தலைப் பெய்து குமுறிச் சலம் பொதி மேகம் சல சல பொழிந்திடக் கண்டு, * மலைப் பெருங் குடையால் மறைத்தவன் மதுரை மால் புருடோத்தமன் வாழ்வு, * அலைப்புடைத் திரைவாய் அருந்தவ முனிவர் அவபிரதம் குடைந்தாட * கலப்பைகள் கொழிக்கும் கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.6
கரைகளில் அலைகள் வந்து அடித்து அரிய தவங்களை உடையவனாய் மனன சீலர்களாய் இருக்கும் முனிவர்கள், அவப்ருதஸ்நானம் பண்ணி, அதனால் யாக பூமிகளில் உள்ள கலப்பை முதலிய கருவிகள் எல்லாம் தள்ளிக் கொண்டு போகின்ற கங்கையின் கரை மேல் கண்டம் என்னும் கடிநகர்; கடல் நீரை பொதிந்து கொண்டு இருக்கின்ற மேகங்களானவை (திருவாய்பாடியில்) வந்து இடித்து முழக்கி சலசல என்று பொழிந்திட கண்டு, கோவர்தன கிரி ஆகிற பெரிய கூடையாலே ஒருவன் மேல் ஒரு துளி விழாதபடி மறைத்தவனாய் ஸ்ரீ மதுரையில் ஆசை கொண்ட புருஷோத்தமன் உறைவிடம் ஆகும் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
இந்திரனின் ஏவல்படி, சமுத்திரம் அளவு தண்ணீரை ஏந்திக் கொண்டு மேகங்கள், திருவாய்ப்பாடியில் வந்து, கேட்டவர்கள் குடல் குழம்பும்படி இடித்து சப்தம் செய்து, சலசலவென்று குடத்தில் இருந்து ஒரேடியாக நீர் கொட்டுவது போல் தொடர்ந்து ஏழு நாட்கள் பெருமழையாக பெய்து கொண்டு இருக்க, மேகங்களின் பகைமையையும் திருவாய்ப்பாடியில் உள்ளவர்களின் எளிமையும் கண்டு, அவர்கள் மேல் ஒரு மழைத்துளி, ஒரு கல், ஒரு இடி இவை எதுவும் விழாமல், ஒரு குன்றினை குடையாகப் பிடித்து தான் அவதரித்த தேசமான மதுராவில், கம்சனை கொன்று, தாய் தந்தையரை விடுவித்து, அங்குள்ளோரையும் நன்றாக வாழ வழி செய்த எம்பெருமான், புருஷோத்தமன் என்ற திருநாமத்துடன் கண்டமெனும் கடி நகரில் வாசம் செய்கிறான் என்கிறார்.
பல யாகங்களை செய்த மேன்மையான முனிவர்கள், அலை அடித்துக் கொண்டு இருக்கும் கங்கையில் ஸ்நானம் செய்யும் போது, யாகம் நடக்கும் இடத்தில் இருக்கும் கலப்பை போன்ற உபகரணங்களை ஆற்றில் தள்ளிக்கொண்டு போகும் கங்கை என்று கூறுகிறார்.
Leave a comment