மா தவத்தோன் புத்திரன் போய் மறி கடல் வாய் மாண்டானை, * ஓதுவித்த தக்கணையா உருவுருவே கொடுத்தானூர், * தோதவத்தித் தூய் மறையோர் துறை படியத் துளும்பி எங்கும், * போதில் வைத்த தேன் சொரியும் புனல் அரங்கம் என்பதுவே.
கண்ணனின் திருஅவதார காலத்தில் இருந்தே அவனுடைய திருக்கல்யாண குணநலன்களை அனுபவித்த ஆழ்வார், பின்பு இராம கிருஷ்ண அவதாரங்களுடன், மற்ற அவதாரங்களையும் அனுபவித்து பின்னர் அவன் உகந்து அருளின திவ்ய தேசங்களான திருமாலரிஞ்சோலை, திருக்கோட்டியூர் போன்றவற்றை அனுபவித்தார்.
சம்சாரிகளை விட முடியாத ஆழ்வார் அவருடைய பரம கிருபையாலே, அவர்களை திருத்தி உய்விக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலே, சென்ற இரண்டு பதிகங்களில் அவர்களுக்கு இனிமையான வார்த்தைகளை சொன்னார். அதனை செய்த பிறகு, திருமாலரின்சோலை, திருக்கோட்டியூர் என்று எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களை முன்பு அனுபவித்ததை போல, மேலும் வடமதுரை, ஸாளக்ராமம் போன்ற சில திவ்ய தேசங்களை அனுபவிக்க ஆசைகொண்டு, எம்பெருமான் உலகம் அளந்தபோது, தன்னுடைய திருவடிகளின் ஏற்றத்தாலே, எப்போதும் கரை புரண்டு ஓடுகின்ற, கங்கை நதியின் கரையில் உள்ள கண்டம் என்னும் கடி நகர் என்று சொல்லபடுகின்ற (தேவபிரயாகை) திருத்தலத்தில் அநேக அவதாரங்கள் பிரகாசமாக விளங்கும்படி, புருஷோத்தமன் என்ற திருநாமம் உடையவனான திவ்ய தேச எம்பெருமானையும், கங்கையின் பெருமைகளையும், திவ்ய தேசத்தின் பெருமைகளையும் சேர்த்து, சென்ற பதிகத்தில் பாடினார்.
இந்த திவ்ய தேசங்கள் போல் இல்லாமல், ‘வடிவுடை வானவர் தலைவனே’ என்றும், ‘கடலிடம் கொண்ட கடல்வண்ணா’ என்றும், ‘கட்கிலி’ என்றும், ‘காகுத்தா, கண்ணனே’ என்றும் சொல்லும்படியான பரத்துவ குணங்கள் எல்லாம் பிரகாசிக்கும்படியாக இருக்கும் திவ்ய தேசமான, ‘பொங்கோதம் சூழ்ந்த புவனியும்’, என்கிறபடியும், இந்த பூமியை இங்கே இருந்தே நிர்வாகின்றது போல தோன்றும், ‘மாலரிஞ்சோலை, மணாளர் பள்ளிகொள்ளும் இடம்’ என்றும், ‘ஆராமம் சூழ்ந்த அரங்கம்’ என்கிறபடியும், அவன் உகந்து அருளின நிலங்கள் எல்லாம் ‘பகல் இருக்கை’ போல என்றும், அடியவர்களை காப்பதற்கு ஏகாந்தமான இடம் என்று எப்போதும் வாசம் செய்கின்ற திருவரங்கம் திவ்ய தேசத்திலே வாசம் செய்கின்ற, ‘வன் பெரு வானகம் உய்ய’ என்று சொல்வதைப் போல, எல்லா உலகில் உள்ளவர்களும் உஜ்ஜீவிக்கின்றதாகவும், ‘தென் நாடும் வட நாடும் தொழ நின்ற’ என்று எல்லோரும் அனுபவித்து வணங்குகின்றதாகவும், ‘அன்போடு தென்திசை நோக்கி’, ராம கிருஷ்ண மற்றும் எல்லா அவதாரங்களும் பிரகாசிக்கும்படி, திருவுள்ளத்தில் உகப்புடன் கண் வளர்ந்து இருக்கின்ற இந்த திருவரங்கம் திருப்பதியை இந்த பதிகத்தில் ஆழ்வார் அனுபவித்து பாடுகிறார்.
பெரியாழ்வார் திருமொழி 4.8.1
பரிசுத்தமாய் தோய்த்து உலர்த்தின வஸ்த்ரங்களை உடுத்துமவராய், தூயதான அல்லது குற்றமற்றதான வேதத்தையே தங்களுக்கு நிரூபகமாக உடைய ஸ்ரீ வைஷ்ணவர்கள், காவிரியில் திருமுகத்துறை முதலிய துறைகளிலே திரள் திரளாக நீராட (அதனால்) எங்கும் அலை எறிந்து (பூக்களின் நாளங்களை அலைக்க) அந்தப் பூக்களில் வைத்த தேனானது சொரியும்படியான புனலை உடைய ‘திருவரங்கம்’ என்னும் திருநாமத்தை உடைய திவ்ய நகரமானது – திரைமறிகிற கடலிடத்திலே புகுந்து முதலை வாயில் அகப்பட்டு மாண்டவனான, மிக்க தவத்தினை உடைய ஸாந்தீபிணியின் பிள்ளையை, (ஸாந்தீபிநி) தன்னை அத்யயநம் பண்ணுவித்ததுக்கு தக்ஷணையாக அந்த புத்திரன் இறந்த போதில் இருந்த வடிவின்படியே கொண்டு வந்து கொடுத்தவன் நித்ய வாசம் பண்ணுகிற தேசம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கண்ணபிரான் ஸாந்தீபிணி என்னும் உத்தம குருவிடம் ஸகல சாஸ்திரங்களையும் கற்றுகொண்ட போது, குரு தக்ஷிணை கொடுக்க வேண்டிய சமயத்தில், அந்த குருவும், இவனுடைய அதிமாநுஷ (மனிதர்கள் செய்ய முடியாத காரியங்களை செய்யும்) சேஷ்டிதங்களை அறிந்தவர் ஆகையாலே, ‘பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு இந்தியாவின் வடமேற்கு கரையில் உள்ள ஒரு தீர்த்தக் கட்டத்தில் கடலில் முழ்கி இறந்து போன தன்னுடைய புத்திரனைக் கொண்டு வந்து தர வேண்டும்’ என்று கேட்க, ‘அப்படியே செய்கிறேன்’ என்று, அந்த புத்திரனைக் கொண்டு போன சங்கின் உருவம் தரித்துச் சமுத்திரத்தில் வாஸம் செய்கின்ற பஞ்சஜகன் என்ற அஸுரனைக் கொன்று, யம பட்டணத்துக்கு எழுந்தருளி, அங்கு கிடந்த அந்த குமாரனைப் பூர்வ தேஹத்தில் ஒன்றும் மாறுதல் இல்லாமல் கொடுத்தருளிய வரலாறு முதல் அடிகளில் சொல்லப்பட்டது. இது பெரிய திருமொழி (5.8.7)ல் ‘காதல் என் மகன் புகலிடங் காணேன், கண்டு நீ தருவாய் எனக்கு என்று‘ சொல்லியதிலும் விளங்கும்.
துறை படிய என்பது காவிரியின் புனிதத்துவத்தை சொல்கிறது. இதுவே திருமாலை(23)ல் ‘கங்கையில் புனிதமான காவிரி‘ என்று சொல்லப்படுகிறது.
கங்கையில் புனிதமாய காவிரியில் பெரியபெருமாளுடைய(திருவரங்கன்) திருக்கண் நோக்கான திருமுகத் துறை முதலான பலதுறைகளில் ஆசாரம் குறையாத வைதிக ஸ்ரீவைஷ்ணவர்கள் திரள் திரளாக வந்து நீராட அதனால் காவிரி முழுவதும் அலைமோதப் பெற்று, அந்த அலைகளினால் தாமரை மலர்களின் நாளங்கள் அலைக்கப்பட, அதனால் அந்த பூக்களில் இருந்து தேன் பெருக, அத்துடன் சொந்த தீர்த்தத்தையும் உடைய திருவரங்கம் என்று பெருமை தோற்ற கூறுகிறார்.
Leave a comment