விற்பிடித்து இறுத்து வேழத்தை முருக்கி மேலிருந்தவன் தலை சாடி * மற் பொருது எழப் பாய்ந்து அரையன் உதைத்த மால் புருடோத்தமன் வாழ்வு * அற்புதமுடைய அயிராவதம் அதமும் அவர் இளம் படியரொண் சாந்தும் * கற்பக மலரும் கலந்திழி கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.7
யாவரும் ஆச்சரியப்படத்தக்க ‘ஐராவதம்’ என்ற யானையின் மதநீரும், ஸ்வர்க்கவாசிக்களான தேவர்களாலே ஆசைப்படத்தக்கவர்களாய் அந்தப் பதம் உள்ளளவும் இளமைப் பருவம் குலையாத தேவ பெண்களும் அணிந்த சிறந்த சந்தனமும் அவர்கள் குழலில் சொருகிய கற்பகப் பூக்களும் சேர்ந்து இழிகின்ற கங்கையின் கரையில் கண்டம் என்னும் கடிநகர் ; வில்லைப் பிடித்து முறித்தும், குவலயா பீடம் என்கின்ற யானையின் கொம்பை முறித்தும் யானைப் பாகனுடைய தலையை அந்தக் கொம்பாலே சிதற அடித்தும் சாணூர முஷ்டிகரர்கள் ஆகிற மல்லர் உடல்கள் நெரியும்படி போர் செய்தும் (உயர்ந்த கட்டிலில்) இருந்த ராஜாவான கம்ஸனை (மயிரை பிடித்து இழுத்துக் கீழ் தள்ளி) அவன் மேல் குதித்து திருவடிகளால் உதைத்ததும் (இவற்றால் வந்த) பெருமை உடைய புருஷோத்தமனுக்கு அபிமதமான தேசம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
கம்சனின் வில் விழவிற்கு என்று சென்று அந்த ஆயுதசாலையில் கம்சனுக்கு பிடித்த வில்லினை உடைத்து, வேழத்தை முறுக்கி அதன் குவலயாபீடத்தை உடைத்து துவம்சம் செய்து, சாணுர முஷ்டிகரான மல்லர்களின் உடல் நொறுங்கி விழும்படி செய்து பிறகு கம்சனை கீழே பிடித்து தள்ளி தன் திருவடிகளால் உதைத்து கொன்று விட்ட புருஷோத்தமனுக்கு உகந்த தேசம் இந்த கண்டமெனும்கடி நகர் என்கிறார்.
விற்பிடித்து இறுத்து வேழத்தை முருக்கி என்றதில் உள்ள யானையானது, பெரிய திருமொழி (6.5.6)ல் சொல்லிய ‘புகுவாய் நின்ற போதகம்” ஆகும்.
ஐராவதத்தின் மத ஜலமும், சொர்க்கத்தில், என்றும் இளமை குறையாத தேவ மகளிர் அணிந்த சாந்தும், கற்பக மலரும் எல்லாம் சேர்ந்து ஓடி வருகின்ற கங்கை என்று இந்த பாசுரத்தில் கங்கையின் பெருமைகளை சொல்கிறார்.
Leave a comment