வல்லெயிற்றுக் கேழலுமாய் வாளெயிற்றுச் சீயமுமாய், * எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் இடந்தான் ஊர், * எல்லியம் போது இருஞ் சிறை வண்டு எம்பெருமான் குணம் பாடி, * மல்லிகை வெண் சங்கு ஊதும் மதிள் அரங்கம் என்பதுவே.
பெரியாழ்வார் திருமொழி 4.8.8
பெரிய சிறகை உடைய வண்டானது அந்திப் பொழுதினிலே ஸர்வ ஸ்வாமியான பெரிய பெருமாளுடைய திவ்ய குணங்களை மிக்க அன்போடு பாடிக்கொண்டு மல்லிகைப் பூவாகிற வெண்மையான சங்கினை ஓதுகின்ற மதிலை உடைய திருஅரங்கம் என்பது ; வலிதான எயிற்றை உடைய வராகமுமாய், ஒளியுடைய பற்களைக் கொண்ட (நர ) சிம்ஹமுமாய் எல்லை இல்லாத பூமியையும் ஹிரண்ஸுரனையும் திரு எயிற்றாலும் திரு உகிராலும் அடர்த்தவன் வர்த்திக்கின்ற தேசம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
ஹிரண்யாக்ஷரணையும், ஹிரண்யனையும் கொன்று அழித்ததை கூறுவது முதலில் கூறுகிறார்.
வல்லெயிற்றுக் கேழலுமாய் என்று சொல்லியபோது, எயிருக்கு வன்மையானது , ‘அப்பன் ஊன்றி இடந்து எயிற்றில் கொண்ட நாளே ‘ (திருவாய்மொழி 7.4.3), என்பதை நினைவில் கொண்டு , அண்ட பித்தியில் ஒட்டிய பூமியை மறுபாடு உருவக் குத்தி, இடந்து எடுத்து தன் பக்கம் வைத்துக் கொள்ள தக்க வேண்டிய பலத்தைச் சொல்கிறது . கேழல் ஆக வேண்டியது, ஏன் என்றால், பிரளய காலத்தை நினைவில் கொண்டு பூமியை எடுக்கும்போது, தண்ணீரும் சேறும் கடக்க இரண்டுக்கும் ஒத்துப்போகும் வர்க்கம் வராஹம் என்பதால் ஆகும். ஆய் என்றது அந்த அவதாரத்தில் உள்ள பற்று . ராக்ஷஸ வாசனை இருக்கும் இடம் என்று முகர்ந்து பார்க்கும் வர்க்கம் என்கிறார். தன்னினம் என்று மற்ற பன்றிகள் பார்க்கும்படி இருந்தான் என்கிறார். மனுஷ்ய வர்க்கத்தில் அவதரித்த போது, ஈஸ்வர அபிமானத்துடன் இருப்பது கந்தம் அன்று, மனித வாசனையுடன் இருக்க வேண்டும் என்கிறார் . பெரியாழ்வாரின் திருமகளார் ஆண்டாளும் , ‘மானமில்லா பன்றியாம் (நாச்சியார் திருமொழி 11.8) என்று சொன்னார் . இங்கு மானமில்லாமை, ‘ஈஸ்வர்த் அபிமானம் மறந்தும் இல்லாமல் இருப்பது’.
வாள் எயிற்றுச் சீயமாய்(நரசிங்கமாய்), ஒளியை உடைய எயிறுகளை கொண்ட சிங்கமாய் என்கிறார் . வாள் எயிறு என்பது நரஸிம்ஹத்தின் அழகுக்கு உறுப்பு ஆனாதால் பற்றி “வாளெயிற்றுச் சீயம்” என்றார். அலைத்த பேழ்வாய் வாளெயிற்றோர் கோளரியாய்’‘ (பெரிய திருமொழி 1.7.2) என்று சொன்னதும், ஏய்ந்தபேழ்வாய் வாளெயிற்றுக்கு ஓர் கோளரியாய், (பெரிய திருமொழி 1.7.3) என்று சொன்னதும் , இந்த அவதாரம் பற்றி சொல்லும் போது எயிறு அழகுடன் சேர்த்தே சொல்லப்படுகிறது. சீயம் என்பது சிங்கம், தேவாதி, நான்கு வித வர்ணங்களாம் அழிக்கப்படவல்லேன் என்ற வரத்தினை உண்மையாக்கும் பொருட்டு எடுத்து அழித்த அவதாரம் ஆகும். சிங்கம் கேவலம் என்றாலும் நரசிம்மம் என்பது அர்த்த சுவை அதிகம் உள்ளதாகும். இப்படி ஒன்றுக்கு ஒன்று சேராத இரண்டு வடிவையும் சேர்த்து எடுத்தது சக்கரையும் பாலும் ஒன்று சேர்ந்து ஒன்றுக்கு ஒன்று அதிக சுவை கொடுப்பத்தைப் போல அடியவர்களுக்கு மிக விரும்பிய போக்கியம் ஆக இருக்கிறான் என்கிறார் . ‘அழகியான் தானே அரி உருவம் தானே‘ (நான்முகன் திருவந்தாதி, 3.2) என்று திருமழிசையாழ்வார் சொன்னது போல அழகியதாய் தோன்றுகிறது. அங்காந்த வாயும், மொறாந்த முகமும் , நா மடிகொண்ட உதடும் , குத்த முறுக்கின கையும், அதிர்ந்த அட்டகாசமாக இருக்கிற இருப்பும் தான் இவருக்கு அழகாக இருக்கிறது . அடியவர்களுடைய விரோதிகளை அழிப்பதற்கு உண்டான வடிவம் ஆனதால் , அந்த வடிவும் அதற்குண்டான செய்கைகளும் பகவத் குண ஞானம் உடையவர்களுக்கு அழகாக தோன்றுகிறது.
எல்லை இல்லாத் தரணியையும் அவுணனையும் என்று சொன்னது, எல்லை இல்லாத பரப்பை உடைய உலகத்தையும் , எல்லை இல்லாத தவங்கள் செய்த ஹிரண்யாசுரனையும் சொல்கிறது. தரணிக்கு எல்லை இல்லாமையானது, கடல்களும் தீவுகளும் போலன்றி, எல்லாம் தன்னுள்ளே இருக்கும்படியான மிகுந்த பரப்பளவு கொண்டதாக இருப்பதை சொல்கிறது.
அதே போல ஹிரண்யனும் எல்லையில்லாத அளவு வரங்களும் அவை கிடைக்க அவன் செய்த எல்லையில்லாத தவங்களும் ஆகும். ஒவ்வொரு வரமும் அவதி காண முடியாதபடி இருப்பதாகும். ‘பொன்னன் பைம் பூண் நெஞ்சு இடந்து குருதி உக‘ என்று பெரிய திருமொழி 3.4.4ல் சொல்லியபடி, இரணியாசுரனுடைய அழகிய ஆபரணங்கள் அணிந்துள்ள, தேவர்களின் வர பலத்தால் பூண் கட்டி இருந்த மார்வை, பிளந்து ரத்தம் பீறிப்புறப்படும் படி நகங்களையே வேலாயுதமாகக் கொண்டு உள்ளவன் என்கிறார். இவ்வைய மூடு பெருநீரில் மும்மை பெரிதே, (பெரிய திருமொழி 11.4.4) என்று சொல்கிறபடி, பிரளயப் பெருவெள்ளத்திற் காட்டில் மும்மடங்கு பெரிதாயிருந்த ரத்த மடு வரும்படி திரு நகத்தால் இரு பிளவாகும்படி செய்தான்.
ஆக ஹிரண்யாக்ஷ்கனால் பூமிபிராட்டிக்கும் , ஹிரண்யனால் பக்த பிரகலாதனுக்கும் வந்த இடர்களை இரண்டு அவதாரங்களால் களைந்த வரலாறு சொல்லப்பட்டது . அறுகால் வரிவண்டுகள் ஆயிரநாமம் சொல்லி சிறுகாலைப் பாடும் (பெரியாழ்வார் திருமொழி 4.2.8) என்றார் திருமாலிரிஞ்சோலை பற்றி பாடும்போது. இங்கே எல்லியம் போதில் பகவத் குணங்களை பாடுவதைச் சொல்கிறார். இதனால், திவ்ய தேசங்களில் உள்ள வண்டுகள் காலத்துக்கேற்ப பகவத் குணங்களை பாடுவதை கூறுகிறார்.
ஸாயங்கால புஷ்பமான மல்லிகைப் பூ, வெளுத்த நிறத்தை உடையதாய் சங்கைப் போன்று இருப்பதால், வெண் சங்கை ஊதுவது போல் உள்ளது என்கிறார். அப்படிபட்ட வெள்ளை நிற மதிள் உள்ள திருவரங்கம் என்கிறார்.
Leave a comment