திரை பொரு கடல் சூழ் திண் மதிள் துவரை வேந்து தன் மைத்துனன் மார்க்காய், * அரசினை அவிய அரசினை அருளும் அரி புருடோத்தமன் அமர்வு, * நிரை நிரையாக நெடியன யூபம் நிரந்தரம் ஒழுக்கு விட்டு இரண்டு * கரை புரை வேள்விப் புகை கமழ் கங்கை கண்டம் என்னும் கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.8
ஒரே ஒரே ஒழுங்காய் நெடியவையாக இருந்துள்ள (பசுக்கள் கட்டப்படுகிற) யூபஸ் தம்பங்களானவை இடைவிடாமல் நெடுகச் சென்று இருப்பதாய் யாக தூபமானது இரண்டு கரையும் ஒத்து, கமழ்கின்ற கங்கைகரையில் கண்டம் என்னும் கடி நகர் ; அலைகளை எரிகின்ற கடலாலே சூழப்பட்ட திண்ணிதான மதிளை உடைய திரு துவாரகைக்கு அரசனான கண்ணன் தன்னுடைய மைத்துனன்களான பாண்டவர்கள் பக்கம் இருந்து துரியோதனன் முதலான அரசர்களை அழித்து, ராஜ்ஜியத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும் பாவங்களை ஒழிப்பவனான புருஷோத்தமன் பொருந்தி வசிக்கும் ஸ்தலம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கடல் சூழ்ந்து திண்மையான மதிளை உடைய துவராகையின் இராஜாவான எம்பெருமான், தன்னையே தங்களுக்கு துணையாகவும், பலமாகவும், காதலாகவும் பற்றிக்கொண்டு உள்ள தன்னுடைய மைத்துனர்களான பாண்டவர்களுக்கு ஒரு தலை பட்சமாக இருந்து, அவர்களிடம் இருந்து சூழ்ச்சி செய்து, சூதில் பறித்துக்கொண்ட இராஜ்யத்தில் பத்து ஊர், ஒரே ஒரு ஊர் என்று எல்லாம் கேட்டு, அவை மறுக்கப்பட்ட பிறகு, துரியோதனன் முதலான கௌரவர்களுக்கு தோல்வியைக்கொடுத்து, ராஜ்ஜியத்தை பாண்டவர்களுக்கு கொடுத்து அருளும், கண்ணபிரான், கண்டமெனும் கடி நகரில் புருஷோத்மனாக சேவை சாதிக்கிறான் என்கிறார். தன்னை பற்றிக் கொள்பவர்களுக்கு சகல பாவங்களையும் போகச் செய்து விடுகிறான் என்பது கருத்து.
பசுக்கள் கட்ட உள்ள ஸ்தம்பங்கள் இடைவிடாமல் இருக்கும் கங்கைக்கரை, வேள்வி அல்லது யாக புகை இரண்டு கரைகளிலும் மணம் கமழ்கின்ற கங்கைக்கரை என்று அடைமொழி கொடுத்து அங்கே இருக்கும் இந்த திவ்யதேசம் என்று பெருமையுடன் கூறுகிறார்.
Leave a comment