திவ்ய பிரபந்தம்

Home

4.7.1 தங்கையை

சம்சாரிகளை விட முடியாத ஆழ்வார் அவருடைய பரம கருபையாலே, அவர்களை திருத்தி உய்விக்க வேண்டும் என்ற எண்ணத்தினாலே, சென்ற இரண்டு பதிகங்களில் அவர்களுக்கு இனிமையான வார்த்தைகளை சொன்னார்.

அதனை செய்த பிறகு, முன்பு, திருமாலரிஞ்சோலை, திருக்கோட்டியூர் என்று எம்பெருமான் உகந்து அருளின திவ்ய தேசங்களை அனுபவித்ததை போல, மேலும் வடமதுரை, ஸாளக்ராமம் போன்ற சில திவ்ய தேசங்களை அனுபவிக்க ஆசைகொண்டு, எம்பெருமான் உலகம் அளந்தபோது, தன்னுடைய திருவடிகளின் ஏற்றத்தாலே, எப்போதும் கரை புரண்டு ஓடுகின்ற, கங்கை நதியின் கரையில் உள்ள கண்டம் என்னும் கடி நகர் என்று சொல்லபடுகின்ற (தேவபிரயாகை) திருத்தலத்தில் அநேக அவதாரங்கள் பிரகாசமாக விளங்கும் படி, புருஷோத்தமன் என்ற திருநாமம் உடையவனான திவ்ய தேச எம்பெருமானையும், திவ்ய தேசத்தின் பெருமைகளையும் சேர்த்து இந்த பதிகத்தில் பாடுகிறார்.

பெரியாழ்வார் திருமொழி 4.7.1

(உலகத்தார் நீராடும் தீர்த்தங்களை, கங்கை என்று சொல்லி ஸ்நானம் செய்வார்களானால்), கங்கை கங்கை என்ற சப்தத்தினால், அவர்களுடைய கொடுமையான பாவங்களை கழிக்க வல்ல கங்கா தீரத்தில் அடியவர்கள் கைகூப்பி தொழும்படி நின்ற ‘கண்டம்’ என்கிற சிறப்பை உடைய நகரமானது இராவணன் தங்கையான சூர்ப்பணகையின் மூக்கையும் அவள் தமையனான இராவணனுடைய தலையையும் அறுத்துப் போட்ட நம்முடைய சக்கரவர்த்தி திருமகன் திரு அயோத்தியில் எழுந்தருளி எல்லா இடத்திலும் தன் கீர்த்தியையே பதினோராயிரம் வருடங்களுக்கு ராஜ்யம் நிர்வகித்து அருளின நம்முடைய புருஷோத்தமன் வாசம் செய்யும் இடம் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.

நம் சக்கரவர்த்தி திருமகன், (ஸ்ரீராமன்) அயோத்தியில் எழுந்தருளி, எல்லா இடங்களிலும் தன்னுடைய கீர்த்தி விளங்கும்படி பத்தாயிரம் ஆண்டுகள் அரசாண்ட நம் புருஷோத்தமனுக்கு அமைவிடம் இந்த திருத்தலம்.

சர்வலோகத்திற்கும் தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் பிராட்டியையும் எம்பெருமானையும் முறையில் விரும்பாமல், முறைகெட விரும்புவர்களுக்கு கிடைக்கும் பலன் இது என்று ஆழ்வார் கூறுகிறார். பிராட்டியை தள்ளி, (உபேக்ஷித்து) எம்பெருமானை விரும்பிய சூர்பனகைக்கு மூக்கு போனது; எம்பெருமானை தள்ளி, பிராட்டியை விபரீதமாக அபகரித்த இராவணனுக்கு உயிரே போனது.

வாளரக்கன் முடியும் தங்கை பொல்லாத மூக்கும் போக்குவித்தான் பொருந்தும் மலை (பெரியாழ்வார் திருமொழி 4.2.2) என்று எம்பெருமானின் இராமாவதார திருக்குணத்தை நின்ற திருக்கோலத்தில் திருமாலரிஞ்சோலை என்ற திவ்ய தேசத்தில் அனுபவித்தவர் இந்த கண்டம் எனும் கடிநகரிலும் நின்ற திருக்கோலத்தில் அனுபவிக்கிறார்.

எம் தாசரதிஎன்று சொன்னது அடியவர்களையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்.  “எம் புருடோத்தமன்” என்று சொன்னது, மனிதனாக திருஅவதாரம் செய்தபோதும், பரத்வத்தை சொல்வதற்காக இங்கு புருஷோத்தமன் என்கிறார். ராமாயணத்தில் இராவண வதத்திற்கு பிறகு பிரம்மாதி தேவர்கள் ‘பவாந் நாராயணோ தேவः ஶ்ரீமாம் ஶ்சக்ராயுதः ப்ரபுः (யுத்த காண்டம் 120.13)’ என்று சொன்னது போல இவர் இங்கு புருடோத்தமன் என்கிறார்.

எம்பெருமானை விட, அவன் இருக்கின்ற திவ்யதேசத்தை இறுதியாக சொல்லி, ஆழ்வார் திவ்ய தேசத்தைக் கொண்டாடுகிறார்.

கங்கை கங்கை என்ற வாசகத்தாலே கடு வினை  களைந்து இடுகிற்கும் கங்கை” என்று சொல்லி, எங்கே ஸ்நானம் செய்யும் போது கங்கை என்று சொல்லி கொண்டால் கூட பாவங்களை போக்கும் சிறப்பு மிக்க கங்கை என்று ஆழ்வார் சொல்கிறார்.

Leave a comment