கீழுலகில் அசுரர்களைக் கிழங்கிருந்து கிளராமே, * ஆழி விடுத்து அவருடைய கருவழித்த வழிப்பனூர், * தாழை மடலூடு உரிஞ்சித் தவள வண்ணப் பொடி அணிந்து, * யாழினிசை வண்டினங்கள் ஆளம் வைக்கும் அரங்கமே.
பெரியாழ்வார் திருமொழி 4.8.6
வீணையின் ஓசை போன்ற இனிய இசையை உடைய வண்டுகள் கூட்டங்கள் ஆனவை மலரத் தொடங்குகின்ற தாழம்பூவின் மடலின் உள்ளே உடம்பை உரசிக்கொண்டு (அதனால் உண்டான) வெளுத்த நிறத்தை பொடியை உடம்பு எங்கும் பூசிக்கொண்டு அந்தக் களிப்பால் ‘தெனா தெனா ‘ என்று நின்றுள்ள அரங்கம் என்னும் நகரமானது, பாதாள உலகத்தில் உள்ள அசுரர்களை முற்றிலும் எழுத்து வர முடியாதபடி திருஆழியானைக் கொண்டு அவர்களை கரு அளவில் முடித்த சத்துருக்களை அழிப்பவன் வசிக்கும் தேசம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை .
பாம்புகளானவை புற்றுக்களில் கிடந்து வஸிப்பதுபோல, அசுரர்களும் பாதாள உலகத்தில் சுகமாக கிடந்து, சில காலங்களில் அங்கு இருந்து தேவர்களை எதிர்த்து போர் செய்வார்கள்; அப்போது எம்பெருமான் தேவர்களுக்குத் துணையாய் நின்று, அசுரர்களை அழித்து, அருள் புரிவான். இவ்வாறு அசுரர்கள் பல காலம் போர் புரிய வருவதையும், அப்போது, ஒவ்வொரு முறையும், தான் அவர்களை ஒழிக்க வேண்டியதையும் எண்ணி, அந்த அசுரர்களை முற்றும் களைய வேண்டும் என்று திருவுள்ளம் பற்றி, தனது திருவாழியைச் செலுத்தி, அப்படியே நிறைவேற்றிக் கொண்டான் என்பது முன் அடிகளின் கருத்து.
‘சக்கரத்தன் கருதுமிடம் பொருது‘ (திருவாய்மொழி 10.6.8) என்று சொல்வது போல் திருவாழியானை ஏவிவிட்டது இங்கு சொல்லப்பட்டது .
செவிக்கினிய ஸ்வரத்தையுடைய வண்டுகள் திரள்திரளாகக்கூடி, தாழை மடலினுள் வருந்திப் புகுந்து அங்குப் புரண்டு அதிலுள்ள வெண்ணிற மடல்களை தம் உடலில் அணிந்து கொண்டு, தென, தென என்று பாடுவதை பின் அடிகள் கூறுகின்றன.
Leave a comment