திவ்ய பிரபந்தம்

Home

4.8.5 பெரு வரங்களவை பற்றி

பெரியாழ்வார் திருமொழி 4.8.5

இராவண வதம் செய்து இந்த உலகத்தை ரக்ஷித்தவன் வசிக்கின்ற தேசம் இந்த திருவரங்கம் என்கிறார்.

குருகுகளானவை அரும்பி செல்லவும், கோங்குகளானவை அலர்ந்து செல்லவும், குயில்களானவை களித்து கூவும்படியாகவும் குளிர்ந்த சோலைகளால் சூழப்பட்ட திருவரங்கம் என்பது, பெரிய பிரம்மாதிகள் கொடுத்த வரங்களானவற்றை தனக்கு பலமாகக் கொண்டு தேவர்கள் ரிஷிகள் முதலியவர்களிடத்து பிழை செய்வதையே இயல்பாகக் கொண்ட இராவணனின் ரூபமானது சின்னம் பின்னமாகும் படி போர் செய்து பிரம்மாஸ்த்திரத்தாலே பிராணனை அழித்து இந்த உலகத்தை காத்தவனாய் என்னுடைய திருமால் விரும்பி சேரும் இடமான இந்த தேசம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

பிரமன் முதலியோரிடத்துப் பெற்ற வரங்களினால் தனக்கு எவ்வகையாலும் அழிவு நேராது என்று துணிந்து, நெஞ்சினால் நினைக்கவும் வாயினால் மொழியவும் ஓண்ணாத பற்பல பிழைகளைச் செய்து, உலகத்தை எல்லாம் மிரட்டி திரிந்த இராவணனைக் கொன்று, எல்லோரையும் வாழ்வித்து அருளின எம்பெருமான் எழுந்தருளி இருக்குமிடம், நித்ய வஸந்தமான சோலைகளை உடைய திருவரங்கம் என்பது இந்த பாடலின் கருத்து.  

உருவரங்கப் பொரு தழித்து என்று சொல்வதனால் ஏதோ அகப்படாதவன் கிடைத்தான் என்று வெறுமனே கொல்லாமல், ‘தோள்கள் தலை துணி செய்தான்’ (திருவாய்மொழி 1.6.7) என்கிறபடி தோள்களை வெட்டியும் தலைகளை சிரைத்தும் பொழுது போக்காக நின்று கொல்லும்படியால் அங்கங்கள் சின்னாபின்னமாகும்படி போர் செய்தான் என்பது புலப்படும்.

இவ்வுலகினைக் கண் பெறுத்தானூர் என்று சொல்வதால், விரோதியான இராவணனை அழித்து, அவனால் துன்பப் படுத்தப் பட்ட பிராணிகள் முதல் எல்லாவற்றையும் ரக்ஷிப்பதால், இந்த உலகத்தை காப்பாற்றினான் என்கிறார்.

குருவரும்பக் கோங்கலரக் குயில் கூவும் குளிர் பொழில் சூழ் திருவரங்கம் என்பதுவே என்று சொல்வது, குருவு, குயில், கோங்கு என்று பலவும் ஒன்று சேர்ந்து இருப்பது போல, புராணங்கள், ஆழ்வார்கள் எல்லோரும் ஒருசேர பிரசித்தம் ஆக உள்ள தேசம் திருவரங்கம் என்கிறார்.

என் திருமால் சேர்விடமே என்று சொல்வதால், திருமகளோடு இனிதமர்ந்த பரமபத நாட்டினை விட விரும்பி விடாயர் (தகிக்க முடியாதவர்கள்) மடுவில் சேர்ந்தார் போலே, சேருகின்ற ஸ்தலம் இந்த திருவரங்கம் என்கிறார்.

Leave a comment