ஆமையாய்க் கங்கையாய் ஆழ்கடலாய் அவனியாய் அருவரைகளாய் நான்முகனாய், * நான்மறையாய் வேள்வியாய்த் தக்கணையாய்த் தானுமானான், * சேம முடை நாரதனார் சென்று சென்று துதித்து இறைஞ்சக் கிடந்தான் கோயில் * பூமருவிப் புள்ளினங்கள் புள்ளரையன் புகழ் குழறும் புனல ரங்கமே.
பெரியாழ்வார் திருமொழி 4.9.5
அன்னங்கள் முதலிய பறவை கூட்டங்களானவை நீர்ப்பூ முதலிய பூக்களில் பொருந்தி நின்று தங்கள் ஜாதிக்கு ராஜாவான பெரிய திருவடியின் கீர்த்தியை பேசும் நீர்வளப்பத்தை உடைய திரு அரங்கமானது ; கங்கா ஜலத்துக்குள்ளே ஆமையாயும் , அந்த ஆமை முதலியவற்றிற்கு வாசஸ்தலமாக கங்கையாகவும், ஆழமாக கங்கை முதலிய நதிகளுக்கு புகலிடமாக சமுத்திரமாகவும், பூமியாயும், பெரிய மலைகளாகவும், சதுர்முக ப்ரஹ்மாவாகவும், நான்கு வேதங்களாகவும், யாகங்களாகவும் , (அந்த யாகங்களுக்கு வீர்யம் கொடுக்கும் தக்ஷிணையாகவும், அந்த தக்ஷிணைகள் மூலம், எல்லோர்க்கும் அவரவர்கள் விரும்பின பலத்திக் கொடுக்கும் அசாதாரண விக்ரக விசிஷ்டனாக தானும் ஆனவன், ப்ரஹ்ம பாவ நிஷ்ட்டை (க்ஷேமங்கள் உடைய ) ரக்ஷை உடைய ஸ்ரீ நாரத பகவான் பல காலும் வந்து ஸ்தோத்ரங்கள் பண்ணி செவிக்கும்படியாக கண் வளர்ந்து அருளுபவர் வாசஸ்தலம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
ஸ்ரீநாரத் மஹர்ஷிக்குத் தன்னுடைய ஸர்வாதிகத்ததுவத்தை விளங்கச் செய்வதற்காக, ஸ்ரீ ஹரி வம்சத்தில் 159வது அத்யாயத்திலே 88 ஸ்லோகங்களால் நாரதர் சொன்ன ஒரு சரித்திரத்தை, இந்த பாடலின் வியாக்யானத்தில் உரையாசிரியர் விளக்குகிறார். (அதனைச் சுருக்கமாகச் சொல்ல முயற்சிக்கிறேன் )
துரியோதனன் ஹஸ்தினாபுரத்தில் வாரண நகரத்தில் ஒரு வேள்வியைச் செய்தான், மன்னர்கள் அனைவரும் அந்த நகரத்திற்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு ஜனார்த்தனனையும், அவனது மகன்களையும், அவனது செழிப்பையும், கடற்கரையில் அமைந்துள்ள துவாரகா நகரையும் கேள்விப்பட்ட அந்த மன்னர்கள், விருந்தினர்களை விரும்புபவனான கிருஷ்ணனைக் காண அவனது அரண்மனைக்குச் சென்றனர்.
துரியோதனன், பாண்டவர்கள், திருஷ்டத்யும்னன் ஆகியோரும், பாண்டிய, சோழ, கலிங்க, மற்றும் பிற நாடுகளின் மன்னர்கள் ஆகியோரும், பதினெட்டு படைவீரர்களும், கிருஷ்ணனின் நகரத்தை அடைந்தனர். அந்த மன்னர்கள், ரைவதக மலையின் அருகில் தங்கள் தொண்டர்களுடன் தங்கள் தங்களுக்குரிய இடங்களில் தங்கினர்.
தாமரைக் கண்ணனான ரிஷிகேசன், முன்னணி யாதவர்களுடன் சேர்ந்து தானும் அவர்களிடம் சென்றான். அந்த மன்னர்களுக்கு மத்தியில் சூரியனைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தான். அவரவர் வயதுக்கும் இடத்திற்கும் தகுந்த மதிப்பை அளித்துவிட்டு கிருஷ்ணன் பொன்னாலான தன் அரியணையில் அமர்ந்தான்.
அதேவேளையில், சடாமுடியால் முற்றிலும் மறைக்கப்பட்டவரும், கைகளில் வீணையுடன் கூடியவருமான நாரதர் தோன்றினார். நாரதர், அந்த மன்னர்கள் கூடி இருந்த சபையில் நுழைந்து, கிருஷ்ணனிடம், “நீ ஒருவனே தேவர்களுக்கும் ஆச்சரியமானவனாக இருக்கிறாய். இவ்வுலகில் உன்னைப் போன்ற அருளைப் பெற்றவன் எவனுமில்லை” என்றார்.
பலம் வாய்ந்தவனான கிருஷ்ணன் இதனை கேட்டதும், புன்னகை செய்தவாறே, “ஆம், நான் ஆச்சரியமானவன்தான், குறிப்பாகக் கொடைகளின் விஷயத்தில் நல்ல ஊழினைப் பெற்றவன்” என்றான். நாரதர், “கிருஷ்ணா, சரியான மறுமொழியைக் கேட்டவனானேன். நான் இனி செல்கிறேன்” என்றார்.
அந்தக் கூட்டத்தில் இருந்த மன்னர்களால் நாரதரின் புதிர் நிறைந்த சொற்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே அவர்கள், கேசவனிடம், “மாதவா, ’ஆச்சரியம் என்றும், அருள் என்றும்’ நாரதர் சொன்னார், நீயும் ’கொடைகள் {தக்ஷிணைகள்}’ என்று மறுமொழி கூறினாய். கிருஷ்ணா, இந்தத் திவ்யமான மந்திரப் பதங்களை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவற்றின் உண்மை பொருளைக் கேட்க விரும்புகிறோம்” என்றனர்.
அப்போது கிருஷ்ணன், நாரதர் அதை உங்களுக்குச் சொல்வார் என்று சொல்லி, நாரதரிடம் ‘உமது கேள்விக்கும், என் மறுமொழிக்கும் உண்டான உண்மைப் பொருளைக் கேட்க ஆவலாக இருக்கும் இந்த மன்னர்களுக்கு அவற்றை விளக்கிச் சொல்வீராக” என்றான். நாரதர் சொல்லியது;
இந்தக் கிருஷ்ணனது பெருமைகளின் எல்லை நான் புரிந்து கொண்ட அளவில் நீங்கள் அனைவரும் கேட்பீராக. ஒரு காலத்தில், ஒரு நாளைக்கு மூன்று வேளை நீராடுபவர்களின் விருந்தினராக இருந்த நான், இரவு முடிந்து சூரியன் உதித்த போது, தனியாகக் கங்கைக் கரையில் நடந்து கொண்டிருந்தேன். என் வீணையின் வடிவம் போன்றதும், இரண்டு குரோசங்கள் நீளம் கொண்டதுமான ஓர் ஆமையை நான் கண்டேன்.அது நான்கு கால்களுடனும், இரண்டு ஓடுகளுடனும், நீரில் நனைந்தும், பாசிகளால் மறைக்கப்பட்டும் ஒரு மலையைப் போல் பெரிதாக இருந்தது. அதன் தோல் யானையைப் போன்று கடினமானதாக இருந்தது. அப்போது என் கரங்களால் அந்த நீர்விலங்கைத் தீண்டி, “ஆமையே, ஆச்சரியமான உடலைக் கொண்டவனாகவும், வெல்லப்பட முடியாத இரண்டு ஓடுகளைக் கொண்டவனாகவும் இருப்பதால் நற்பேறு பெற்றவனாகவும், பெரியவனாகவும், நான் உன்னைக் கருதுகிறேன். கவலையற்றவனாக நீ நீரில் திரிந்து கொண்டிருக்கிறாய்” என்றேன்.
அந்த ஆமை, இதைக் கேட்டுவிட்டு, “ஓ! முனிவரே, என்னில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? கீழ்நோக்கிப் பாய்பவளும், என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான விலங்குகள் உலவும் இடமாக இருப்பவளுமான இந்தக் கங்கையே அருளப்பட்டவள். இவளை விட ஆச்சரியம் நிறைந்தது வேறென்ன?” என்று சொன்னது.
நான் கங்கையாற்றை அணுகி அவளிடம், “ஆறுகளில் முதன்மை ஆனவளே, முனிவர்கள் பலரின் ஆசிரமங்களைப் பாதுகாத்து, பிறகு பெருங்கடலுக்குச் செல்கிறாய். எனவே நீ அருளப்பட்டவள், உன்னில் ஆச்சரியங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறாய்” என்றேன்”. நாரதரின் முன்பு தோன்றிய கங்கை, “நான் அருளப்பட்டவளும் இல்லை, ஆச்சரியங்களைக் கொண்டவளும் இல்லை. என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான ஆறுகள் பாயும் இடமாக இருப்பவரும், பெரிய ஆச்சரியங்கள் நிறைந்தவருமான பெருங்கடலே {சமுத்ரராஜனே} அருளப்பட்டவர்” என்றாள்.
கங்கையின் சொற்களைக் கேட்டுப் பெருங்கடலிடம் சென்று, “பெருங்கடலே, நீர்நிலைகளின் தலைவா, நீயே இவ்வுலகில் அருளப்பட்டவன், ஆச்சரியங்கள் நிறைந்தவன். உலகத்தோரால் வழிபடப்படுபவர்களும், அவர்களைத் தூய்மைப்படுத்துபவர்களும், நீர் நிறைந்தவர்களுமான ஆறுகள் உன்னிடம் வருகின்றனர்” என்றார். இவ்வாறு சொல்லப்பட்டதும், சமுத்ரராஜன், “இவ்வாறு சொல்லாதீர்; நான் வாழும் இந்தப் பூமியே அருளப்பட்டவள். இந்த அண்டத்தில் பூமியைவிட ஆச்சரியம் நிறைந்தது வேறென்ன?” என்று கேட்டான்.
பெருங்கடலின் சொற்களைக் கேட்ட நான், பூமிப்படுகைக்குச் சென்று அண்டத்தின் சக்தியாக இருக்கும் பிருத்வியிடம், “பெரும் பொறுமை கொண்ட அழகிய பூமியே, உலகங்கள் அனைத்தையும் தாங்குவதால் நீயே இந்த அண்டத்தில் அருளப்பட்டவளும், ஆச்சரியம் நிறைந்தவளாகவும் இருக்கிறாய். உயிரினங்களையும், மனிதர்களையும் தாங்குபவளாகவும், பொறுமையின் பிறப்பிடமாகவும் நீயே இருக்கிறாய். வானுலாவும் தேவர்களின் படைப்பாக நீ இருக்கிறாய்” என்றேன். அவள், “என்னுடைய இந்தப் பொறுமை பிறரைச் சார்ந்திருக்கிறது. என்னைத் தாங்கும் மலைகளே உண்மையில் பெரியவை, அவற்றில்தான் ஆச்சரியங்கள் காணப்படுகின்றன. அவைகளே உலகங்களின் பாலங்களாக இருக்கின்றன” என்றாள்.
இந்தச் சொற்களைக் கேட்டு மலைகளிடம் சென்ற நான், “மலைகளே, நீங்களே பெரியவர்கள், பேராச்சரியங்கள் பலவற்றால் நிறைந்தவர்கள். மேலும் நீங்களே தங்கச் சுரங்கங்களாகவும், விலைமதிப்புமிக்கப் பல ரத்தினங்களின் சுரங்கங்களாகவும் எப்போதும் பூமியில் நீடித்து வாழ்கிறீர்கள்” என்றேன். மலைகள் “நாங்கள் பெரியவர்களல்ல, எங்களிடம் எந்த ஆச்சரியமும் இல்லை. படைப்பாளனான பிரம்மனே பெரியவன், தேவர்களில் ஆச்சரியம் நிறைந்தவன் அவனே” என்றன.
படைப்பாளனான பிரம்மனுடன் இந்தக் கேள்விச் சுழலுக்கு முடிவேற்படும் என்று எண்ணி அவரிடம், “நீரே உலகின் ஆசான். உமக்கு இணையாக வேறு உயிரினம் ஏதும் கிடையாது. அசைவன, அசையாதன இவற்றுடன் கூடிய இந்த அண்டம் உம்மில் இருந்தே தோன்றியது. தேவர்களும், மூவுலகங்களின் பிற படைப்புகளும், வெளிப்பட்டவையும், வெளிப்படாதவையுமான அனைத்தும் உம்மில் இருந்தே தோன்றின. தேவர்களின் நித்திய மன்னர் நீரே. உலகங்கள் அனைத்தின் தோற்றமாக நீர் இருப்பதில் ஆச்சரியமென்ன” என்று கேட்டேன். என் சொற்களைக் கேட்ட பிரம்மன், “நாரதா, நீ ஏன் என்னைப் பெரியவனாகவும், ஆச்சரியம் நிறைந்தவனாகவும் சொல்கிறாய்?உலகங்களைத் தாங்கும் வேதங்களே பெரியவை, ஆச்சரியம் நிறைந்தவை. ரிக், சாம, யஜூர், அதர்வணங்களில் கிடக்கும் உண்மைகளாக என்னை அறிவாயாக. வேதங்கள் என்னைத் தாங்குகின்றன, நானும் அவற்றைத் தாங்குகிறேன்” என்றார்.
பெரும்பாட்டனின் சொற்களின்படி, மந்திரங்களால் வழிபடப்படும் நான்கு வேதங்களின் அருகில் சென்று அவற்றிடம், “வேதங்களே, நீங்களே பெரியவர்கள், ஆச்சரியம் நிறைந்தவர்கள், பிராமணர்களின் பிறப்பிடமாக இருக்கிறீர்கள் எனப் பெரும்பாட்டன் சொல்கிறார். ஸ்ருதியிலும், தபங்களிலும் உங்களில் மேம்பட்டவை எவையுமில்லை. எனவே அதை நான் உங்களிடம் கேட்பதற்காக வந்திருக்கிறேன்” என்றேன். அப்போது தலை கவிழ்ந்த வேதங்கள் என்னிடம், “பரமாத்மாவுக்காகச் செய்யப்படும் வேள்விகளே பெரியவை, ஆச்சரியம் நிறைந்தவை. வேள்விகளுக்காகவே நாங்கள் படைக்கப்பட்டோம். நாங்கள் எங்கள் வசப்பட்டவர்களல்ல. எனவே, வேள்விகளே எங்களை ஆள்கின்றன” என்றன.
நெருப்பால் தலைமை தாங்கப்படும் யக்ஞங்களிடம் சென்று, “யக்ஞங்களே, பெரும்பாட்டனாலும், வேதங்களாலும் சொல்லப்பட்டதைப் போல நான் உங்களிடம் பேரொளியைக் காண்கிறேன். உங்களைவிட ஆச்சரியம் நிறைந்தவை இவ்வுலகில் வேறேதும் இல்லை. வேள்விக் காணிக்கைகளின் ஒரு பகுதியை தேவர்களுக்கும், வேள்வி மந்திரங்களை பெரும் முனிவர்களுக்கும், வேள்வியின் ஆகுதிகளை அக்னிகளுக்கும் உங்களால் நிறைவு அடையச் செய்கின்றீர்கள்” என்றேன். யக்ஞங்களும், “முனிவரே, எங்களின் மத்தியில் ஆச்சரியமோ, பெரியது என்று சொல்லவோ ஏதும் இல்லை. விஷ்ணு மட்டுமே பேராச்சர்யம் வாய்ந்தவன். அவனே எங்கள் பரம புகலிடமாக இருக்கிறான். தாமரைக் கண்ணனான விஷ்ணு, மனிதர்களாக வெளிப்பட்டு, நாங்கள் உண்பதற்கான ஆகுதிகளை நெருப்பில் காணிக்கையளிக்கிறான். பெருங்கரங்களைக் கொண்டவனும், செந்தாமரைகளைப் போன்ற கண்களைக் கொண்டவனும், மனைவியுடன் கூடியவனுமான அந்த விஷ்ணுவே பெரியவன், கொடைகளுடன் கூடிய ஒரு யக்ஞமும் அவனைப் போலப் பெரியதே” என்று மறுமொழி கூறின.
அதன்பிறகு விஷ்ணுவின் நடமாட்டத்தை உறுதி செய்து கொள்வதற்காகப் பூமிக்கு இறங்கி வந்து தகுந்தவர்களான உங்களைப் போன்ற மன்னர்களால் சூழப்பட்ட கிருஷ்ணனைக் கண்டேன். நான், “நீயே பெரியவனும், ஆச்சரியம் நிறைந்தவனும் ஆவாய்” என்றேன். அவனும், “கொடைகளுடன் சேர்த்து {தக்ஷிணையுடன் கூடிய நான்}” என்று மறுமொழி கூறினான். இது என் சொற்களுக்கு ஒரு முடிவைக் கொண்டு வந்திருக்கிறது. வேள்விகள் அனைத்தின் கதியாக இருப்பவன் குணங்களுடன் கூடிய விஷ்ணுவே ஆவான். ஆமை சொன்னவை தொடங்கிச் சொற்களை வரிசையாகப் பின்தொடர்ந்தே நான் இங்கே வந்தேன். அவை தக்ஷிணையுடன் கூடிய இந்தப் புருஷனை சரியாகக் காட்டின என்று சொல்லி நாரதர் தேவலோகத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இங்கு முதலில் சொல்லப்பட்ட ஆமையானது அவனது அவதாரம் ஆகையால், இவன் சொன்னதாகவே எடுத்துக் கொள்ளலாம். நடுவே சொன்னவை, ஒன்றுக்குஒன்று அதிகமாகச் சொன்னதும் அவனது மஹாத்மியமே. ஆக எல்லாமே அவன் சொன்னதாக சொல்கிறார் .
- முதலில் கங்காஜலத்துக்குள் ஆமையாயும்,
- அந்த ஆமை முதலிய ஜந்துக்களுக்கு இருப்பிடமான கங்கையாயும்,
- அந்த கங்கை முதலிய நதிகளுக்குப் புகலிடமான ஆழ்ந்த கடலாயும்,
- அந்த கடலுக்கு இருப்பிடமான பூமியாயும்,
- அந்த பூமிக்கு ஆதாரமான பெரிய மலைகளாயும்,
- அந்த மலைகளைப் படைத்த சதுர்முகனாயும், (பிரமனாகவும்),
- அந்த சதுர்முகனுக்குத் தாரகமான நான்கு வேதங்களாயும்,
- அந்த வேதங்ககளுக்குப் பராமாணமான யாகங்களாகவும்,
- அந்த யாகங்களுக்கு விர்யத்தைக் கொடுக்கவல்ல தக்ஷிணையாகவும்,
- அந்த தக்ஷிணை மூலமாக அனைவர்க்கும் அவரவர்கள் விரும்பின பலத்தைக் கொடுக்கவல்ல அஸாதாரண விக்ரஹ விசிஷ்டனாகவும்,
- ப்ரஹ்ம பாவனையில் நிஷ்ட்டையாகிற க்ஷேமத்தையுடைய ஸ்ரீநாரத பகவான் பலகாலும் எழுந்தருளி ஸ்தோத்திரம் பண்ணி வணங்கும்படி பள்ளி கொண்டு அருள்பவனாகவும்
இருந்து ஆச்சரிய பட வைத்து, அதே சமயம் மிகவும் அருளப்பட்டவனாகவும் இருந்ததை சொல்கிறார்.
நாரதனுக்குச் சேமம் உடைமையாவது, கர்மபாவனையில் விருப்பம் உற்று இருத்தலைத் தவிர்த்து, ப்ரஹ்ம பாவனையில் நிஷ்ட்டை பெற்று இருப்பது. சென்று சென்று துதித்து என்றது, ஆமை முதல் இறுதி வரை சென்று சென்று துதித்ததை சொல்கிறது. கீழோடும் மேலோடும் சென்று அனுபவித்து துதித்ததை சொல்கிறது . சென்று சென்று என்று சொல்வதால் பலமுறை சென்று சேவித்ததை சொல்கிறது . ‘இணையில்லா இன்னிசை யாழ் கெழுமி இன்பத் தும்புருவும் நாரதனும் இறைஞ்சி யேத்த‘(பெருமாள் திருமொழி 1.5) என்று குலசேகராழ்வாரும், ‘தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ‘ (திருப்பள்ளியெழுச்சி 8) என்று தொண்டரடிபொடிஆழ்வாரும் பாடியது போல், பலகாலும் வந்து இந்த ஸ்தலத்தில் சேவிப்பது சொல்லிற்று. துதிப்பது என்பது, வீணையுடன் சந்நிதிக்கு வந்து, பாடல்கள் மூலமாக ஸ்தோத்திரம் செய்தல் என்கிறார் . இறைஞ்சி என்பது தான் சேஷனாகவும் அவன் சேஷியாகவும் இருப்பதற்கு தகுந்த அநுகுணமாக ஸ்தோத்திரங்கள் சொல்லி அவனது திருவடிகளில் பிரணாமாதிகளைச் செய்தல் .
கிடந்தான் கோயில் என்பது திருமாலை(23) யில் தொண்டரடிபொடி ஆழ்வார் கூறிய கிடந்ததோர் கிடக்கை ஆகும். ஸ்ரீ நாரதபகவான் சேவிக்கும்படியாகவும், ருசி உடையோர்க்கெல்லாம் கண்டு ஆச்சர்யப்படுவதற்கும் அனுபவிப்பதற்கும் காரணமாக தான் கிடக்கின்ற அழகால் வரும் மினுக்கும் தோற்ற கண் வளர்ந்து அருளின தேசம் என்கிறார் .
நின்ற எம்பெருமானுடைய கோயிலாவது அன்னம் முதலிய பறவைக்கூட்டங்கள் நீர்ப்பூ முதலிய பூக்களில் பொருந்தி இருந்து, தங்கள் சாதிக்குத் தலைவனான பெரிய திருவடியினுடைய கீர்த்தியை பேச பெற்றதும், நீர்வளத்தையுடையதுமான திருவரங்க நகரம் என்கிறார்.
Leave a comment