அங்கொரு கூறை அரைக்கு உடுப்பதன் ஆசையால், * மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள், * செங்கணெடுமால் சிரீதரா என்று அழைத்தக்கால், * நங்கைகாள் நாரணன் தம் அன்னை நரகம் புகாள்.
பெரியாழ்வார் திருமொழி 4.6.2
செல்வர்களிடத்து ஒரு புடவை பெற்று அரைக்கு உடுக்க வேண்டும் என்ற ஆசையினால் அழிந்து கிடக்கிற மனுஷ்ய பிரிவின் பெயரை இடுகிற குருடர்களே, சொல்லியதை அறியவல்ல மதி படைத்தவர்களே, சிவந்திருக்கும் திருக்கண்களையும் மிக்க ஆசையை உடையவன் என்றும் ஸ்ரீதரனே என்றும் பெயர் இட்டு அழைத்தால் நாராயணன் எண்ணும் பெயரை உடைய அந்த பிள்ளையின் தாய் நரகம் புக மாட்டாள் என்பது இந்த பாடலின் பொழிப்புரை.
மங்கிய மானிட சாதியின் பேரிடும் ஆதர்காள் என்று சொன்னது, ‘ஆன்விடை ஏழு அன்றடர்த்தாற் காளானாரல்லாதார், மானிடவர் அல்லர் என்றே என்மனத்தே வைத்தேனே‘, (பெரிய திருமொழி 11.7.9), அதாவது எம்பெருமானுக்கு ஆட்படாதவர்கள் மனிதனாகப் பிறந்தும், உணர்வின் பயன் பெறாதவர்கள் ஆகையாலே மானிடவரல்லர் என்று திருமங்கை ஆழ்வார் சொன்னது போல ஆகும்.
செங்கணெடுமால் சிரீதரா என்று சொன்னதில், செங்கண் என்றது, வாத்சல்ய பிரகாசமான திருக்கண்களையும், அடியவர்களிடத்தில் மிக்க ஆசையும் உடையவன் என்பது; அதனை தவிர மால் என்றதும் இதில் அடங்கும். ஸ்ரீதரா என்றது, ஐஸ்வர்ய சம்பந்தம். நெடுமால் என்பது மேன்மைக்கு சொல்லபட்டது. நீர்மைக்கும், மேன்மைக்கும் பாலமாக இருப்பது, லக்ஷ்மி சம்பந்தம் என்றும் சுவையாக உரைப்பார்கள்.
Leave a comment