தன்னடியார் திறத்தகத்துத் தாமரையாளாகிலும் சிதகுரைக்குமேல், * என்னடியார் அது செய்யார், செய்தாரேல் நன்று செய்தாரென்பர் போலும், * மன்னுடைய விபீடணற்காய் மதிள் இலங்கைத் திசை நோக்கி மலர் கண் வைத்த *என்னுடைய திருவரங்கற் கன்றியும் மற்றொருவர்க்கு ஆளாவாரே.
பெரியாழ்வார் திருமொழி 4.9.2
புருஷகார பூதையான பெரியபிராட்டியாரே குறை சொல்வது போல் சொல்லிப்பார்த்தாலும் அவளை மறுதளித்து அவனுடைய அடியவர்களை காக்கும் பெரிய பெருமாளுடைய குணத்தை அருளிச் செய்து, அப்படிப்பட்டவருக்கு இல்லாமல் மற்றொருவருக்கு ஆளாவாரோ என்கிறார்.
புருஷகார பூதையான பிராட்டியாரே ஆகிலும் தமக்கு (எம்பெருமானுக்கு) அடிமைப்பட்டவர்கள் விஷயத்திலே, அவர்கள் குற்றங்களை கணக்கிட்டுச் சொல்லத் தொடங்கினால் ‘என் அடியார்கள் பேர் சொல்லவும் கூட கூச வேண்டும்படியான அக்குற்றங்களை செய்ய மாட்டார்கள்’ (பொறுப்பதற்கு எம்பெருமான் உண்டு என்னும் நினைவாலே, அப்படி செய்தாலும்) செய்தார்களே ஆனாலும் அவை எனக்கு போக்கியங்களே என்றபடி அவளோடு மறு தழைத்து வாய் திறந்து சொல்லுமவராய் செல்வம் மாறாத ஸ்ரீ விபீஷணாழ்வானுக்காக மதிலை உடைய இலங்கை திசை நோக்கி குளிர்ந்த கண்களும் தானுமாய் பள்ளி கொண்டு அருளும் என்னுடைய ஸ்வாமியான பெரியபெருமாளை ஒழிய வேறு ஒருவருக்கு அடிமை செய்வாரோ என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
பிராட்டியே சிதகுரைத்தாலும், ‘குணத்தை தோஷமாக பிரமித்தாயோ’ என்று அவன் அடியவர்கள் பக்கம் இருந்த பாரபக்ஷத்தை காட்டும் பாசுரம். அடியார் என்பது ஸ்வாதந்திரிய நிவர்த்தி (தன்னை நம்பவுதை விட்டவர்கள்) என்றும், தன் அடியார் என்று சொல்வதால் (அந்ய சேஷத்வ நிவிர்த்தி ) தன்னை தவிர மற்றவர்களிடம் அடிமை படாதவர்கள் என்றும் சொல்கிறார் . சேஷியும், உபாயமும் , உபேயமும் தானாகவே இருப்பவர் அடியவர்கள் என்கிறார். இவர்கள் ‘திருநாரணன் தொண்டர்கள் ‘, மற்றவர்கள் ‘பலசதுப்பேதிமார்கள்’. (திருமாலை 42) (பழுதிலா வொழுகலாற்றுப் பலசதுப்பேதிமார்கள் இழி குலத்தவர்களேலும் எம் அடியார்களாகில்’).
“நீரிலே நெருப்புக் கிளருமாப் போலே குளிர்ந்த திருவுள்ளத்தில், அபராதத்தாலே சீற்றம் பிறந்தால், பொறுப்பது இவளுக்காக; அடியவர்கள் செய்த பிழைகளைக் கணக்கிட்டு, அதற்கு தக்கவாறு தண்டனை கொடுப்பதற்கு, சீற்றம் கொண்டு இருக்கும் எம்பெருமானிடம், ‘இவ்வுலகில் பிழை செய்தார் யார்?” என்பது போல சில வார்த்தைகளை பேசி மயக்கி, அந்த குற்றவாளிகளை வாழ்விக்க வல்லவள் மகாலக்ஷ்மி / பிராட்டி. சரணாகதிக்கு முன்பு அவள் அடியவர்களுக்காக மன்றாடுவாள் ; சரணாகதிக்கு பின் அவன் அடியவர்களுக்காக மன்றாடுவான். நாம் நெஞ்சால் பொறுத்து இவளுக்கு முகம் கொடுத்து கேட்கவில்லை என்றால், இவள் மேலும் சிதகுரைப்பாள் என்று இவளிடம் வாய் திறந்து அருளிச் செய்வான்.
விபீஷ்ண சரணாகதிக்கு முன், குற்றம் உண்டு என்ற மஹாராஜாவையும் (சுக்ரீவன்), குற்றம் இல்லை என்று சொன்ன திருவடி (ஹநுமான்) மற்றும் இளையபெருமாள் (லக்ஷ்மணன்) இவர்களை சொன்னதை முன்னுரையாகக் கொண்டு, ‘குற்றம் உண்டு, நான் கை கொள்ளக் கடவேன்’ என்று சொன்னவர் ஆயிற்றே. சிதகுரைக்கும் என்றது மஹாராஜர் கோஷ்டி. என்னடியார் அது செய்யார் என்றது திருவடி இளையபெருமாள் கோஷ்டி. சிதகுரைக்கை புருஷகார விஷயம், ‘அடியார் அது செய்யார்’ என்பது சரணாகத விஷயம். ‘நன்று செய்தார்’என்பது சரண்ய விஷயம் .
மகாலட்சுமி, அத்தனை ஜீவாத்மாக்களுடைய சரணாகதிகளையும் பெருமாளிடம் பரிந்துரை செய்கிறாள். அவள், சரணாகதி அடைந்தவர்களை, மகாவிஷ்ணு எப்படி தொடர்ந்து கைவிடாமல் காத்துக் கொண்டு இருக்கிறான் என்பதை நம் போன்றவர்களுக்கு தெரியப்படுத்த, இந்த ஒரு குறிப்பு.
ராமாயணம் முடிந்த பிறகு, ஸ்ரீமன் நாராயணனும் ஸ்ரீ மகாலட்சுமி பிராட்டியும், பரமபதத்தில் (ஸ்ரீ வைகுண்டம்) பேசிக்கொண்டு இருக்கிறார்கள். பிராட்டி, ‘நீங்கள் ஏன், ஸ்ரீரங்கத்தில் தெற்கு நோக்கி பள்ளிகொண்டு இருக்கிறீர்கள்’ என்று கேட்க, பெருமாளும், ‘நம் பிள்ளை விபிஷணன் அரசாண்டு வருகிற இலங்கைக்கு அருள் புரியவே அப்படி சயனித்துள்ளேன்’ என்கிறார். விபிஷணன், ராமாயணத்தில் ஸ்ரீ சீதாதேவியை வஞ்சகமாக தூக்கி சென்ற இராவணனின் சகோதரன், நல்லவன் என்கிறார்.
பிராட்டி, மேலும் விஷ்ணுவை சோதிக்க எண்ணி, தான் அசோக வனத்தில் இருந்த போது, விபிஷணன் பிராட்டியை பற்றி சொன்ன சொற்களை நினைவு கூறுகிறாள். பிராட்டி தரிசனம் வேண்டி, கோடானுகோடி தேவர்களும், பிரமன், ருத்ரன், இந்திரன் போன்றவர்களும் கூட காத்துக் கொண்டு இருக்கும் போது, விபிஷணன் தன்னை துர்சகுனமாக குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி, ‘விபிஷ்ணனை தொடர்ந்து ரட்சிக்க வேண்டுமா’ என்று வினவுகிறாள்.
விபிஷணன், இராவணனிடத்தில், சீதா பிராட்டியை விட்டு விடும் படி கூற, அதற்கு இராவணன் மறுக்க, விபிஷ்ணனும் இந்த சீதாபிராட்டி இலங்கை வந்ததில் இருந்து நாட்டிற்கு பல அபசகுணங்களாகவே நிகழ்வதாகவும், அதனால் தான் சீதா பிராட்டியை மீண்டும் இராமன் இருக்கும் இடத்திலே கொண்டு விடும் படியும் சொன்னான். இராவணன் அப்படி என்ன அபசகுணங்கள் என்று வினவ, விபிஷணன், அசோகவனத்தில் மரங்கள் துவம்சம் செய்யப்பட்டதையும் இலங்கை முழுவதும் தீப்பற்றி எரிந்ததையும் உதாரணங்களாக சொன்னான். அப்படியும் ராவணன் கேட்கவில்லை, தன் சகோதரனை விட்டு பிரிந்த விபிஷ்ணன் ஸ்ரீ ராமனிடம் சரணாகதி அடைந்தது ஒரு சரித்திரம்.
மகாவிஷ்ணு, பிராட்டியிடம், ‘விபிஷணன் அப்படி சொல்லி இருக்க மாட்டான், அப்படி சொல்லி இருந்தாலும், ஆனால் அது நன்மை செய்வதற்கே இருக்கும். அப்படி சொன்னாலாவது, இராவணன் பிராட்டியை, பெருமாளுடன் சேர்த்து விடுவான் என்ற நம்பிக்கையில் இருக்கும்’ என்றார். பிராட்டி இதை கேட்டு ரசித்து, இவன் அச்சுதனே, இவனை அடைந்தவர்களை என்றும் கை விட்டு விட மாட்டான் என்று சொல்லி பெருமை கொள்கிறாள்.
இதில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஒன்று, அந்த ஜீவாத்மாகளை ஏற்றுக்கொண்ட பிறகு அவன், பிராட்டியே சொன்னாலும் கைவிடுவதில்லை என்பதை தெளிவாக அறிந்துகொள்ள வேண்டும்.
மலர்க்கண் என்பதை அமலானாதிபிரானில் திருப்பாணாழ்வார் அருளிய ‘கரியவாகி புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட பெரியவாய கண்கள்’ என்பதை நினைவில் கொள்ளலாம் . அதே திருப்பாணாழ்வார் அருளிய ”மற்றோன்றினை காணா’ என்பதை மற்றொருவர்க்கு ஆளாவாரே என்பதுடன் ஒப்பு நோக்கலாம் . திருமாலை (37)ல் கூறியபடி ‘திருவரங்கங் கத்துள் ளோங்கும் ஒளியுளார் தாமே யன்றே தந்தையும் தாயு மாவார்‘ என்பதையும் இங்கு குறிப்பிடலாம்.
Leave a comment