திவ்ய பிரபந்தம்

Home

4.8.4 கூன் தொழுத்தை சிதகுரைப்பக்

பெரியாழ்வார் திருமொழி 4.8.4

தேன் மாறாத மலர்களை உடைய சோலைகளாலே சூழப்பட்ட திருஅரங்கம் என்பது, கூனியாகிற அடியாட்டியானவள் திரு அபிஷேக மஹோஸ்தவத்திற்கு அழிவான கடும் சொற்களை சொல்லி, (அதனைக் கொண்டு பெருமாளை (ஸ்ரீ ராமனை) காட்டிற்கு செல்லச் சொன்ன) கொடியவளானவள், கைகேயியின் மூலம் உண்டான கடிய சொல்லை கேட்டு, பெற்ற தாயான ஸ்ரீ கௌஸலையாரையும் இராஜ்யத்தையும் கைவிட்டு காடு அடர்ந்து உள்ள வழியே ஸ்ரீ தண்ட காரண்யத்திற்கு எழுந்தருளி, கண்ட ஜனஸ்தானவாசிகளான ராக்ஷசர்களை கொன்றவன் வாழ்கின்ற தேசம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

கூன் தொழுத்தை சிதகுரைப்பக் கொடியவள் வாய்க் கடிய சொல் என்பதற்கு,ன் அயோத்தியா காண்டம் (7.1) ல் சொல்லியபடி, ‘ஜ்ஞாதிதாஸீ யதோ ஜாதா கைகேய்யாஸ்து ஸஹோஷிதா. ப்ராஸாதஂ சந்த்ரஸங்காஷமாருரோஹ யதரிச்சயா‘, கூனியானவள் திரு அபிஷேக மஹோஸ்தவத்திற்கு அழிவான வழிகளை வார்த்தைகளாக உருவாக்கி, மாளிகை மேல் தளத்தில் இருந்து, மற்ற இடங்களை அலங்காரம் செய்து, மக்கள் மகிழ்ச்சியுடன் கூட்டம் கூட்டமாக செல்வத்தையும் பார்த்து பொறுக்க மாட்டாத கூனி என்கிறார்.

தண்டகாரண்யத்தில் வைஜயந்த என்ற பட்டணத்தில் வஸிப்பவனும் திமித்வஜன் என்று பெயருள்ளவனும் இந்திரனை வென்றவனுமான சம்பராஸுரனை, இந்திரனது வேண்டுகோளின்படி, வெல்வதற்கு கைகேயியுடன் சென்ற தசரதச் சக்கரவர்த்தி, அந்த அசுரனை எதிர்த்துச் செய்த பெரும் போரில், அவனால் மூர்ச்சை அடைந்த பொழுது, சக்கரவர்த்தியை அசுரர்கள் வதை செய்யாதபடி, கைகேயி போர்க் களத்திலிருந்து எடுத்துச் சென்று பாதுகாக்க, மூர்ச்சை தெளிந்தவுடன், தசரதன் தனக்கு கைகேயி செய்த உயிர் உதவிக்காக, அகமகிழ்ந்து, தான் அவளுக்கு, அவள் வேண்டும்  இரண்டு வரங்கள் கொடுப்பதாக, வாக்கு அளிக்க, அவள் அவற்றை பின்பு தனக்கு வேண்டும் பொழுது கேட்டுப் பெற்றுக் கொள்வதாகச் சொல்லியிருந்தாள்; அந்த வரங்களை இப்போது கேள் என்று கூனி கைகேயிடம் சொல்லியது, கொடியவள் வாய்க் கடிய சொல் கேட்தாகும். சத்ய தர்மபரரான தசரதரால் மறக்க முடியாதது ஆகும் என்றும் சொல்கிறாள். அவ்வரங்களில் ஒன்றாக பரதனது பட்டாபிஷேகத்தையும், மற்றொன்றாக இராமபிரானது வன வாஸத்தையும், கேட்கும்படி ஞாபகப்படுத்தி, உபாயம் கூறித் தூண்டின கூனியின் சொற்கள்.

கைகேயி இதனை தயரதனிடம் சொல்ல, அவன் இசையாதிருக்க, அறுபதினாயிரம் வருடங்கள் சத்யதர்மங்களுக்கு கட்டுபட்டு அரசாண்டவன் இப்போது அதனை மீறுவதை பாருங்கள் என்று உரக்க சகல தேவதைகளிடம் அவள் முறையிட, தயரதன் செய்வதறியாது அவள் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டான். கைகேயி சுமந்திரனை அழைத்து இராமனை கூடிவரச் சொல்லி, அவன் வந்தவுடன், ‘உங்கள் ஐயர் நினவினை தான் சொல்வதாகச் சொல்லி, இராமனை கடுக காட்டிற்கு போ’ என்று சொன்னாள்.

அதனைக் கேட்டு ஸ்ரீ ராமன் ‘ஈன்றெடுத்த தாயரையும் இராச்சியமும் ஆங்கொழிய‘ என்று தாயார் கௌசல்யாரையும், தாவரங்கள், விலங்குகள், மற்றும் தன் குணங்களில் ஈடுபட்டு தாம் இல்லாமல் போனால் தரிக்க மாட்டாத இராஜ்ஜியத்தையும் துறந்து சென்றான் என்கிறார்.

இருநிலத்தை வேண்டாதே, விரைந்து வென்றி, மைவாய களிறொழிந்து, தேரொழிந்து, மாவொழிந்து, வனமே மேவி, நெய் வாய வேல் நெடுங்கண் நேரிழையும் இளங்கோவும் பின்பு போக‘ (பெருமாள் திருமொழி 9.2)ல் சொல்லியபடி, பிரட்டியுடனும் இளைய பெருமாளுடனும் (லக்ஷ்மணனும்) கானகம் சென்றதை சொல்கிறார்.

தன்னைக் காட்டுக்கு எழுந்தருளச் சொன்ன கைகேயியின் வேண்டுகோளின்படி ராஜ்யம் முதலியவற்றை எல்லாம்  துறந்து, இராமபிரான் தண்டகராணியத்திற்கு சென்று, அங்கு ஸாதுக்களை நலிந்து திரிந்த அரக்கர்களை அழித்து, அருளியதை கான் தொடுத்த நெறி போகிக் கண்ட கரைக் களைந்தான் என்பதில் சொல்கிறார். ராக்ஷசர்கள் தின்ற உடம்பைக் காட்டி, வந்து நின்ற தண்டகாரண்யவாசிகளான ரிஷிகளுக்காக அவர்களை நித்ய பீடை செய்து வந்த கண்டகராய் ஜனஸ்தான வாசிகளான ராக்ஷசர்களை முடித்து அருளினவன் என்கிறார்.

அப்படிப்பட்டவன் இங்குள்ள அடியவர்களின் விரோதிகளை ஒழிக்க இங்கு நித்ய வாசம் செய்கிறான் என்கிறார்.

தேன் தொடுத்த மலர்ச் சோலைத் திருவரங்கம் என்பதுவே என்பது தேன் மாறாத மலர்களை உடைய சோலை என்றும், வண்டுகள் மாறாமல் படிந்து இருக்கின்ற புஷ்பங்களை உடைய சோலை என்றும், கொம்புகளில் தேன் வைக்கப்பட்டு இருப்பதால் பூ மாறாத சோலை என்றும் இப்படிப்பட்ட சோலைகளை உடைய திருவரங்கம் என்றும் சொல்லி முடிக்கிறார்.

Leave a comment