வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி, * இடமுடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை * தடவரை அதிரத் தரணி விண்டிடியத் தலைப்பற்றிக் கரை மரம் சாடி, * கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும்கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.9
மந்தரம் முதலான பெரிய மலைகளானவை அதிர, பூமியானது பிளவு பட்டு, இடிந்து விழவும் மரங்களினுடைய தலையளவும் செல்லக் கிளம்பி கரையில் நிற்கிற மரங்களை மோதி முறித்தும் ஒன்றாலும் கலங்காத கடலும் கூட கலங்கும்படி வேகமாய்க் கொண்டு இழிகின்ற கங்கா தீரத்தில் கண்டம் என்னும் கடி நகர்; வடக்கில் உள்ள மதுரையும், சாளக்க்ராமும் வைகுந்தமும் துவாரகையும் அயோத்தியும் இடம் உடைய பத்ரிகாசிரமம் இவற்றை இடமாகக் கொண்டு வசிக்கின்ற எமக்கு ஸ்வாமியான புருஷோத்தமனுடைய இருப்பிடம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
தென் திசை மதுரையில் இருந்து வேறுபட்டு இருக்கும் வடக்கு திசையில் உள்ள மதுரா, நித்ய வாசஸ்தலமான ஸ்ரீவைகுந்தம், புண்ணிய க்ஷேத்திரங்களில் பிரதானமாக கருதப்படும் முக்திநாத், நர நாராயணனர்களாய் தோன்றி திருமந்திரத்தை உபதேசித்து உகப்புடன் எழுந்து அருளி இருக்கும் பத்ரிநாத், பதினாறாயிரவர் தேவிமாராய் (பெரியாழ்வார் திருமொழி 4.1.6) சேவை செய்ய மணவாளராய் வீற்று இருந்த துவாரகா, அயோத்தி நகருக்கு அதிபதி எனும் பெயர் பெற்ற அயோத்தியா, இவற்றையெல்லாம் தன்னுடைய வாசஸ்தலமாக கொண்ட எம்பெருமான் புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டமெனும்கடி நகர் என்கிறார்.
பகிரதன் தவபலத்தாலே வருகின்ற வேகம், உயர்ந்த நிலத்தில் இருந்து பல மலைகளை கடந்து வருகின்ற வேகம், வானத்தில் இருந்து குதிக்கின்ற நீரின் வேகத்தால் பூமி விண்டு இடிந்து விழுங்கின்ற தன்மை, கரைகளில் உள்ள மரங்களை மோதி முறித்து அடித்து செல்கின்ற வேகம், ஒன்றாலும் கலங்காத கடலும் கலங்கும் தன்மை என்று கங்கையின் பெருமைகளைக் குறிப்பிடுகிறார்.
Leave a comment