பிறப்பகத்தே மாண்டொழிந்த பிள்ளைகளை நால்வரையும், * இறைப் பொழுதில் கொணர்ந்து கொடுத்து ஒருப்படித்த உறைப்பனூர், * மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார் வரு விருந்தை அளித்திருப்பார், * சிறப்புடைய மறையவர் வாழ் திருவரங்கம் என்பதுவே.
பெரியாழ்வார் திருமொழி 4.8.2
வேதத்தில் சொல்லியபடி சிறந்த மூன்று அக்னிகளையும் வளர்க்குமவர்களாய், தம் தம் திரு மாளிகைக்கு எழுந்து அருளுகிற அதிதிகளான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆதரித்துக் கொண்டு செல்லும், இவ்வகையான நன்மை உடையவராய், வேத தாத்பரியம் அறிந்து இருக்குபவர்கள் பகவத் அனுபவத்தாலே வாழும் திரு அரங்கம் என்பது ; பிறப்பதற்கு முன்பே மாண்டு போய் விட்ட நான்கு பிள்ளைகளையும் ஒரு நொடிப்பொழுதில் பரமபதத்தில் நாய்ச்சிமார் கைகளில் இருந்து வாங்கி கொண்டு வந்து, தாய் தந்தையார் கையில் கொடுத்து ‘எங்கள் பிள்ளை தான்’ என்று சம்மதி பண்ணுவித்த சக்தியை உடையவன் உறையும் இடம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
‘என்னுடை மனைவி, காதல் மக்களைப் பயத்தலும் காணாள்‘ என்று பெரிய திருமொழி (5.8.8)யிலும், பெற்றவள் உட்பட யார் முகத்திலும் விழிக்கப் பெறாதது சொல்லப்பட்டது.
ஒரு ப்ராஹ்மணனுக்கு முறையே பிறந்த மூன்று பிள்ளைகள், பிறந்தவுடன் பெற்றவள் உட்பட யார் முகத்திலும் விழிக்காதபடி, இந்த இடத்திலே தான் போயிற்று என்று தெரியாமல், காணாமல் போய் விட்டதால், நான்காம் பிள்ளையை ஸ்த்ரீ பிரசவிப்பதற்கு முன் அந்த அந்தணன் கண்ணனிடம் சென்று இந்த ஒரு பிள்ளையையாவது, தேவரீர் பாதுகாத்துத் தந்தருள வேண்டும், என்று ப்ரார்த்திக்க, கண்ணன் அப்படியே செய்கிறேன் என்று சொன்ன பிறகு, ஒரு யாகத்தில் உள்ள கண்ணன் எழுந்தருளக் கூடாது என்றும், அர்ஜுனன் தான் போய் ரக்ஷிக்கிறேன் என்றும் சத்யம் செய்து ப்ராஹ்மணனையும் கூட்டிக் கொண்டு போய் பிரசவ வீட்டினை சுற்றும் காற்று உட்பட எதுவும் ப்ரவேசிக்க முடியாதபடி காத்துக் கொண்டு நிற்கையில், பிறந்த பிள்ளையும் வழக்கப்படி பிறந்தவுடன் காணாமல் போய் விடவே, ப்ராஹ்மணன் அர்ஜுனனை மறித்து, உன்னால் என் பிள்ளை காணாமல் போகும்படி ஆயிற்று; கண்ணன் எழுந்தருளிக் காப்பதை நீ தான் கெடுத்தாய், என்று நிந்தித்து அவனையும் அழைத்துக்கொண்டு கண்ணனிடம் செல்ல, கண்ணன் புன்சிரிப்புக் கொண்டு, அவனை விடு; உமக்குப் பிள்ளையை நான் கொணர்ந்து தருகிறேன், என்றருளிச் செய்து, ப்ராஹ்மணனையும், அர்ஜுனனையும், தன்னுடன் கொண்டு தேரில் ஏறி, இந்த அண்டத்தை தாண்டி நெடுந்தூரம் சென்று, அங்கு ஓரிடத்தில் தேருடனே இவர்களை நிறுத்தி, தேஜோ ரூபமான (ஒளிமயமான) பரமபதத்திலே, தன் நிலமாகையாலே தானே போய், அங்கு கண்ணனுடைய பிள்ளைகள் நால்வரையும் எம்பெருமானின் தேவிமார்கள் பாதுகாத்துக்கொண்டு இருப்பதை பார்த்து, அங்கு இருந்து பூர்வ ரூபத்தில் (பிறந்த போது இருந்தபடி) ஒன்றும் குலையாமல் கொண்டு வந்து கொடுத்தருளின வரலாறு முதல் இரண்டு வரிகளில் சொல்கிறார்.
வேதம் படித்தவர்களும், மூன்று தீ (அக்னி) வளர்ப்பவர்களும், வரும் விருந்தாளிகளான அந்தணர்களை உபசரிப்பதில் சிறந்தவர்களுமான, அந்தணர்கள் வாழும் ஊர் திருவரங்கம் ஆகும் என்கிறார்.
Leave a comment