சலம் பொதி உடம்பின் தழல் உமிழ் பேழ் வாய்ச் சந்திரன் வெங்கதிர் அஞ்ச, * மலர்ந் தெழுந்த அணவி மணிவண்ண உருவின் மால் புருடோத்தமன் வாழ்வு * நலம் திகழ் சடையான் முடிக் கொன்றை மலரும் நாரணன் பாதத் துழாயும் * கலந்திழி புனலால் புகர் படு கங்கைக் கண்டம் என்னும் கடி நகரே.
பெரியாழ்வார் திருமொழி 4.7.2
கங்கையை முடியில் தரிப்பதால் வந்த நன்மை விளங்குகிற ஜடையை தரித்துள்ள ருத்ரன் தலையில் அணிந்த (சிவந்த நிறம் உடைய) கொன்றைப் பூவோடும் அவனுக்கு சேஷியான நாராயணனுடைய திருவடிகளில் புனைந்த (பசுமை நிறம்உடைய) திருத் துழாயோடும் கலந்து ஆகாசத்தில் நின்றும் கீழ் வரை நின்றுள்ள ஜலத்தாலே ஒளிவிட்டு நின்றுள்ள கங்கை கரையில் உள்ள கண்டம் எனும் கடி நகர் என்ற திவ்ய தேசம். ஜலத்தை பொதிந்து கொண்டு இருக்கிற வடிவைஉடைய சந்திரனும் நெருப்பை உமிழும் பெரிய கிரணங்களை உடையவனாய் வெப்பத்தை இயல்பாக உடைய சூரியனும் அஞ்சும்படியாக மலர்ந்து கிளர்ந்து அவர்கள் இருப்பிடத்தை சென்று அடைந்த நீல ரத்னம் போன்ற நிறத்தை உடைய வடிவை உடையவனாய் ஆசை அதிகம் உள்ள புருஷோத்தமனுக்கு உகந்து வாழும் இடம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மலர்ந் தெழுந்த என்பது ‘எண்டிசையும் பேர்த்த கரம் நான்குடையான்‘ (இரண்டாம் திருவந்தாதி, 14) என்று சொல்லியபடி (உலகளந்த காலத்தில்) எட்டுத் திக்குக்களையும் பேர்த்துப் போடும்படி விம்மி வளர்ந்த நான்கு திருத்தோள்களையுடையனான பெருமான், எல்லா திசைகளிலும் வளர்ந்து சூரிய சந்திரர்கள் இருப்பிடம் சென்று அடைந்தான். ‘ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப‘ திருநெடுந்தாண்டகம் (5) சொல்லியபடி கீழ் மிதித்த திருவடியினால் பூமி முதல் கீழ் உள்ள உலகங்கள் எல்லாம் அளந்து, மேல் எடுத்த திருவடியினால் மேல் உலகங்கள் எல்லாவற்றையும் பெறாத பேறு பெற்றதைப் போல, பதறி அளந்து அதிக மோகம் கொண்டவன் என்கிறார்.
த்ரிவிக்ரம அவதாரத்தின் போது எம்பெருமான் வளர்ந்த வேகத்தைப் பார்த்த சந்திரன் சூரியன் அஞ்சியபடியேயும், நீல நிறத்தில் ஒரு திருவடியால் பூமி முதலான கீழ் உலகங்கள் எல்லாவற்றையும் அளந்து, இன்னொரு திருவடியால் மேலுலகங்கள் அனைத்தையும் அளந்து, தானே எல்லா உலகங்களுக்கும் சேஷி (எஜமான்) என்றபடியேயும் காட்டிய புருஷோத்தமன் இருக்கும் இடம் கண்டம் எனும் கடி நகர் என்ற இந்த திவ்யதேசம் என்கிறார்.
எம்பெருமானின் திருவடிகளில் திருத்துழாயும் அவன் திருவடிகளை கழுவிய தீர்த்தத்தை தலையில் தரித்துக் கொண்டு சிவபெருமானின் சிரஸில் இருந்த கொன்றை மலர்களும் கலந்து வானில் இருந்து பூமிக்கு வரும் கங்கை நதியின் கரையில் உள்ள கண்டமெனும்கடி நகர் என்கிறார்.
Leave a comment