மைத்துனன் மார் காதலியை மயிர் முடிப்பித்து அவர்களையே மன்னராக்கி, * உத்தரை தன் சிறுவனையும் உயக் கொண்ட உயிராளன் உறையும் கோயில், * பத்தர்களும் பகவர்களும் பழமொழி வாய் முனிவர்களும் பரந்த நாடும், * சித்தர்களும் தொழுது இறைஞ்சத் திசை விளக்காய் நிற்கின்ற திருவரங்கமே.
பெரியாழ்வார் திருமொழி 4.9.6
திரௌபதியை குழல் முடிக்க வைத்து, பாண்டவர்களை அரசர்களாக்கி, உத்திரையின் மகனை உயிர்ப்பித்தவன் நித்தியவாசம் செய்கின்ற தேசம் என்கிறார்.
பக்தர்களும் சன்யாசிகளும் பழைய மொழியாக இருந்த வேதத்தை வாக்கில் உடையவரான ரிஷிகளும் பரந்த நாட்டில் உள்ளாறும் நித்ய முக்தர்களும் அஞ்சலி செய்து சாஷ்டாங்கப் பிராணாமம் பண்ணும் எல்லா திக்குகளுக்கும் விளக்காய் நிற்கிற அரங்க நகரமானது ; மைத்துனன்மார்கள் ஆன பாண்டவர்களுக்கு பிரியமான திரௌபதியை குழல் முடிய வைத்து , அவர்களையே அரசாள வைத்து அபிமன்யுவின் மனைவியான உத்தரை என்பவளுடைய பிள்ளையாய் கரிக்கட்டையாய் கிடந்த பரிக்ஷித்தை திருவடிகளால் தீண்டி உயிர் பெற்று எழுந்திருக்கும்படி பண்ணினவனாய் எல்லா உயிர்களுக்கும் நாத்தனானவன் நித்தியவாசம் பண்ணுகிற கோவில் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
பாண்டவர் மனைவியாகிற த்ரௌபதியானவள், தன்னைச் சபையில் மான பங்கம் செய்ய மயிரைப் பிடித்திழுத்த துச்சாதனன் மீதும், அவனுக்கு துணையாய் இருந்த மற்ற துரியோதன சகோதர்கள் மீதும், கோபம் கொண்டு, இவர்கள் உயிர் மாய்த்த பின்பே இந்த விரிந்த கூந்தலை முடிவேன் ” என்ற சபதம் செய்து, பதினான்கு வருஷம் காட்டில் அந்த கலைந்த கூந்தலோடும், பின்பு நாட்டில் சேர்ந்தபோதும் விரிந்த தலையும் தானுமாகத் திரிகிறதை கண்ட கண்ணன், “நாம், இவள் சபதத்தின்படியே காரியம் செய்து கொடுத்து, இவள் கூந்தலை முடிந்ததால்தான், தான் ‘சரணாகத ரக்ஷகன்’ என்ற நாம் படைத்துள்ள பெயர் பிழைக்க வல்லது” என்று திருவுள்ளம் கொண்டு, அவ்வண்ணமே செய்யக் கருதி, தூது நடத்தியது, தேர் முன் நின்று பாண்டவர்களுக்குத் துணை செய்து, அவளது ஸங்கல்பத்தை ஈடேற்றி, கூந்தலை முடிய வைத்தது, பாண்டவர்களையே அரசாள வைத்தது போன்றவற்றை சொல்கிறார்.
கண்ணன் தூது சென்றதும் தேர் முன் நின்றதும், பிரபத்தி உபதேசம் பண்ணினது எல்லாம் பாஞ்சாலியின் கூந்தலை முடிப்பதற்காகவே என்பது அறியத் தக்கது. ‘தூது சென்றாய் குரு பாண்டவர்க்காய் அங்கோர், பொய் சுற்றம் பேசிச் சென்று, பேதம் செய்து எங்கும் பிணம் படுத்தாய்‘(பெரியாழ்வா திருமொழி 5.3.4) என்று இதே ஆழ்வார் சொல்வது தூது சென்றதை சொல்வதற்காக ஆகும். ஆயுதம் எடுக்க முடியாது என்றதால் சாரதியாக சென்றது ; ‘கொல்லா மாக்கோல் கொலை’செய்து பாரதப்போர், எல்லாச் சேனையும் இரு நிலத்தவித்த வெந்தாய்,’ (திருவாய்மொழி, 3.2.3) என்பதற்காக அர்ஜுனனுக்கு உபதேசம் செய்தது.
“மருமகன்றன் சந்ததியை” என்ற பெரியாழ்வார் திருமொழி 4.8.3 பாட்டின் உரையில் உத்திரை சம்பந்தமான வரலாறு கூறபட்டுள்ளது.
பத்தர் என்று சொன்னது ‘மாலை உற்றெழுந்து ஆடிப் பாடித் திரிந்து அரங்கன் எம்மானுக்கே, மாலையுற்றிடும் தொண்டர்‘ (பெருமாள் திருமொழி 2.8) என்பது போல் ஆகும். அதாவது மோகித்து மயங்கி, இருந்த இடத்தில் இல்லாமல் எழுந்து கூத்தாடி வாயாரப்பாடி, திவ்ய தேசங்கள் எல்லாம் சென்று எமக்கு ஸ்வாமியான அரங்கநாதன் விஷயத்தில் பித்துப்பிடித்து நிற்கின்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்கிறார்.
பகவர்களும் என்று சொன்னது ‘சிற்றெயிற்று முற்றல் மூங்கில் மூன்று தண்டர் ஒன்றினர், அற்ற பற்றர்‘ (திருச்சந்த விருத்தம் 6.2) என்ற சந்நியாசியை என்கிறார். அதாவது, தூய்மையான, பக்தியுள்ள, காமம் இல்லாத, மூன்று தடிகளைப் பிடித்திருக்கும் சந்நியாசிகள் என்கிறார் .
Leave a comment