ஊத்தைக் குழியில் அமுதம் பாய்வது போல் உங்கள், * மூத்திரப் பிள்ளையை என் முகில் வண்ணன் பேரிட்டு, * கோத்துக் குழைத்துக் குணாலை ஆடித் திரிமினோ, * நாத்தகு நாரணன் தம் அன்னை நர கம்புகாள்.
பெரியாழ்வார் திருமொழி 4.6.9
அசுத்தமான குழியில் அமிர்தமானது பாய்ந்தார் போலே, உங்களுடைய பிள்ளைக்கு, எனக்கு கீழ் படிந்தவனாய் மேகம் போன்ற திரு நிறத்தை உடையவனுடைய பெயர் இட்டு சர்வேஸ்வரனோடு கோவையாக கூடி கலந்து களித்து திரியுங்கள்; பிள்ளைக்கு திருநாமத்தை இட்டு அதனை பலகாலும் சொல்லுவது உங்கள் நாவிற்கு தகுந்ததாக இருக்கும் என்கிறார். அப்படி செய்தால் அந்த தாய் தந்தையார் நரகம் புக மாட்டார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
எம்பெருமான் திருநாமத்தை மானிட மக்களுக்கு இடுவது என்பது அசுத்தமாகிய ஒரு எச்சில் குழியில் அம்ருதத்தைப் பாய்ச்சுவதை போல இருக்கும். ஊத்தைக்குழியில் அமுதம் பாய்ந்தால், எல்லாம் மொத்தமாய் அசுத்தமாய் இனிமை இல்லாததாய் ஒழிந்து போகும். ஆனால் எம்பெருமானுடைய திருநாமமோ என்றால், அப்படி இல்லாமல், தனக்கு ஒரு தோஷமும் வராதபடி, தான் புகுந்த இடத்தையும் பரிசுத்தமாக்கி விடும் என்கிறார்.
இப்படி தமது பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை நாமகரணம் பண்ணும்போதே தாம் அந்த பெருமானுக்கு அந்தரங்க அடியவர்கள் ஆவதால், அவனோடு கூடிக் கலந்து களித்துத் திரியப் பெறுவர். குணாலைக் கூத்து என்று சொன்னது, மறுமைக்கு உதவும் தலைகீழாக ஆடும் ஓரு கூத்து. “நாத் தகும்” என்பதற்கு பிள்ளைக்குத் திருநாமத்தை இட்டு அதனை பல காலும் சொல்வது உங்கள் நாவுக்குச் சேரும்’ என்ற பொருளில் வரும். .
Leave a comment