மலமுடை யூத்தையில் தோன்றிற்று ஓர் மல வூத்தையை, * மலமுடை யூத்தையின் பேரிட்டால் மறுமைக்கு இல்லை, * குலமுடைக் கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தக்கால், * நலமுடை நாரணன் தம்அன்னை நரகம் புகாள்.
பெரியாழ்வார் திருமொழி 4.6.5
மலம் முதலிய கழிவுகளை கொண்ட சரீரத்தில் தோன்றிய அப்படிப்பட்ட சரீரத்துடன் கூடிய ஒரு மனிதப் பிறவிக்கு, ஏதாவது ஒரு பெயரை இட்டு அழைத்தால், அது மறுமைக்கு உதவாது; எல்லா உயர்வுகளையும் கொண்ட கோவிந்தா கோவிந்தா என்று அழைத்தால் நலம் உடை நாராயணன் அந்த தாய் தந்தையரை நரகம் போக விடமாட்டான் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மாமிஸம் ரத்தம் முதலிய மலங்களோடு கூடிய, மாதா பித்ரு சரீரங்களில் இருந்து தோன்றிய சரீரத்தோடு இருக்கிற ஜந்துவை, மேலே சொன்னபடியே உள்ள சரீரத்தைப் பூண்டு கொண்டிருக்கிற ஒரு ஜந்துவின் பெயரை இட்டு அழைத்தால், இந்த பிறவியில், இந்த உலகத்தில், சில பயன்கள் கிடைத்தாலும் மறுமையில், மேல் உலகத்தில் ஒரு பயனும் இருக்காது. உங்கள் பிள்ளைகளுக்கு எம்பெருமான் திருநாமத்தை இட்டு அழைத்தால் அப்பிள்ளைகளின் தாய் தந்தையர் நரகம் புகார் என்கிறார்.
Leave a comment