மூன்றெழுத்து அதனை, மூன்றெழுத்து அதனால், மூன்றெழுத்தாக்கி, மூன்றெழுத்தை, * ஏன்று கொண்டிருப்பார்க்கு, இரக்கம் நன்குடைய எம் புருடோத்தமன் இருக்கை, * மூன்றடி நிமிர்த்து, மூன்றினில் தோன்றி, மூன்றினில் மூன்று உருவானான், * கான் தடம் பொழில் சூழ் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.10
விஷ்ணு, மகாலக்ஷ்மி நித்ய வாசம் செய்யும் பரமபதம் என்னும் ஸ்ரீவைகுந்தத்தை அடைவதே தமக்கு உபாயம், அதுவே ஜீவாத்மாவின் கடன் என்று எண்ணி முக்தியை ஏற்றுக் கொண்டு இருப்பவர்களிடம் இரக்கமுடைய எமது புருடோத்தமன், கங்கைக் கரைமேல் அமைந்துள்ள கண்டமென்னும் கடிநகரில் எழுந்து அருளி உள்ளான் என்பது பத்தாவது பாடலுக்கான ஒரு சிறிய விளக்கம்.
நறுமணம் கொண்டுள்ள பெரிய சோலைகளால் சூழப் பட்டு உள்ள கங்கையின் கரை மேல் உள்ள கண்டம் எனும் கடி நகர் : திருமந்திரத்தை மூன்று பதமாக வளர்த்து, அந்த மூன்று பதத்திலும் ஆகாரத்ரயத்தையும் (அநன்யார்க சேஷத்வம், அநன்ய சரணத்வம், அநன்ய போக்கியத்வம்) தோற்றுவித்து, அடியவர்களின் ஆகாரத்ரயத்திற்கு பிரதி சம்பந்தியாக, சேஷித்வ, சரணத்வ, பிராப்யத்வம் ஆகிற ஆகாரத்ரயத்தையும் உடையவனாய் அகார, உகார, மகாரங்களாகிற மூன்று எழுத்துக்களை, ‘நிருக்தம்’ என்னும் பெயர் உடைய மூன்று எழுத்துக்களால் , மூன்று எழுத்துக்கு வாசகமாயிருக்கும் மூன்று எழுத்தாகப் பிரிந்து, அம்மூன்று எழுத்தையும் ‘நமக்கு தஞ்சம்’ என்று தங்கள் நெஞ்சிலே தரிப்பவர்களுக்கு தன் பேறாகச் செய்யும் தயையை உடைய, எமக்கு ஸ்வாமியான புருஷோத்தமனுக்கு வாசஸ்தலம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மூன்றெழுத்து அதனை – அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று எழுத்துக்களை
மூன்றெழுத்து அதனால் – நிருக்தம் என்பது வடமொழியில் மூன்று எழுத்துக்களாலான ஒரு சொல். அது வேத அங்கங்களான, சிக்ஷை (எழுத்திலக்கணம்), வியாகரணம் (சொல் இலக்கணம்), நிருக்தம் (நிகண்டு), கல்பம் (கர்மாநுஷ்டான முறை), சந்தஸ் (பா இலக்கணம்), ஜ்யோதிஷம் (சோதிடம்) என்ற ஆறு பகுதிகளில் ஒன்று, இந்த நிருக்திகிரமத்தினால் என்பது, மூன்று எழுத்து அதனால், என்பதற்கு விளக்கமாக சொல்லபடுகிறது.
மூன்றெழுத்தாக்கி – ஓம் என்று ஒரு பிரணவ மந்திரத்தை அகார, உகார, மகார மூன்று எழுத்துக்களாக்கி, அதற்கு மூன்று விசேஷ அர்த்தங்களை அருளி செய்து
மூன்றெழுத்தை – அந்த மூன்று எழுத்துக்களையும்
ஏன்று கொண்டிருப்பார்க்கு – தங்களுக்கு தஞ்சம் என்று ஏற்றுக் கொண்டு இருப்பவர்களுக்கு
மூன்றடி நிமிர்த்து – மூன்று வார்த்தைகளாலான திருமந்திரத்தை, மூன்று பதமான இந்த பிரணவத்தில் (ஒம்) இருந்து வளர்த்து, அல்லது இந்த ஓம் என்ற வார்த்தையைத் தான் மூன்று பதமாகிய திருமந்திரத்தில் முக்கிய / முதல் வார்த்தையாக வைத்து வளர்த்தது
மூன்றினில் தோன்றி – ஜீவாத்மாவினுடைய மூன்று தத்துவங்களை உணர்த்தும் மூன்று பதங்களாகிய அநந்ய சேஷத்வம் (எம்பெருமான் ஒருவனுக்கே அடிமை செய்தல்), அநந்ய சரணத்வம், (எம்பெருமான் ஒருவனையே புகலாகப் பற்றுதல்), அநந்ய போக்யத்வம் (எம்பெருமான் குணங்களையே அநுபவித்து நாம் அவன் அநுபவத்துக்கே பொருளாயிருத்தல்) என்றவற்றை தோற்றுவித்தது இங்கே கூறப்பட்டது. இந்த மூன்றும் சேர்ந்து ஆகாரத்ரயம் என்றும் சொல்லப்படும்.
மூன்றினில் மூன்று உருவானான் – ஆத்மாக்களின் ஆகாரத்ரயத்ததிற்கு உதவியாக இந்த மூன்று தத்துவங்களை தன்னிடமே கொண்டு இருக்கிறான் என்பதை சொல்கிறது.
எம்பெருமான் தன்னுடைய சங்கல்பத்தினால், அகாரம், உகாரம், மகாரம் என்ற மூன்று எழுத்துக்களை தோற்றுவித்து, அவற்றை சேர்த்து ஓம் என்று ஒரு அக்ஷரமாக்கி, அதனை நிருக்திகிரமத்தினால் மூன்று பதமாக்கி அதற்கு மூன்று அர்த்த விசேஷங்களை அடக்கியது, இங்கு சொல்லப்பட்டது. இந்த மூன்று எழுத்தையுமே தமக்குத் தஞ்சமாக நினைத்து இருப்பவருக்கு பரமகிருபையைச் செய்து அருள்பவனும், அந்த ப்ரணவத்தை நம மற்றும் நாராயண பதங்களோடு கூட்டி மூன்று பதமாக வளர்த்து, (திருவஷ்டாக்ஷரமாக்கி) அம்மூன்று பதங்களிலும் ஆத்மாவினுடைய அநந்யார்ஹ சேஷத்துவம், அநந்ய சரணத்வம், அநந்யபோக்யத்வமாகிற மூன்றினையும் ஜீவாத்மாக்களுக்கு தோற்றுவித்து, அவற்றின் பிரதி சம்பந்தியாகிற சேஷித்தவம், சரண்யத்வம், ப்ராப்யத்வம் என்கிற மூன்றினையும் தன்னிடம் கொண்டு எம்பெருமான் எழுந்து அருளி இருக்கும் இடம் கண்டமென்னுங் கடிநகர் ஆகும்.
அழகான நல்ல நறுமணம் கமழும் பொழில் சூழ்ந்த கங்கைக்கரை என்று புகழ்கிறார்.
Leave a comment