அதிர் முகம் உடைய வலம்புரி குமிழ்த்தி அழல் உமிழ் ஆழி கொண்டு * எறிந்து அங்கு எதிர் முகம் அசுரர் தலைகளை இடறும் எம் புருடோத்தமன் இருக்கை, * சதுமுகன் கையில் சதுப் புயன் தாளில் சங்கரன் சடையினில் தங்கி, * கதிர் முக மணி கொண்டு இழி புனல் கங்கைக் கண்டமென்னும் கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.3
(திருவடி விளக்குகிற போது) பிரம்மாவினுடைய கையிலும் சதுர் புஜனான த்ரிவிக்ரமனுடைய திருவடிகளிலும் (பின்பு) ருத்ரனுடைய ஜடையிலும் தங்கி ஒளியை உடைய சிறந்து இருந்து உள்ள ரத்தினங்களை கொழித்து இழிகிற ஜலத்தை உடைய கங்கையின் கரையில் உள்ள கண்டம் ஏனும் கடிநகர் அதிர்கின்ற முகத்தை உடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை திருப்பவளத்தில் வைத்து ஊதியும் நெருப்பை உமிழ்கின்ற திருவாழியைக் கொண்டு எறிந்ததும் அவ்விடத்திலே எதிர்த்த முகத்தை உடைய அசுரர்களுடைய தலைகளை உருட்டிய நம்முடைய புருடோத்தமனுக்கு இது வாசஸ்தானம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
த்ரிவிக்ரம அவதாரத்தின் போது எம்பெருமான், பாஞ்சசன்யமாகிய சங்கினை தன்னுடைய திருவதரங்களில் வைத்து ஒலி எழுப்பி, தீயை பொழிகின்ற சக்கரத்தை இன்னோரு திருக்கரத்தில் ஏந்தியபடி நமுசி முதலிய அசுரர்களின் தலைகளை உருட்டி ஏறிந்தவனாகவும் நம்போன்ற பக்தர்களை காப்பவனாகவும் இருக்கின்ற நம் புருஷோத்தமன் உறையும் இடம் இந்த திவ்யதேசம் என்கிறார்.
எம்பெருமானின் திருவடிகளை சுத்தம் செய்யும், பிரம்மனின் கைகளிலும், பிறகு சிவபெருமானின் சிரசிலும் பட்ட நீரானது வரும் வழியில் ஒளி தரும் இரத்தினங்களை சிதறியபடி ஓடும் கங்கையின் கரையில் உள்ள கடிநகர் என்கிறார்.
Leave a comment