபவிக்கலாம்படி, வந்தான் என்கிறார்.
பிரமசாரியாய் என்று சொன்னது ‘பொங்கிலங்கு புரிநூலும் தோலும் தாழப் பொல்லாத குறளுருவாய்’ (பெரிய திருமொழி, 4.4.7) என்று திருமங்கை ஆழ்வார் சொன்ன வினீத வேஷம் ஆகும். ‘அவன் கொடுக்க உகந்து இருப்பானாகில், நாம் சென்று இரக்கக் கடவோம்’ என்று பிரம்மச்சாரியாக சென்றான் .
மாவலியை என்றது, ‘கோவாகிய மாவலியை ‘ (திருவாய்மொழி 9.8.7)ல் என்று சொன்ன, பிரபுவாகத் தன்னை தீர்மானித்திருந்த மஹாபலியைச் சொல்கிறது .
அரசு வாங்கி என்றதில் ‘கொள்வன் நான் மாவலி மூவடி தா’ (திருவாய்மொழி, 3.8.9) என்று சில காரியங்களை செய்து, மாவலியின் மனதை இளசு பண்ணி, சுக்கிராதிகள், ‘இவன் தேவ கார்யம் செய்ய வந்தான், உன்னிடம் சர்வத்தையும் அபகரிக்க வந்தான்’ என்று சொன்ன வார்த்தைகளையும் அவன் செவியில் ஏற்றாமல் செய்து , தான் செய் என்று சொன்னதை சொல்கிறது. ‘பொற்கையில் நீரேற்று, எல்லாவுலகும் அளந்து கொண்ட எம்பெருமான்‘ (நாச்சியார் திருமொழி 11.5) என்று சொன்னதும் இதில் அடங்கும் .
இறைப்பொழுதில் என்றது கால விரயம் செய்யாமல், அல்ப காலத்தில் இந்திரன் அரசை அவன் பக்கம் இருந்து திரும்ப வாங்கினான் என்கிறார் .
பச்சைமாமலை போல் மேனியனான அழகிய மணவாளன், சாய்ந்தருளப் பெறுகையால், அத்திருமேனியினது நிழல் படுவதால் கறுத்துத் தோன்றுகின்ற, திருவனந்தாழ்வானுடைய படங்களின் மேல் செழுமணிகள் ஒளியோடு இருப்பதை ஒரு நீல ரத்ன பர்வதத்தின் மேல் பல இளம் சூரியர்கள் உதித்தாற் போல் இருக்கிறது என்கிறார்.
பாதாளம் கலவிருக்கை கொடுத்து உகந்த எம்மான் என்று சொன்னது ‘ஒருகுறளாய் இருநிலம் மூவடி மண் வேண்டி உலகனைத்தும் ஈரடியால் ஓடுக்கி, ஒன்றும் தருகவெனா மாவலியைச் சிறையில் வைத்த தாடாளன் ‘ (பெரிய திருமொழி 3.4.1) ல் சொல்லியபடி மற்ற ஒரு அடி தரும்வரையில் சிறை வைப்பாரைப்போலே , பாதாளத்தை அவனுக்கு இருப்பிடம் ஆக்கியத்தைச் சொல்கிறார்.
Leave a comment