மருமகன் தன் சந்ததியை உயிர் மீட்டு மைத்துனன்மார், * உருமகத்தே வீழாமே குருமுகமாய்க் காத்தானூர், * திருமுகமாய்ச் செங்கமலம் திருநிறமாய்க் கருங்குவளை, * பொருமுகமாய் நின்றலரும் புனலரங்க மென்பதுவே.
பெரியாழ்வார் திருமொழி 4.8.3
செந்தாமரை மலரானது பெரியபெருமாள் திருமுகத்திற்கு போலியாய், கறுத்த குவளை மலரானது அவருடைய திரு நிறத்திற்கு போலியாய், ஒன்றுக்கொன்று எதிர் முகத்தை உடைத்தாய் கொண்டு அலரும் நீர் வளப்பத்தை உடைய அரங்கம் என்பது; மருமகனான அபிமன்யுவின் புத்திரனாய், கரிக்கட்டையாகக் கிடந்த பரிக்ஷித்தின் சரீரத்தை (தன் திருவடிகளால் ஸ்பர்சித்து), உயிர் பெறும்படி செய்து மைத்துனன்மாரான பாண்டவர்களுடைய சரீரமானது பாரத யுத்தமாகிற நரமேதத்தில் விழுந்து நசித்துப் போகாமல் குருமுகமாய் நின்று (ஹிதோப தேசங்களை செய்து) ரக்ஷித்தவன் வர்த்திகிற தேசம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
பாரதப்போரில், அர்ஜுனன் மகனான அபிமன்யுவின் மனைவியாகிய உத்தரை என்பவருடைய கருவை நோக்கி அசுவத்தாமாவினால் பிரயோகிக்கப்பட்ட அபாண்ட அஸ்திரத்தினால் கருவிலிருந்த சிசு (பரிக்ஷித்) நீராக அழிய, அந்த சிசுவை மீண்டும் உயிர்ப்பித்து தர வேண்டும் என்று அர்ச்சுனன மனைவி ஸுபத்திரை பிரார்த்திக்க, கண்ணன் தனது செந்தாமரை மலர் போன்ற திருவடியினால் அந்த சிசுவை உயிர் பெற செய்தான் என்ற வரலாறு முதலடியில் கூறப்பட்டது.
அபிமந்யு என்பவன் கண்ணனுக்கு உடன் பிறந்தவளான ஸுபத்ரையின் மகனாதலால் மருமகன் என்று ஆனான்.
பஞ்சபாண்டவர்களுக்கு தான் துணையாய் நின்று, கௌரவர்களால் அவர்களுக்கு ஒரு நலிவு நேராதபடி பலவகைகளால், காத்து அருளியது கூறப்பட்டது.
உப ஸேனையிலும், பூமிக்குச் சுமையாக இருப்பவர்களை எல்லாம் ஒழிப்பதற்காக நடத்தப்பட்ட, ‘மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரைப் பிறந்தவனுடைய’ திருவுள்ளத்திற்கு உகப்பான பாரத யுத்தத்தை நர மேத யாகம் என்று கூறுவது ஏற்கும். ‘கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப்போர், எல்லாச் சேனையும் இருநிலத்தவித்த வெந்தாய்‘, திருவாய்மொழி (3.2.3)ல் சொல்லியபடி, கொல்வதற்குக் கருவி இல்லாமல் குதிரையை நடத்துவதற்கான சாட்டையே கருவியாக எதிரிகளை முடித்து பாரதப் போரில் (பூமிக்குச் சுமையாயிருந்த) எல்லாப் படைகளையும் இந்த பெரிய பூமியில் தொலைத்த ஸ்வாமியே என்பது விளங்கும்.
பகவத்கீதை முதலியவற்றால் ஆசார்யனாக இருந்து உபதேசம் செய்ததை “குருமுகமாய்க் காத்தான்” என்கிறார்.
திருவரங்கத்தைச் சூழ்ந்து பெருகும் காவிரி நீரில், பெரியபெருமாளது (திருவரங்கநாதன்) திருமுகம் போன்ற செந்தாமரை மலர்களும், அவரது திருமேனி நிறம் போன்ற கரு நெய்தல் பூக்களும் உள்ள நீர்வளம் என்றும் அவை ஒன்றுக்கு ஒன்று எதிர் முகம் கொண்ட அதிகமான நீர்வளம் கொண்டது என்றும் சொல்கிறார்.
Leave a comment