நம்பி பிம்பி என்று நாட்டு மானிடப் பேரிட்டால், * நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம், * செம் பெருந்தாமரைக் கண்ணன் பேரிட்டு அழைத்தக் கால், * நம்பிகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்.
பெரியாழ்வார் திருமொழி 4.6.8
நம்பி என்றும் பிம்பி என்றும் நாட்டில் உண்டான மனிதர்களுடைய பெயர்களை இட்டால் அந்த பெயர்களுக்கு முதன்மை எல்லாம் நான்கு பொழுதில் நசித்துப் போகும். பூர்ணர்களே, சிவந்து பெருத்த தாமரை மலர் போன்ற திருக்கண்களை உடையனுடைய திரு நாமத்தை இட்டு அழைத்தால் அந்த குழந்தையின் தாய் தந்தை நரகம் புக மாட்டார் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
நம்பும் பிம்பும் எல்லாம் நாலு நாளில் அழுங்கிப் போம், என்பது, ‘வாழ்ந்தார்கள் வாழ்ந்தே நிற்பர் என்பதில்லை’ (திருவாய்மொழி 4.1.6)ல் சொல்லியபடி கர்ம நிர்பந்தமாக வந்து பிறந்தபடியால் அழிந்தே போவோம் என்கிறார்.
நம்பி அன்றும் பிம்பி என்றும் சில பெயர்கள் இட்டு தங்கள் குழந்தைகளை அழைத்தால் அந்த சொற்களின் படி பலன் கிடைக்கும் என்று தவறாக நினைப்பவர்களை இங்கே சொல்கிறார். நம்பி என்னும் சொல், ‘குறைவற்றவன்’ என்னும் பொருளை உடையதால், ‘இப்பெயரை நமது பிள்ளைக்கு இட்டால் ஒரு குறைவுமின்றிப் பூர்ணமாக இருப்பான்’ என நினைத்து அப்பெயரை இடுவது தவறு என்கிறார். பிம்பி என்பதற்கு (இங்கு) ஒரு பொருளும் இல்லை. இச்சொல் எப்படி பொருளற்றதோ. அப்படியே தான் நீங்கள் விரும்பி இடுகிற நம்பி, என்கிற சொல்லும் பொருளற்றது என்று சொல்கிறார். உங்கள் பிள்ளைகளுக்கு எம்பெருமான் கண்ணன் திருநாமத்தை இட்டு அழைத்தால் அப்பிள்ளைகளின் தாய் தந்தையர் நரகம் புகார் என்கிறார்.
Leave a comment